சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்ட நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19, 1473).
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் (Nikolaus Kopernikus) பிப்ரவரி 19, 1473ல் போலந்து நாட்டின் ராயல் புருசியாவில் தோர்ன் என்ற நகரில் பிறந்தார். இவரது தந்தை கிராக்கொவ் நகரில் பெரிய வணிகர் ஆவார். தாயார் பார்பரா வாட்சன்ராட் தோர்ன், நகரின் மிகப்பெரிய செல்வந்தரின் மகள். இத்தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் நிக்கோலாஸ். இவரது தந்தை கிராக்கொவ் நகரிலிருந்து தோர்ன் நகருக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு மரியாதைக்குரிய குடிமகனாக இருந்தார். செம்பு வியாபாரம் செய்து செல்வந்த வணிகராகத் திகழ்ந்த இவர், நிக்கோலாசுக்குப் பத்து வயதாகும்போது காலமானார். தந்தையாரின் மறைவுக்குப் பின்னர், நிக்கோலாசும் அவரது மூன்று உடன்பிறப்புக்களும் அவர்களது தாய்மாமனொருவரால் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இறுதி வரை இவர் திருமணமே செய்யாது தனது ஆய்விலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தார். இலத்தீன், இடாய்ச்சு, போலந்து, இத்தாலியம், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார்.
1491ல் கோப்பர்னிக்கஸ் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். இங்கே தான் அவருக்கு வானியலுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரது ஆசிரியராக இருந்த அல்பேர்ட் புருட்செவ்ஸ்கி என்பவரின் உதவியால் அவருக்கு வானியலில் ஆர்வம் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் சில காலம் தோர்னில் தங்கியிருந்த பின்னர், இத்தாலிக்குச் சென்று அங்குள்ள பொலொக்னாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவரது கல்விக்குப் பண உதவி புரிந்த அவரது மாமா, கோப்பர்னிக்கஸ் ஒரு பேராயராகவும் வரவேண்டுமென விரும்பினார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது, பிரபல வானியலாளராக இருந்த ஆசிரியர் டொமெனிக்கோ மரியா நோவரா டா பெராராவைச் சந்தித்தார். கோப்பர்னிக்கஸ் அவரிடம் படித்ததோடு அவருடைய சீடராகவும், உதவியாளராகவும் ஆனார்.
தாலமியின்
கொள்கையில் கதிரவனும் கோள்களும் புவியை பெரிய வட்டப்பரிதிகளில் சுற்றி வருவதாகக்
கூறப்பட்டது. இந்தப் பரிதிகளின் மேல் சிறிய வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றிக்
கொண்டே செல்கின்றன. இந்தச் சிறிய பரிதிகள் மேல்மிசை வட்டங்கள் (epicycle) என
வழங்கப்பட்டன. அரிசுட்டாட்டில், பூமி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என ஆராய்ந்து
கூறினார். நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற தத்துவங்களை அவர் ஒப்புக்கொண்டார். இவர் புவிக்கும்
நிலவுக்கும் இடையில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன் என்ற நிலையான கோள்கள் உள்ளன என்றும், இவை புவியை
மையமாகக் கொண்டு நிலையான ஒரு கிடைமட்ட வட்டப்பாதையில் இயங்குகின்றன என்றும்
கூறினார்.
கோப்பர்னிக்கசின்
சூரிய மையக் கொள்கை எளிமையானது. எனினும் கிரேக்கர்களுடைய சிந்தனைகளின் தாக்கம்
இவருடைய கொள்கையிலும் இருந்தது. கோப்பர்னிக்கஸ் கொள்கையின் படி கோள்களின் பெரிய
வட்டமும், சிறிய
வட்டப்பரிதிகளும் சூரியனை மையமாகக் கொண்டவை. கோள்களின் பின்னோக்கிய நகர்வையும்
அவற்றின் ஒளி வேறுபாடுகளையும் விளக்கச் சிறிய வட்டப் பரிதிகளையும் தனது கொள்கையில்
புகுத்தியிருந்தார். அது மட்டுமின்றி விண்மீன்கள் வெகுதொலைவில் வானக் கூரையில்
அமைந்திருப்பதாகவும் இவர் குறிப்பிட்டார். கோப்பர்னிக்கசின் சுழற்சிக் கொள்கை ஏழு
பகுதிகளைக் கொண்டது. வானக் கோளத்திற்குப் பொதுவானதோர் மையம் இல்லை (குறிப்பாகப் பூமி தான்
அனைத்திற்கும் மையம் என்பது தவறு). புவியின் மையம் பேரண்டத்தின் மையம் அல்ல. அது
புவி ஈர்ப்பு மையமும் சந்திரனின் சுழற்சிப் பாதையின் மையமுமே ஆகும். அனைத்துக்
கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன. புவியிலிருந்து சூரியன் உள்ள தொலைவு
புவியிலிருந்து வெகுதொலைவில் உள்ள விண்மீன்கள் இருக்கும் வான்கூரையின் (firmament) தொலைவுடன்
ஒப்பிடும்போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது.
