Wednesday, October 21, 2020

டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் மற்றும் நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 21, 1833).

டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் மற்றும் நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 21, 1833).

                                     

ஆல்ஃபிரட் நோபல் (Alfred Bernhard Nobel) அக்டோபர் 21, 1833ல் கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும், கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும், நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். மொத்தமாக அவர்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். குடும்ப வறுமையின் காரணமாக, ஆல்ஃபிரட் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடந்தனர். தனது தந்தை வழியாக, ஆல்பிரட் நோபல் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஒளுஸ் ருட்பெகின் சந்ததியில் இருந்து வந்தவராகிறார். ஆல்பிரட் நோபல் இளம் வயதில் பொறியியலில், குறிப்பாக வெடிபொருட்களில் ஆர்வம் காட்டினார். தொழில்நுட்பத்தின்மீது அவர் கொண்ட ஆர்வமானது ஸ்டாக்ஹோமின் ராயல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னால் மாணவராகிய தனது தந்தையால் அவருக்கு வாய்க்கப்பெற்றதாகும். 

பல்வேறு வர்த்தக தோல்விகளை தொடர்ந்து, நோபலின் தந்தை 1837 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாக வளர்ந்து வந்தார். அவர் நவீன ஒட்டு பலகையை (plywood) கண்டுபிடித்தார். மேலும் "டார்பிடோ" சம்பத்தப்பட்ட பணியை தொடங்கினார். வளமான அவரது பெற்றோர்கள், தனியார் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு நோபலை அனுப்ப முடிந்தது. அதனால் அவர் வேதியியல் பாடம் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். சிறுவனாக அவர் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், மற்றும் ரஷிய மொழிகளில் சரளம் அடைந்தார். 1841-1842 காலத்தில், 18 மாதங்கள், நோபல் அவர் வாழ்நாளில் சென்ற ஒரே பள்ளியான, ஸ்டாக்ஹோம் ஜேக்கப்ஸ் அபோலோகிச்டிக் பள்ளிக்கு சென்றார். இளமையில், நோபல், வேதியியலாளர் நிகோலாய் ஜினின் உடன் படித்தார். பின்னர், 1850 ஆம் ஆண்டில், மேற்படி வேலைக்கு பாரிஸ் சென்றார். 18 வயதில், கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் கீழ் ஒரு குறுகிய காலம் ஒத்துழைத்து, அவர் வேதியியல் ஆய்வுகளை நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் மேற்கொண்டார்.

ஜான் எரிக்சன் அமெரிக்க உள்நாட்டு போர்க்கான ஐயன்க்லட் USS மானிட்டரை வடிவமைத்தார். நோபல் 1857ல், ஒரு எரிவாயு மீட்டரைப் பற்றிய, தனது முதல் காப்புரிமையை தாக்கல் செய்தார். குடும்பத்தின் தொழிற்சாலை க்ரிமியன் போர்க்காக ஆயுத உற்பத்தியை செய்து வந்தது. ஆனால், க்ரிமியன் போர் முடிந்ததும், உள்நாட்டு உற்பத்திற்கு மீண்டும் மாறுவதற்கு கடினமாக இருந்த நிலையில் அவர்கள் திவாலாகும் நிலை இருந்தது. 1859 ஆம் ஆண்டில், நோபலின் தந்தை தனது இரண்டாவது மகனான, லுட்விக் நோபலிடம், தனது தொழிற்சாலையை விட்டுச் சென்றார். அவன் பெரிதும் வணிக முன்னேற்றத்தை பெற்றான். பிறகு நோபல் மற்றும் அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து சுவீடன் திரும்பினார்கள். நோபல் வெடிபொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக நைட்ரோக்லிசெரினின் (டுரின் பல்கலைக்கழகத்தில் தியோபில் ஜூல்ஸ் பிலோசின் மாணவரான அச்கானியோவால், சொப்ரீரோவால் 1847ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். நோபல் 1863 ஆம் ஆண்டு ஒரு வெடி கண்டுபிடித்தார். மேலும் 1865 ஆம் ஆண்டு, அவர் வெடிக்கும் தொப்பியை வடிவமைத்தார்.

                  100 tons of TNT, one really cool explosion shock wave | Shock wave, Amazing  gifs, Explosion

செப்டம்பர் 3, 1864 அன்று, ஸ்டாக்ஹோமில் ஹெலேன்போர்க்கில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொட்டகையில் வெடிவிபத்து ஏற்பட்டதால், நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். ஆனால், நோபெல், சிறிய விபத்துக்களை சந்தித்தாலும் கலக்கம் இல்லாமல் தலைமறைவாக, அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மேலும் தொழிற்சாலைகள் கட்ட சென்றார். நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசிரினைவிட கையாள எளிதாக மற்றும் பாதுகாப்பான பொருளாகிய , டைனமைட்டை 1867ல் கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டனில் காப்புரிமை பெறப்பட்டது. மேலும் இது சுரங்கம் மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1875 ஆம் ஆண்டு நோபல் மேலும் நிலையான மற்றும் டைனமைட்டை விட சக்தி வாய்ந்த, கெலிக்னிட்டை கண்டுபிடித்தார். நோபல், பிற்காலத்தில் இரண்டு நோபல் பரிசுகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனமான அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் 1884ம் ஆண்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1893 ஆம் ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

 

நோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார். மேலும் 350 காப்புரிமைகளை சர்வதேச அளவில் வெளியிட்டார். நோபல் சமாதானத்தை விரும்புகிறவராக இருந்தாலும், அவரின் மரணத்திற்கு முன்னால் 90 ஆயுத தொழிற்சாலைகள் நிறுவினார். 1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் மரணத்தை தொடர்ந்து பல செய்தித்தாள்கள் ஆல்பிரட்டின் இரங்கலை தவறாக வெளியிட்டன. ஒரு பிரஞ்சு இரங்கல் செய்தி குறிப்பிட்டதாவது மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார் (Le Marchand De La mortest Mort) என்பதாகும். 1891 ஆம் ஆண்டில், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரர் லுட்விக்கின் மரணத்திற்குப் பிறகு நோபல் பாரிஸில் இருந்து இத்தாலியின் சான் ரெமோக்கு, சென்றார். பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.

                 

அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார் (2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார். அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் "நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது. 

நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (ஜூன் 7), சுவீடன் சங்கம் (ஜூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (ஜூன் 11), எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன. 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவியலாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவும் புகழடையவும் காரணமாக இருந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஆல்ஃபிரெட் நோபல் டிசம்பர் 10, 1896 1896ல் தனது 63வது அகவையில் பெருமூளை ரத்தக் கசிவு காரணமாக சான்ரெமோ, இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது குடும்பம், நண்பர்கள் அல்லது சக மாணவர்களுக்கு தெரியாமலேயே, அவர் நோபல் பரிசுகள் வழங்குவதற்கு தனது செல்வத்தை விட்டு சென்றார். அவர் ஸ்டாக்ஹோமில் நோராவில் புதைக்கப்பட்டார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium) என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

Source By: Wikipedia.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி. 

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...