எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த சிறந்த இந்தியக் கணிதவியலாளர் சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1950).
சுப்பையா
சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) ஏப்ரல் 5,1901ல் நெல்லை
மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்திற்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊரில்
பிறந்தார். ஒரு வயதில் தன் தாயை இழந்தார். பள்ளி இறுதி ஆண்டில் தன் தந்தையையும்
இழந்து துன்பப்பட்ட சமயம் சாஸ்திரியார் என்ற ஆசிரியர் இவரை ஆதரித்து ஊக்கம்
கொடுத்தார். பிறகு நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் தனது புகுமுகப்பு
வகுப்பு (intermediate class) படித்து விட்டு, திருவனந்தபுரத்தில் இருந்த மஹாராஜா கல்லூரியில் தன் பட்டப் படிப்பை
முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சிக்கான ஸ்காலர்ஷிப் கிடைக்கப்
பெற்று, அப்போது
புகழ் பெற்ற கணித பேராசியர்கள் ஆனந்த ராவ் மற்றும் வைத்தியநாதஸ்வாமியுடன் இணைந்து
எஸ்.எஸ்.பிள்ளை கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பின்னர் அண்ணாமலை பல்கலைத்தில் பணிபுரியும்போது
தொடர்ந்து எண்கணிதம் என்ற கணிதப் பிரிவில் தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இந்த
ஆராய்ச்சியில் அவர் அடைந்த உயரங்கள் பிரமிக்கத்தக்கவை. கணிதத்தில் அன்றிருந்த
மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் D.Sc பட்டம் பெற்ற முதல் கணிதவியலாளர்
பிள்ளை அவர்கள்தான். பிள்ளை அவர்கள் வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது. பிள்ளை அவர்களுக்கு கோட்டு, டை போடுவது கூட
பிடிக்காது. தன் வீட்டிற்கு வரும் வெளிநாட்டு விருந்தினருக்கும் இலை போட்டு
தரையில் அமர்த்தி தமிழ் முறைப்படி தான் உணவு உபசரிப்பு நடக்குமாம். ஆனால் இவர்
எந்தப் புகழுக்கும் ஆசைப்பட்டவரில்லை.
எந்த ஒரு கணிதம் மற்றும் அறிவியல் கழகங்களில் உறுப்பினராகக் கூட
இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிள்ளை அவர்கள் பெயரை C.V ராமன் அவர்கள் இந்திய அறிவியல் கழகத்தின் ஃ’பெல்லோஷிப்பிற்கு
பரிந்துரைத்தற்கான கடிதம் ஒன்று இருக்கிறது. K. ராமச்சந்திரா என்ற கணிதவியலாளர் ஒரு
முறை இந்தியக் கணித வரலாற்று நிபுணர் ஒருவரிடம் உரையாடும்போது அவர் பிள்ளை அவர்களை
அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
76 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அவை பெரும்பாலும் எண் கோட்பாட்டைப்பற்றியும் டயோபாண்டஸ் தோராயத்தைப் பற்றியும் இருந்தன. வாரிங் பிரச்சினையில் கண்டுபிடிப்பு எண் கோட்பாட்டில் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்து சரித்திரம் படைத்தார். 1909இல் டேவிட் ஹில்பர்ட் வாரிங் பிரச்சினையைப் பற்றிய ஓர் அடிப்படைத் தேற்றத்தை நிறுவினார். ஹில்பர்ட்-வாரிங் தேற்றம்: ஒவ்வொரு நேர்ம முழு எண் k க்கும் g(k) என்ற ஒரு மீச்சிறு நேர்ம முழு எண் கீழுள்ள பண்புடன் இருக்கும்: எந்த நேர்ம முழு எண்ணையும் g(k) எண்ணிக்கை கொண்ட k - அடுக்குகளின் கூட்டுத் தொகையாகக் காட்டலாம். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக எல்லா முழுஎண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை g(k)யாகும்.
அவர்
கண்டுபிடித்த ஒருவித பகா எண்களுக்கு பிள்ளை பகா எண்கள் என்ற பெயர்
நிலைத்துவிட்டது. முந்நூறு வருஷங்களாக தீர்க்க முடியாமல் இருந்த கணித மேதைகளையெல்லாம்
திக்குமுக்காட செய்த வாரிங்ஸ் அனுமானம் என்ற புதிரை விடுவித்ததோடு அதற்கு விடையும்
கண்டவர். இவ்வளவு
திறமை வாய்ந்த இளம்மேதையை எப்படியும் தன்னுடைய சர்வகாலசாலைக்கு கொத்திக் கொண்டு
வந்து விடவேண்டும் என சர். சிபி ராமசாமி ஆசைப்பட்டு தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால்
டாக்டர் எஸ்எஸ் பிள்ளையின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது. தன்னுடைய எண் கணித
ஆராய்ச்சிக்கு அண்ணாமலையின் அமைதியான ஆக்ஸ்போர்டு சூழ்நிலை அவருக்கு ரொம்பவும்
பிடித்துப் போயிருந்தது. வாரிங்ஸ் அனுமானத்திற்கு விடை கண்டு, அதன் மூலம் உலக புகழ் பெற்றதெல்லாம் இந்த சூழ்நிலையின்தான்.