புவி, தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவில் உள்ள விண்மீன்கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் விண்மீன்கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன. சூரியனின் நகர்வு உண்மையில் சூரியனின் நகர்வல்ல. புவி நகர்வதால் தோன்றும் உணர்வு. கோள்களின் பின்னோக்கிய நகர்வுத் தோற்றமும் முன்னோக்கிய நகர்வுத் தோற்றமும் அவற்றினுடையதல்ல. அவை புவியின் நகர்வால் உருவாக்கப்படுபவையே. கோப்பர்நிக்கசின் கருத்து அக்காலப் பொது மக்களாலும் வானியலாளர்களாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை "புவி பேரண்டத்தின் மையமல்ல. சூரியனைச் சுற்றும் கோள்கள்போலப் புவியும் ஒரு சாதரணக் கோள் தான்" என்பதை மதவாதிகளும் வானவியலாளர்களும் ஏற்கவில்லை. மேலும் அவரது நூலான ஆன் தி ரிவலூஷன்ஸ் ஆஃப் தி ஹெவென்லி பாடீஸ் (On The Revolutions of The Heavenly Bodies) இலத்தீன் மொழியில் இருந்ததால், பெரும்பாலான மக்களால் அதனைப் படித்துணர முடியவில்லை. இதனால் இவரது நூல் பெருமையடையாமலே இருந்தது.
இத்தாலிய வானியல் அறிஞர்களான கலீலியோ கலிலி, புரூனோ போன்றோர் கோப்பர்நிக்கசின் கொள்கைகளை ஏற்று அதனை நிறுவும் முயற்சியில் இறங்கியவுடன் தான் உலகின் பார்வை கோப்பர்நிக்கசின் நூல் மேல் விழுந்தது. அதில் உள்ள மத நம்பிக்கைகளுக்கு எதிரான கொள்கைகள் மதவாதிகளால் உணரப்பட்டன. நூல் வெளிவந்து 73 ஆண்டுகள் கழித்தே 1616ல் இந்நூல் தடை செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இத்தடை விலக்கப்படவில்லை. கோப்பர்னிக்கஸ் ஒரு மருத்துவராகவும், ஒரு நீதிபதியாகவும், ஆளுநராகவும், பொருளாதார நிபுணராகவும், கணிதவியலாளராகவும் விளங்கியதுடன் கத்தோலிக்க மத குருவாகவும் இருந்தார். எனினும் மதக் கொள்கைகளுக்கு எதிரான சூரிய மையக் கொள்கையை அவர் வெளியிடத் தயங்கவில்லை.
கோப்பர்னிக்கஸ்
ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுனர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில்
முனைவர் பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர்,
நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழிபெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர், கத்தோலிக்க
குரு, ஆளுனர், அரசு
தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார். புவி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி
வருகின்றன என்று ஆராய்ந்து கூறிய நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் மே 24, 1543ல்
தனது 70வது
அகவையில் புரொம்போர்க், போலந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். கோப்பர்னிக்கஸ் இறக்கும்
சந்தர்ப்பத்தில் பக்கவாதம் தாக்கிக் ஆழ்மயக்க நிலையில் இருந்தார். ஆழ்நிலை
மயக்கத்தில் அவர் இருந்தபோது அவரது நூல் அச்சிட்டு எடுத்துவரப்பட்டு அவரது
கரங்களில் வைக்கப்பட்டது, உடனே அவர் தனது ஆழ்மயக்க நிலையிலிருந்து மீண்டு, விழிப்புணர்வு
பெற்றுத் தனது வாழ்நாள் சாதனையான அந்நூலைப் பார்த்தபின் தான் இறந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி
பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி,
புத்தனாம்பட்டி,திருச்சி.
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
நன்றி.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment