Wednesday, April 2, 2025

சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா? நிழல் இல்லாத நாள்.

சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா? நிழல் இல்லாத நாள்.


சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது தெரியும். ஆனால், சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா?


ஆச்சரியமாக இருக்கிறதா? இதை 2,200 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் செய்து காட்டினார். அவர், எரட்டோஸ்தனிஸ். பண்டைய கிரேக்கத்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரின் நூலக தலைமை நூலகர் இவர்.


ஒரு நாள் நூல்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படித்த ஒரு தகவல் அவரை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 அன்று அலெக்சாண்ட்ரியா அருகே சைன் நகரில் கிணறுகளில் நண்பகல் நேரத்தில் சூரிய ஒளி கிணற்றின் அடித்தரையைத் தொடுகிறது என்று படித்தார். பொதுவாகச் சூரிய ஒளி கிணற்றின் அடித்தரையைத் தொடாது, சுற்றுச் சுவர்களில்தான் விழும். கிணற்றின் அடித்தரையை தொட வேண்டுமென்றால் சூரிய ஒளி அங்கு நண்பகல் நேரத்தில் செங்குத்தாக விழ வேண்டும். நண்பகல் நேரத்தில் செங்குத்தாக இருக்கும் பொருட்களின் நிழல் தரையில் விழுவதில்லை.

அதென்ன நிழலில்லா நாள்?


பொதுவாக நாம் குச்சியைச் செங்குத்தாக நட்டு வைத்தால் சூரிய ஒளியின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நண்பகல் நேரத்தில் குறைந்த நீளத்தில் இருக்கும். நிழலே இல்லாமல் இருக்காது. ஆனால், ஆண்டில் இரண்டு நாட்களில் மட்டும் நண்பகல் நேரத்தில் செங்குத்தான பொருட்களின் நிழல் அதனைச் சுற்றி விழாது. இதைத்தான் வானவியலில் நிழலில்லா நாள் எனக் கொண்டாடப்படுகிறது. அப்படி ஒரு நிழலில்லா நாள்தான் ஜுன் 21 அன்று சைன் நகரில் ஏற்பட்டது.


இந்த நிழலில்லா நாள் மார்ச் 21 அன்று பூமத்திய ரேகை பகுதிகளில் ஏற்பட்டது. பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கி நகர்ந்து ஏப்ரல் 9 அன்று தமிழகத் தென்கோடியான கன்னியாகுமரியில் ஏற்படுகிறது. அப்படியே ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி நகர்ந்து சென்னையில் ஏப்ரல் 24 அன்று ஏற்படுகிறது. பிறகு வடக்கு நோக்கி நகர்ந்து ஜுன் 21 அன்று கடைசியாக குஜராத் பகுதிகளில் நிழலில்லா நாள் ஏற்படுகிறது. பிறகு ஏற்படாது. காரணம், இந்த நிழலில்லா நாள், கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகைக்கு(tropic of Capricorn) இடைப்பட்ட பகுதியில்தான் நிகழும். இதற்குக் காரணம், பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றுவதால்தான்.


ஒரு வேளை பூமி நேராகச் சுற்றிக்கொண்டிருந்தால் ஆண்டு முழுவதும் பூமத்திய ரேகை பகுதிகளுக்கு மட்டும் நண்பகல் நேரத்தில் செங்குத்தான பொருட்களின் நிழல் தரையில் விழாது. அதாவது, பூமத்திய ரேகை பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் நிழலில்லா நாள்தான். ஆனால், வேறெந்த பகுதிகளுக்கும் இதுபோல் நிழலில்லா நாள் வராது.

ஆச்சரியமும் சந்தேகமும்

இப்போது எரட்டோஸ்தனிஸ் கதைக்கு வருவோம். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 அன்று சைன் நகரின் கிணறுகளில் நண்பகலில் செங்குத்தான பொருட்களின் நிழல் தரையில் விழவில்லை என்று படித்தபோது, அதேநேரத்தில் அலெக்சாண்ட்ரியா நகரில் அதுபோல் நிழல் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்தார். ஆனால், அலெக்சாண்ட்ரியாவில் அதே நாளில் நண்பகலில் செங்குத்தாக இருக்கும் கோபுரங்களில் நிழல் தரையில் விழுவதைக் கண்டார்.


இது அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. பூமி ஒருவேளை தட்டையாக இருந்தால், ஓரிடத்தில் நிழல் விழவில்லை என்றால் அருகே இருக்கும் இன்னொரு நகரிலும் நிழல் விழக்கூடாது. ஆனால், இங்கே நேர் மாறாக இருக்கிறது என்று யோசித்தார். பூமியின் மேற்பரப்பு வளைந்த உருண்டையான வடிவமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்கிற முடிவுக்கு வந்தார்.