படிப்பதற்கு
புத்தகங்களும், பழகுவதற்கு அறிஞர்களும் அங்கு அதிகமாக
இருப்பதால் அவருக்கு அண்ணாமலையை விட்டு வர மனமில்லை. எஸ்எஸ்
பிள்ளையின் குடும்பமோ நடுத்தரத்திற்கும் சற்று குறைவான குடும்பம். அதே நேரத்தில்
அவர் சங்கோஜப் பிறவியும் கூட. கடின உழைப்பும், எண்
கணிதமுமே அவர் கண்ட உலகம். இவரை ஒரு கட்டுபாட்டிக்குள் வைத்திருப்பது புயலை
பெட்டிக்குள் வைத்திருப்பது போல. ஒரு சமஸ்தானத்து திவானே வெத்திலை பாக்கு வைத்து
அழைக்கும்போது வருவதற்கு என்ன. படிச்சிருந்து என்ன செய்ய, என்று
அவருக்கு வேண்டியவர்கள் எல்லாம் மிகவும் சங்கப்பட்டார்கள். பிறகு எப்படியோ
செங்கோட்டையில் உள்ள பெரிய மனிதர்களும், உறவினர்களும்
ஒன்று சேர்ந்து அண்ணாமலைக்கு வந்து ஒரு முற்றுகை போராட்டமே நடத்தி பிள்ளையை
சம்மதிக்க வைத்து விட்டார்கள்.
ஒரு வழியாக 1940-41-ல் டாக்டர் எஸ்எஸ் பிள்ளை திருவனந்தபுரம் வந்து வேலையில் சேர்ந்தார். டாக்டர்
பிள்ளையின் வாழ்க்கை தொடங்கிற்று. இவர் வேலைக்கு சேர்ந்த மறுவருஷம், வடநாட்டில் நடந்த சயின்ஸ் காங்கிரஸூக்கு இவரை விட்டு விட்டு
இன்னொருவரை திருவாங்கூர் சர்க்கார் தேர்ந்தெடுத்து விட்டது. சர்.சி.பி
வெளிநாடு போயிருந்தபோது இது நடந்தது. அவ்வளவுதான், டாக்டர்
பிள்ளை உடனே வேலையை ராஜினமா செய்துவிட்டு திவானுக்கு ஒரு காகிதத்தை மாத்திரம்
எழுதி தபாலில் போட்டு விட்டு செங்கோட்டை ரயில் ஏறி விட்டார். இதை அறிந்த
டாக்டர் பிள்ளையின் நண்பரும், ஜெர்மனிய நாட்டு கணித மேதையுமான
டாக்டர் எப்.டபிள்யு லெவின் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்கத்தா
சர்வகாலசாலைக்கு அவரை அழைத்துக் கொண்டார். அப்போதைய துணை வேந்தர் சியாம பிரசாத்
முகர்ஜியும் டாக்டர் பிள்ளைக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆதரித்தார். சர்வதேச
கணித அமைப்புகள் இவருடைய ஆராய்ச்சியை போற்றிப் புகழ்ந்தன. கணித உலகெங்கும்
இவருடைய பெயர் பிரபலமடைந்தது. டாக்டர் எஸ்எஸ்பிள்ளையின் எண் கணித கோட்பாடு (Dr.
S.S. Pillai's Theory of Number) என்றே ஒரு சூத்திரமும் கணிதயியலில்
நிரந்தரம் ஆகிவிட்டது.
ராமானுஜத்தை
பற்றி ஹார்டி எழுதிய 12 வால்யூம் உள்ள புத்தகத்தில், ஒரு வால்யூம் இவரை பற்றி எழுதினார். டாக்டர் பிள்ளையை நினைக்கும்
போதெல்லாம் நேச்சர் என்ற உலகப் புகழ் பெற்ற இதழில் டாக்டர் இ.டி பெல் என்ற
மேல்நாட்டு மேதை எழுதிய உலகப் புகழ் பெற்ற சாதனைகளை செய்தவர், டாக்டர் எஸ்எஸ்
பிள்ளை என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவர் பிறந்த செங்கோட்டையில் டாக்டர்
எஸ்எஸ் பிள்ளை தெரு என்ற பெயர் பலகையை பார்க்கும் போதெல்லாம் அந்த அறிஞரின் சாதனை
நமக்கு பெருமை சேர்க்கின்றன.
இப்படி புகழின்
உச்சியில் டாக்டர் எஸ்எஸ்பிள்ளை இருக்கும்போது சான்பிரான்சிகோ கணித மாநாட்டில்
தலைமை தாங்க அழைப்பு வந்தது. துரதிருஷ்டவசமாக ஆகஸ்ட் 31, 1950ல் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற
மாநாட்டிற்கு செல்லும் போது கெய்ரோவில் நடந்த விமான விபத்தில் தனது 49வது அகவையில் உயிரிழந்தார்.
அது இந்தியக் கணிதத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமேயில்லை. சான்பிரான்சிஸ்கோ
மாநாட்டில் கலந்துகொண்ட கணித மேதைகள் அவருக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி
செலுத்தினர். அவரது உருவப் படம் மாநாட்டில் திறந்துவைக்கப்பட்டது.
Source By:
Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி
பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி,
புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments:
Post a Comment