Friday, December 4, 2020

முதல் டி20: இந்திய அணி அசத்தல் வெற்றி- தமிழக வீரர் நடராஜன் அசத்தல்

முதல் டி20: இந்திய அணி அசத்தல் வெற்றி-தமிழக வீரர் நடராஜன் அசத்தல்.

கான்பெராவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில், துவக்க வீரர் ஷிகர் தவன் 6 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து மிட்செல் ஸ்டார்க்கிடம் க்ளின் போல்ட் ஆனார். மறுமுனையில் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்..

மூன்றாவது வரிசையில் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 9 ரன்கள் மட்டும் சேர்த்து மிட்செல் ஸ்வெப்சன் வீசிய பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்தார். சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 23 ரன்கள் சேர்த்த நிலையில், மனிஷ் பாண்டே 2 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். அதிரடி வீரர் ஹார்திக் பாண்டியாவும் ரன்களை குவிக்கத் திணறி 15 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியில், டெத் ஓவர்களில் அதிரடி காட்டிய ஜடேஜா 23 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 44 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் சேர்த்து, ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.


ஆஸ்திரேலிய பௌலர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் மூன்று விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், துவக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில், டார்சி ஷார்ட் நிதானமாக விளையாடி 34 ரன்கள் சேர்த்து நடராஜனிடம் வீழ்ந்தார்.

ஸ்டீவன் ஸ்மித் (12), கிளென் மேக்ஸ்வெல் (2) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இறுதியில் ஹென்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.


அடுத்துக் களமிறங்கியவர்கள் சிறப்பாக சோபிக்கத் தவறியதால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் மட்டும் சேர்த்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.


யுஷ்வேந்திர சஹல், நடராஜன் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். ரவிந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதால், சஹல் மாற்று வீரராக களம் கண்டு பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.



No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...