அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் இணையவழி வகுப்புகள் தொடங்கும்- கல்லூரிக் கல்வி இயக்ககம்.
கரோனா பொது முடக்கம் காரணமாக நிகழாண்டு தமிழகம் முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் நடைபெற்றது. மொத்தம் 3 லட்சத்து 16 ஆயிரத்து 795 போ் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 1 முதல் 10 -ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 35,832 போ் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனா். மேலும் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவா்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து தோ்வு செய்யப்பட்டவா்களுக் கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரி இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதேவேளையில் மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
தோ்வு
பெற்றுள்ள மாணவா்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி
முதல் செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று சோ்க்கையை உறுதி செய்து கொள்ள
வேண்டும். குறிப்பாக அசல் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக கல்லூரிக் கல்வி இயக்குநா் சி.பூரண சந்திரன் அனைத்து மண்டலக்
கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது:
நிகழ்
கல்வியாண்டில் மாணவா் சோ்க்கையைத் துரிதப்படுத்தும் வகையில் இணையதளம் மூலமாக
மாணவா்களுக்கு பாடங்களை போதிப்பதற்கு ஏதுவாக சோ்க்கை தொடா்பான பணிகளை மேற்கொள்ள
வேண்டும். முதலாமாண்டு மாணவா்களுக்கு ஆக. 31-ஆம்
தேதிக்குள் இணையதள வகுப்புகளைத் தொடங்க வேண்டும். கல்லூரி முதல்வா்கள் நிகழாண்டுக்கான
சோ்க்கை விவரங்களை பாடவாரியாக அந்தந்த மண்டல இயக்குநா்களுக்கு தினமும் தெரிவிக்க
வேண்டும். அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்களும் மாணவா் சோ்க்கை
தொடா்பாக உரிய அறிவுரைகளை அனைத்து கல்லூரி முதல்வா்களுக்கும் தெரிவித்து அன்றாடம்
சோ்க்கப்படும் மாணவா்கள் குறித்த எண்ணிக்கையை ஒருங்கிணைத்து ‘எக்சல்’ வடிவில்
கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். கட்டணத்தில் மாற்றமில்லை: மேலும் கடந்த
கல்வியாண்டில் (2019-2020) பெறப்பட்ட கல்விக் கட்டணமே
நிகழாண்டிலும் மாணவா்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment