Monday, August 10, 2020

இரண்டு குழந்தைகளைத் தூங்க வைக்க தானாக ஆடும் தொட்டில், குழந்தைக்குத் தாலாட்டும் பாடும், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வீரமணி என்ற இளைஞரின் கண்டுபிடிப்பு.

இரண்டு குழந்தைகளைத் தூங்க வைக்க தானாக ஆடும் தொட்டில், குழந்தைக்குத் தாலாட்டும் பாடும், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வீரமணி என்ற இளைஞரின் கண்டுபிடிப்பு.


அமெரிக்காவில் ஒரு விமானம் கிளம்ப வேண்டிய நேரத்தில் கிளம்பாததால் 149 பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். கூச்சல், கலவரங்களில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டும் வாடகை விமான சர்வீசுக்கு போன் செய்து கட்டணம் பற்றி விசாரித்தார். உடனடியாக விமானத்தை ஏற்பாடு செய்தார். அதை 148 ஆகப் பிரித்து அனைவரிடமும் வசூல் செய்தார்‌. அவரது டிக்கெட் இலவசமானது. அனைத்து பயணிகளும் நேரத்துக்குச் சென்று சேர்ந்தனர். இந்த ஆரம்பப் புள்ளியில் இருந்து துவங்கியது தான் வெர்ஜீனியா விமான சேவை. அது இன்று உலகம் முழுக்க வெற்றிகரமாகப் பரந்து விரிந்திருக்கிறது‌. 148 பேர் பிரச்சினையை மட்டும் பார்த்தார்கள். ஒருவர் அதை தனக்கான வாய்ப்பாகப் பார்த்தார்‌. நீங்களும் அப்படியான பார்வையைக் கொள்ளுங்கள். வெற்றியும் வாழ்க்கையும் உங்கள் வசமாகும்.

மக்களின் பெரிய பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வு தருவதும் நேரத்தை மிச்சப்படுத்துவதுமே இன்றைய கண்டுபிடிப்புகளின் தேவையாக இருக்கிறது. உதாரணத்திற்கு சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் வயதான தந்தை உட்கார்ந்து குளிக்க மிக சிரமப்படுவதை கண்டு மனம் வேதனைப்பட்டதோடு நின்றுவிடாமல் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார். விளைவு குளிக்க வசதியான ஒரு நாற்காலி உருவாக்கப்பட்டது. கைப்பிடி அமைக்கப்பட்ட அந்த நாற்காலியின் நான்கு முனைகளிலும் ஷவர் பைப்புகள் பொருத்தப்பட்டன. எங்கே தேவையோ அங்கே தண்ணீர் பீய்ச்சி அடித்து, வயது முதிர்ந்தோரை குளிப்பாட்டி விடுகிறது.

தேவை ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கி உலகிற்கு வழங்கியிருக்கிறது. ஒரு மனிதரின் பணக்கஷ்டம் நமக்கு இன்று மிகத் தேவையாக அமைந்திருக்கின்ற ஊக்கை கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது.ஆம் 1849-ஆம் ஆண்டு மிகுந்த பண கஷ்டத்தில் இருந்தார் வால்டர் ஹன்ட். ஒருநாள் தன்னுடைய பட்டறையில் அமர்ந்து நண்பரிடம் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அவரது கையில் நீண்ட வயர் ஒன்று சிக்கியது. அதை வைத்து ஏதேதோ உருவங்களைச் செய்வதும் பிரிப்பதுமாக இருந்தார். அதில் அவருக்கு ஏதோ ஒரு யோசனை தோன்றியது. பல்வேறு வடிவங்களைத் தாளில் வரைந்து பார்த்தார். இறுதியில் ஊக்கு வடிவத்தை உருவாக்கினார்.1849, ஏப்ரல் 10 அன்று தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்றார். பிறகு அந்தக் காப்புரிமையை டபுள்யூ.ஆர். கிரேஸ் நிறுவனத்துக்கு விற்று விட்டார். அதில் கிடைத்த பணத்தை நண்பரிடம் கொடுத்து கடனை அடைத்தார்‌. அவர் கண்டுபிடித்த ஊக்கின் வடிவம் தான் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தாய் மடிக்கு இணையானது தாயின் புடவையில் கட்டிய தொட்டில். பசியோடு அழும் குழந்தையைக் கூட தாயின் புடவையில் கட்டிய தொட்டிலில்போட்டு ஆட்டினால், பசி மறந்து தூங்கிவிடும். முன்பு எல்லாம் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து வயல் வேலைகளுக்குச் செல்வார்கள். அப்போது கைக்குழந்தையையும் கொண்டுசென்று, வயல் வரப்பில் நிற்கும் மரத்தில் தனது புடவையைத் தொட்டிலாகக் கட்டி அதில் குழந்தையை படுக்கவைத்துவிடுவார்கள். படுக்க வைத்து ஆட்டி தூங்க வைத்துவிட்டு வயல் வேலைகளை கவனிப்பார்கள். இடையில் குழந்தை பசியால் அழும்போது, சேறும் சகதியுமாக ஓடிவரும் தாய் வாய்க்கால் தண்ணீரில் கைகளை அலம்பிவிட்டு குழந்தையை வாரி எடுத்து பசியைப் போக்கி மறுபடியும் அந்தத் தொட்டிலில் படுக்க வைத்து சிறிது நேரம் தாலாட்டுப் பாடி தூங்க வைத்துவிட்டு தனது வேலையை தொடர்வார்.

காலப்போக்கில்  ‘ஸ்பிரிங்’ தொட்டில்கள் பலவிதங்களில் உருவாகின. ஒருமுறை ஆட்டிவிட்டாலே சிறிது நேரம் அசைந்தாடும் தன்மை கொண்டவையாக அவை இருந்தன. ஆனாலும் அதைக்கூட செய்வதற்குப் பெரும்பாலான இளம்தாய்மார்களுக்கு நேரமில்லை. பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டுவதற்கும், தாலாட்டுப் பாடுவதற்கும் அவர்கள் நேரமின்றி தவிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தாய்மார்களின் தவிப்பைப்போக்க, என்ன செய்யலாம் என்று யோசித்த புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த வீரமணி என்ற இளைஞர் எந்திரத் தொட்டிலை வடிவமைத்துள்ளார். அது குழந்தை படுக்கும் தொட்டிலை இயல்பான வேகத்தில் ஆட்டுவதோடு, குழந்தை தூங்குவதற்காக தாலாட்டும் பாடுகிறது. அதற்காக அவர் எந்திர தொட்டிலில் ஸ்பீக்கர்களையும் பொருத்தி இருக்கிறார். குழந்தை தூங்கியதும் தொட்டிலின் இயக்கத்தை நிறுத்திவிடலாம்.

இந்த நவீன தொட்டிலை வடிவமைக்கும் எண்ணம் வீரமணிக்கு உருவாக என்ன காரணம்? ‘‘என் மனைவி ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார். இரட்டைக் குழந்தைகளைப் பராமரிப்பதில் எங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இரண்டும் ஒரே நேரத்தில் அழும். ஒரு குழந்தையை என் மனைவி தூக்கி பாலூட்டி தூங்க வைப்பதற்குள், அடுத்தது அழும். பின்னர் அதை பசியமர்த்தித் தூங்க வைப்போம். இப்படி சில மாதங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அறுவை சிகிச்சை செய்ததால் என் மனைவியால் சுறுசுறுப்பாக செயல்படமுடியவில்லை. குழந்தைகள் அவ்வப்போது அழுததால் இரவில் விழித்திருந்து தொட்டிலை ஆட்டிக்கொண்டிருக்கவேண்டிய சூழ்நிலை உருவானது.

இப்படி சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் புதுக்கோட்டைக்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தேன். அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. அதனால் பேருந்து கண்ணாடியில் உள்ள தண்ணீரைத் துடைக்க வைப்பரை டிரைவர் இயக்கினார். அதைப் பார்த்ததும், ‘மோட்டாரைப் பயன்படுத்தி அதுபோல் தொட்டிலையும் ஆட்டச்செய்யலாமே!’ என்ற எண்ணம் உருவானது. புதுக்கோட்டையில் இறங்கியதும் முதல் வேலையாக ஒரு பழைய இரும்புக் கடைக்குப் போய் 2 வைப்பர் மோட்டார்களை வாங்கி வந்தேன்.

மோட்டாரைப் பொருத்தி, நண்பர் ஒருவரின் உதவியுடன் இரும்புப் பட்டைகளை வடிவமைத்து வீட்டின் உத்திரத்தில் பொருத்தினேன். அந்த மோட்டாரை இயக்க குறைந்த அளவு மின்சாரம் போதும் என்பதால் எலிமினேட்டர் பொருத்தி மின்விசிறிக்கு பயன்படுத்தும் ரெகுலேட்டர் மூலம் மின் இணைப்பை மோட்டாருக்குக் கொடுத்து இயக்கிப் பார்த்தேன். எனது முயற்சிக்கு பலன் கிடைத்தது. தேவையான அளவில் ரெகுலேட்டர் மூலம் வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் செய்யலாம்.

அந்த எந்திரத் தொட்டிலில் குழந்தைகளை தூங்கவைத்ததால், தொட்டிலை ஆட்டவேண்டிய வேலை இல்லாமல் போனது. குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடலும் அவசியம் என்பதால், மோட்டாருக்கு அருகில் ஸ்பீக்கர்களை பொருத்தி சி.டி.பிளேயர் மூலம் தாலாட்டு மற்றும் மெல்லிசைப் பாடல்களை இதமாக இசைக்கச் செய்தேன். அதன்பிறகுதான் தொட்டிலில் படுத்துக்கொண்டு தாலாட்டை கேட்டபடி தூங்கும் வாய்ப்பு எனது இரு குழந்தைகளுக்கும் கிடைத்தது. என் மனைவிக்கும் சுமை குறைந்தது. தொட்டிலுக்கு என் மனைவியின் புடவையை பயன்படுத்தினேன். தற்போது என் குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் அந்த எந்திர வடிவமைப்பை என் நண்பர்களுக்கு கொடுத்து உதவிவருகிறேன். கடந்த 6 ஆண்டுகளில், 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள்’’ என்கிறார், வீரமணி.

இளைஞர்களே கவனித்தீர்களா? இப்படித்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சொந்தத் தேவையின் அடிப்படையிலும், மற்றவர்களின் அத்தியாவசிய பயன்பாடு அடிப்படையிலும் உருவாகிறது. சுற்றுப்புறங்களை கவனியுங்கள்.. நீங்களும் ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கி உலகுக்கு வழங்க முடியும்▪
Source By: Nakkheeran News
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...