அப்படி வளைந்திருந்தால் அதன் சுற்றளவை எப்படிக் கண்டறிவது? அதற்கு மிக எளிமையான கணித அறிவைப் பயன்படுத்தினார். ஜூன் 21 அன்று சைன் நகரில் உள்ள உள்ள செங்குத்துப் பொருட்களில் நிழல் விழுவதில்லை. ஆனால், அலெக்சாண்டிரியாவில் நிழல் விழுகிறது. இதன் மூலம் சூரிய ஒளிக்கும் அத்தரையில் நடப்பட்ட செங்குத்து குச்சிக்கும் உள்ள கோணத்தை அளந்தார். அக்கோணமானது ஒரு முழு வட்டத்தின் ஐம்பதில் ஒரு பகுதி (அதாவது 7.2 டிகிரி) எனக் கணக்கிட்டார். அதாவது, பூமியின் மையத்தில் இருந்து ஒரு நேர்கோடு சைன் நகருக்கும் இன்னொரு நேர்கோடு அலெக்சாண்ட்ரியாவுக்கும் வரைந்தால் இரண்டு நேர்கோட்டுக்கும் உள்ள கோணமும் இதே வட்டத்தில் ஐம்பதில் ஒரு பகுதிதான் என்ற முடிவுக்கு வந்தார்.

கன்னியாகுமரி - சென்னை

அப்படியெனில் பூமியின் சுற்றளவில் அலெக்சாண்டிரியாவுக்கும் சைன் நகருக்கும் இடையே உள்ள தொலைவு ஐம்பதில் ஒரு பகுதிதான். அதனால், பூமியின் சுற்றளவு என்பது அலெக்சாண்டிரி யாவுக்கும் சைன் நகருக்கும் உள்ள தொலைவைப்போல 50 மடங்கு என்கிற முடிவுக்கு வந்தார். என்னே ஒரு அற்புதமான அறிவியல் சிந்தனை! இரு நகரங்களுக்கும் இடையே உள்ள தொலைவு அவர்கள் பயன்படுத்திய அக்கால அளவீட்டின்படி 5,000 ஸ்டேடியா. ஐம்பதால் பெருக்கும்போது 250,000 ஸ்டேடியா. இன்றைய அளவுகளின்படி 5,000 ஸ்டேடியா என்பது கிட்டத்தட்ட 800 கி.மீ. இதை ஐம்பதால் பெருக்கினால் 40,000 கி.மீ. அதாவது, பூமியின் சுற்றளவு 40,000 கி.மீ. கிட்டத்தட்ட துல்லியமான மதிப்பீடு.


அதுவும் 2,200 ஆண்டுகளுக்கு முன்பே. உலகின் தலைசிறந்த 10 இயற்பியல் பரிசோதனைகளில் எரட்டோஸ்தனிஸ் பரிசோதனையும் ஒன்று. இப்பரிசோதனையை இம்மாதத்தில் நாமும் தமிழகத்தில் செய்து பார்க்கலாம். அதற்குத் தேவை நேரான நீண்ட குச்சி. உதாரணமாக, ஏப்ரல் 9 அன்று கன்னியாகுமரியில் நிழலில்லா நாள். அதே நேரத்தில் சென்னையில் நண்பகல் நேரத்தில் நிழல் விழும். குச்சியைத் தரையில் செங்குத்தாக நட்டு காலை 11.50 மணியளவில் இருந்து நண்பகல் 12.30 வரை இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை நிழலின் நீளத்தை அளந்துகொள்ள வேண்டும். இதில் வரும் குறைந்தபட்ச நிழலின் நீளத்தையும், குச்சியின் நீளத்தையும் வகுத்தால் நமக்குக் கிடைப்பது தோராயமாகச் சூரியக்கதிர் சென்னையில் நடப்பட்ட செங்குத்துச் குச்சியோடு ஏற்படுத்தும் கோணம்.

பள்ளியில் செய்துபாருங்கள்

இதே கோணம்தான் பூமியின் மையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரையப்பட்ட நேர்க்கோட்டுக்கும் சென்னைக்கு வரையப்பட்ட நேர்கோட்டுக்கும் இடையே உள்ள கோணம். கோணம். இக்கோணத்தை சென்னையின் அட்ச ரேகைக்கும் கன்னியாகுமரியின் அட்ச ரேகைக்கும் இடையே உள்ள தொலைவால் வகுத்தால் வருவது பூமியின் ஆரம். இந்த ஆரத்தை 2 π அதாவது 6.28 ஆல் பெருக்கினால் வருவதுதான் பூமியின் சுற்றளவு. இதேபோல் நீங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தும் இப்பரிசோதனையைச் செய்து பார்க்கலாம்.


