வானில் தோன்றும் நெருப்பு வளையம்! எப்போது? பிப்ரவரி 17.
வானியல் நிகழ்வுகளில் ஆண்டுதோறும், கிரகங்கள் மாற்றம், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான முதல் வானியல் நிகழ்வாக, வரும் பிப்ரவரி 17-ந் தேதி, பிரம்மாண்டமான ‘நெருப்பு வளைய’ (Annular Solar Eclipse) சூரிய கிரகணம் தோன்ற உள்ளது.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமான, இந்த அரிய நிகழ்வு முதன்மையாக அண்டார்டிகா கண்டத்திலுள்ள 2 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து தெளிவாகத் தெரியும். இந்திய நேரப்படி, இந்த கிரகணம் செவ்வாய்க்கிழமை மதியம் 12:31 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்டார்டிகாவைத் தவிர்த்து, அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் சூரிய உதயத்திற்குப் பிறகு இதன் பகுதி நேரக் கிரகணத்தைக் காண முடியும். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளில் இந்த கிரகணத்தைக் காண முடியாது.
வளைய சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஆனால், சந்திரன் பூமியை விட்டு தொலைவில் இருக்கும்போது (Apogee), அதன் அளவு சூரியனை விடச் சிறியதாகத் தோன்றும். அந்த நேரத்தில் சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் மையப்பகுதியை மட்டும் (96%) மறைக்கும்.
இதனால் சூரியனின் விளிம்புப் பகுதி மட்டும் ஒரு பிரகாசமான மோதிரம் அல்லது 'நெருப்பு வளையம்' போலக் காட்சியளிக்கும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல. பிரத்யேக சூரிய கிரகண கண்ணாடிகளை பயன்படுத்தி மட்டுமே இதைப்பார்க்க வேண்டும். இந்த 'நெருப்பு வளைய' காட்சி அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை நீடிக்கும் என்று ஃபோர்ப்ஸ் (Forbes) அறிக்கை கூறுகிறது.
அடுத்தடுத்த கிரகணங்கள் எப்போது?
விஞ்ஞானிகளின் கருத்துப்படி, கிரகணங்கள் எப்போதும் ஜோடியாகவே நிகழும். இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்த 2 வாரங்களுக்குப் பிறகு, ஒரு முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்கப் பகுதிகளில் தெளிவாகத் தெரியும்.
பிப்ரவரி 2027: சிலி, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில், கானா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் 'நெருப்பு வளைய' கிரகணம் தெரியும்.
2028: ஈக்வடார், பெரு, பிரேசில், மொராக்கோ மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இதைக் காணலாம். ஜனவரி 2030: அல்ஜீரியா, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த நிகழ்வு அரங்கேறும்.
பொதுவாக இந்த கிரகண நிகழ்வுகள் நடைபெறும்போது ஒரு சில நாடுகளில் தெரியும், ஒரு சில நாடுகளில் தெரியாத வகையில் இருக்கும். அந்த வரிசையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
.png)

No comments:
Post a Comment