Friday, September 11, 2020

16 மாணவர்களுக்கு செல்போன் பரிசளித்த பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை (நேரு நினைவு கல்லூரி முன்னால் மாணவி) பைரவி.

16 மாணவர்களுக்கு செல்போன் பரிசளித்த பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை (நேரு நினைவு கல்லூரி முன்னால் மாணவி) பைரவி.

பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளியின் கணித ஆசிரியை பைரவி, தன் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். குடும்பத்தின் பொருளாதார நிலைமையால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட்போன் இல்லாமல் தவித்த அந்த மாணவர்களுக்கு இந்தப் பரிசுடன், ஊரடங்கு முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும்வரை ரீசார்ஜ் செலவும் ஏற்றிருக்கிறார். 

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. அப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியை, கணித ஆசிரியை பைரவி. அவர் வகுப்பில் 10-ம் வகுப்பு பயிலும் 16 மாணவர்கள், தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையறிந்த பைரவி, தனது சொந்தப் பணம் ரூபாய் ஒரு லட்சம் செலவில் அவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வாங்கிக்கொடுத்து மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 


ஆசிரியை பைரவியிடம் பேசினோம். ``நான் கஷ்டமான குடும்பத்துலதான் பொறந்து வளர்ந்தேன். பல நாள்கள் ஒரு வேளை சாப்பாடுதான் சாப்பிட்டு படிச்சேன். அந்தக் கஷ்ட சூழலிலும் படிச்சு இப்போ ஒரு ஆசிரியையா உருவாகியிருக்கேன். என் கணவர் தனியார் பள்ளியில டீச்சரா இருக்கார். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். போன வருஷத்தைவிட இந்த வருஷம் எங்க பள்ளியில மாணவ, மாணவிகளின் சேர்க்கை குறைவா இருந்தது. அதனால மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் வீடு வீடாகச் சென்று சொல்லிக்கொண்டிருந்தோம்.

 

அப்போ, என் வகுப்பு மாணவி கிருஷ்ண பிரியாவின் வீட்டுக்குப் போனோம். ஒழுகும் குடிசை வீடு, சேறும் சகதியுமா இருந்தது. எங்களைப் பார்த்ததும் அவங்க அம்மாவும் அண்ணனும் பதறிப்போய் பாயைப்போட்டு உட்கார வெச்சு தண்ணி கொடுத்தாங்க. கிருஷ்ணபிரியாகிட்ட, `ஏம்மா நேத்து ஆன்லைன் கிளாஸுக்கு வரல..?'னு கேட்டேன். மிஸ்... செல்லுல நெட் தீர்ந்துபோச்சு. கையில காசு இல்லைன்னு அப்பா சொன்னாங்க மிஸ்னு சொன்னதும், அவங்க வீட்டை சுத்திப்பார்த்தேன். அப்போதான் எனக்குப் புரிஞ்சது, நான் கேட்ட கேள்வி தவறுனு.

 

தொடர்ந்து பல மாணவ, மாணவிகளிடம் பேசும்போதும் மொபைல் போனே இல்லாம பல குடும்பங்கள் இருப்பது தெரியவந்தது. இன்னொரு பக்கம், ஆன்லைன் வகுப்புகள்ல கலந்துகொள்ள முடியாத நிலையில இருந்த சில மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு தூக்கிவாரிப்போடும். அப்படி ஒரு மனநிலை என் பிள்ளைகளுக்கு வந்துடக் கூடாதுனு மனசு தவிச்சது. என் பொண்ணு ஜெயவதனாகிட்ட இதைப் பத்தி பேசிட்டு இருக்கும்போது, ``மூணு பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக்கொடுக்கலாம்னு இருக்கேம்மா...''னு அவகிட்ட சொன்னேன். அதுக்கு அவ, ``அம்மா... முடிஞ்சா உங்ககிட்ட படிக்கிற எல்லா பசங்களுக்கும் வாங்கிக்கொடுக்கப் பாருங்கம்மா...''னு சொன்னாள்.

 

பணத்துக்கு என்னம்மா பண்றது..?''னு கேட்டேன். அதுக்கு அவ, எனக்கு நகை வாங்க பணம் சேர்த்து வெச்சிருக்கீங்களே... அந்தப் பணத்தை எடுத்து வாங்கலாம்மா...''னு சொன்னாள். ``அது உனக்காகச் சேர்த்த பணம்மா...''னு நான் சொல்ல, ``எனக்கு எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்க நீங்களும் அப்பாவும் இருக்கீங்க. ஆனா, அவங்களுக்கு யாரும்மா இருக்கா? வறுமை படிப்புக்குத் தடையா இருக்கக் கூடாதும்மா. எனக்கு ரெண்டு பவுன் நகை வாங்கலைன்னு நினைச்சுக்கோங்க...''னு சொன்னா. அவ மனசு இப்படியிருக்கேன்னு ரொம்ப பெருமையா, நெகிழ்ச்சியா இருந்தது.

 


கூல் பேட் ஆண்ட்ராய்டு வெர்ஷன், ஒரு மொபைலின் விலை ரூ.6000. 16 மொபைல்கள் ரூ. 96,000. 4ஜி சிம் கார்டுகள் ஆக்டிவேஷன், நெட் பேக்னு ரூ.4000. மொத்தமா ஒரு லட்சம் ரூபாய் செலவாச்சு. பசங்க குடும்பத்தின் வறுமைச் சூழலால, லாக்டெளன் முடியும் வரை நானே நெட் மற்றும் ரீசார்ஜ் செலவை செய்றதா சொல்லியிருக்கேன். அதோடு, என் வகுப்பில் (பத்தாம் வகுப்பு ஆங்கிலம் வழி) புதிதா சேரும் மாணவர்களுக்கும் இதேபோல மொபைல் கொடுக்க இருக்கேன். எங்க மாணவர்கள் இனி எந்தத் தடையும் இல்லாம படிப்பாங்க'' என்றார் முகமலர்ச்சியுடன். 


``மிஸ் எங்களுக்கு ஸூம் ஆப்பும் இன்ஸ்டால் செய்து கொடுத்துட்டாங்க. நாங்க பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதயிருக்கிற இந்த வருஷம், மொபைல், ரீசார்ஜ் வசதியெல்லாம் இல்லாம எங்க படிப்பு இப்படி தடைபட்டுக்கிடக்கேனு எங்க அப்பா, அம்மாவெல்லாம் வருத்தப்பட்டாலும், அவங்களுக்கு வேற வழியும் தெரியல. இப்போ அவங்களுக்கு எல்லாம் பெரிய நிம்மதி, எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். இனி நாங்க கிளாஸுக்கு ரெடி!" - உற்சாகமாகச் சொல்கிறார்கள் மாணவ, மாணவிகள்.💐💐💐💐💐💐👏👏👏

ஆசிரியை பைரவிஅவர்களை நேரு நினைவு கல்லூரி சார்பாக வாழ்த்துகிறோம்.

Source By: vikatan

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Interview<----Click Link 

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...