உலகெங்கும் பல நாடுகளில் உள்ள பள்ளிகள் இந்த நிழலில்லா நாளில் எரட்டோஸ்தனிஸ் பரிசோதனையைச் செய்து பூமியின் ஆரத்தை, சுற்றளவை அளக்கிறார்கள். அது மட்டுமல்ல இந்த நிழலில்லா நாளில் பூமி தன்னைத்தானே சுற்றும் வேகத்தைக் கண்டறியலாம். அதேபோல் நாம் இருக்கும் இடத்தின் உண்மையான வடதிசை எது என்றும் கண்டறியலாம். நாம் சாதாரணமாக நினைக்கும் நிழலை வைத்துப் பல ஆய்வுகள் செய்யலாம். அறிவியலைப் பொறுத்தவரை ஒளி மட்டுமல்ல நிழல்கூட இயற்கையின் உண்மையை எடுத்துக்காட்டும் கருவிதான்.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, March 31, 2025

இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு தொடர்பான கருத்தரங்கம்.

இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு தொடர்பான கருத்தரங்கம்.


தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜூன் மாதம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, போட்டோகிராபி, புதுமையான விளையாட்டுக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.

வானவியல் மாநாடு தொடர்பாக  மாநில அளவிலான கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ராமன் ரிச்சர்ச் பவுண்டேசன் தலைவர் ரவிச்சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் உதயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் உமா அனைவரையும் வரவேற்றார். `டாஸ்’ மாநில பொதுச் செயலாளர் மனோகர் வானவியல் மாநாடு குறித்து நோக்கவுரையாற்றினார். பேராசிரியர்கள் ரவிக்குமார், ஜோஸ்பின் பிரபா, நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியின் முதல்வர் சந்திரமோகன், சிட்டிசன் சயின்டிஸ்ட் முகிலன் ஆகியோர் கலந்து கொண்டு 17 முதல் 22 வயதுள்ள இளைஞர்கள் வானவியல் மாநாட்டில் சமர்பிக்க வேண்டிய ஆய்வு கட்டுரைகள், போஸ்டர்கள் மற்றும் வானவியல் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து செயல்விளக்கத்துடன் பேசினர்.

மூத்த வழக்கறிஞர் மார்டின் கலந்து கொண்டு  வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வு அட்டைகள், செய்முறை அறிவியல் கருவிகள் வழங்கி பேசினார். `டாஸ்’ நிர்வாகிகள் சாந்தி, ஜெகதீஸ்வரன், ரமேஷ், சக்திவேல், சொக்கநாதன் உள்பட பேராசிரியர்கள், டாஸ் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருநெல்வேலி  டாஸ் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார்.

இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் நிகழ்வுகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமாரை 9840607391 எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது (https://tass.co.in) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe1ss9-J2nj5PKoItrWiyHYYwxJLXobpxS8Njfncf_fcCYs2Q/viewform?pli=1  இணைய வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம்.






இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


காப்புப்பிரதி (Backup) செய்ய மறவாதே...!!! இழந்தால் ஏங்காதே!" (World Backup Day).

காப்புப்பிரதி (Backup) செய்ய மறவாதே...!!! இழந்தால் ஏங்காதே!" (World Backup Day).



தரவு காப்புப்பிரதி என்றால் என்ன?

தரவு காப்புப்பிரதி என்பது ஒரு ஐடி அமைப்பில் உள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் தரவை மற்றொரு இடம் / இடத்திற்கு நகலெடுக்கும் செயல்முறையாகும், இது உபகரணங்கள் செயலிழப்பு, சைபர் தாக்குதல், இயற்கை பேரழிவு மற்றும் பிற தரவு இழப்பு நிகழ்வுகளின் போது தரவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக காப்புப்பிரதி தினம்(World Backup Day) எப்போது?

தரவுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், அமைப்புகள் மற்றும் கணினிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 31 ஆம் தேதி உலக காப்புப்பிரதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பிரச்சாரம் 2011 ஆம் ஆண்டு இஸ்மாயில் ஜாதுவால் (Ismail Jadun) தொடங்கப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி, நிறுவனங்கள் தரவு இழப்பைத் தடுக்க தரவை காப்புப் பிரதி எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து ட்வீட்(Tweet) செய்து பாட்காஸ்ட்களை (Podcasts) வழங்கி வருகிறது.


காப்புப்பிரதி தேவையா?

