Tuesday, September 15, 2020

பள்ளிகளை எப்போது திறப்பது?: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

பள்ளிகளை எப்போது திறப்பது?: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்! 


பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து, கல்வித் துறை அதிகாரிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

 

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கல்வி நிறுவனங்களையும் திறக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. வரும், 21ம் தேதி முதல், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களை, பகுதி நேரமாக பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

இதையடுத்து, அக்., 5 முதல், 10ம் வகுப்பு - பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பகுதி நேரமாக முக்கிய வகுப்புகளையும், ஆய்வக வகுப்பையும் நடத்தலாம் என, தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

 

இது தொடர்பாக, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தலைமைச் செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் மற்றும் அதிகாரிகள், கூட்டத்தில் பங்கேற்றனர்.அப்போது, பள்ளிகளை திறப்பது குறித்து, சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பின், பள்ளிகள் திறப்பு தேதியை முதல்வரிடம் கூறி ஒப்புதல் பெறலாம் என்றும் முடிவானது.

 

விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பள்ளிகளில் பாடம் குறைப்பு குறித்து நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது, பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.எந்தெந்த பாடங்களை குறைப்பது என்பது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியே, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...