சில நேரங்களில் கணினியில் ஏற்படும் ஒரு சில சிறிய பிரச்சனைகள் தரவு அழிவுக்கு வழிவகுக்கும் மற்றும் சில சமயங்களில் நாம் நமது கணினி மற்றும் மின்னணு சாதனங்களை இழக்க நேரிடலாம். சில சமயங்களில், தீம்பொருள் (Malware) கணினியை சேதப்படுத்துவதோடு அல்லாமல் தரவு இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் காப்புப்பிரதி என்பது மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த டிஜிட்டல் உலகில் கருதப்படுகிறது. .

காப்புப்பிரதி எடுப்பதற்கான வழிகள்?

காப்புப்பிரதி எடுப்பதற்கு மூன்று முக்கிய வழிகள் உள்ளன: முழு, அதிகரிப்பு மற்றும் வேறுபாடு காப்புப்பிரதி. முழு காப்புப்பிரதி தரவின் முழுமையான நகலையும், அதிகரிப்பு காப்புப்பிரதி கடைசி காப்புப்பிரதியிலிருந்து மாற்றங்களை மட்டுமே சேமிக்கிறது, அதே சமயம் வேறுபட்ட காப்புப்பிரதி கடைசி முழு காப்புப்பிரதியிலிருந்து மாற்றங்களை மட்டும் சேமிக்கின்றன. கையேடு காப்புப்பிரதி எடுப்பது கூட ஒரு காப்புப்பிரதியாக கருதலாம். இதில், கணினியில் உள்ள கோப்புகளில் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து நகலெடுப்பதை உள்ளடக்கிய ஒரு வகை காப்புப்பிரதியாகும்.



காப்புப்பிரதியை எங்கு உருவாக்கலாம்?

1. ஆன்லைன் காப்புப்பிரதி சேவைகள் / கிளவுட் காப்புப்பிரதி - தொலைதூர, கிளவுட் அடிப்படையிலான சேமிப்பக சேவையில் காப்புப்பிரதிகளை சேமித்தல். 

2. ஆஃப்சைட் (Offsite) காப்புப்பிரதி - முதன்மை இயந்திரத்திலிருந்து கோப்புகளை வேறு கணினியில் சேமித்தல். 

3. வெளிப்புற ஹார்டு டிஸ்க் டிரைவ்களில் (Hard Disk Drive) சேமித்து வைத்தல் ஒரு முக்கியமான முறையாகும், ஆனால் HDD பழுதடையலாம் அல்லது தொலைந்து போகலாம்.

4. வெளிப்புற சாலிட் ஸ்டேட் டிரைவ் (Solid State Drive) – தற்சமயம், மக்கள் காப்புப்பிரதியை SSD இல் சேமிக்கிறார்கள், ஆனால் கணினி திருடப்படும் போதோ அல்லது இயற்கை பேரழிவுகளை சந்திக்கும் போதோ தரவு ஒரு கேள்விக்குறியாகிறது.

5. விண்டோஸ் உள்ளமைக்கப்பட்ட காப்புப்பிரதி (Windows Built-in Backup) – விண்டோஸின் “காப்புப்பிரதி மற்றும் மீட்டமை” அம்சத்தைப் பயன்படுத்தி கோப்புகளை காப்புப்பிரதி எடுக்கலாம் அல்லது OneDrive-இல் அதிகபட்சமாக 5 GB கோப்புகளை காப்புப்பிரதி எடுக்கலாம்.  

தேவைக்கேற்ப காப்புப்பிரதியைச் சேமிப்பதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும். 

உலக காப்புப்பிரதி தினத்தன்று, அதாவது மார்ச் 31 ஆம் தேதி, வருடத்திற்கு ஒரு முறையாவது காப்புப்பிரதி எடுத்து, உங்கள் தரவைப் பாதுகாத்து கொள்ளவும். மேலும் worldbackupDay.com என்ற இணையதளத்தில் உறுதிமொழி எடுத்தும், மக்கள் தங்கள் தரவை இழக்காமல் இருக்கவும் ஊக்குவிக்கவும். 

காப்புப்பிரதி எடுங்கள்...!!! பாதுகாப்பாக இருங்கள்...!!!! 

டாக்டர் ப. கல்பனா

உதவிப் பேராசிரியர் & Sustainable Development Goals ஒருங்கிணைப்பாளர் 

கணினி அறிவியல் துறை

கிறிஸ்து (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

பெங்களூர், கர்நாடகா.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா? நிழல் இல்லாத நாள்.

சிறு குச்சியும் பூமியை அளக்க உதவும் என்பது தெரியுமா? நிழல் இல்லாத நாள். சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது தெரியும். ஆனால், சிறு குச்ச...