Wednesday, August 26, 2020

விவசாயிகளுக்கு புத்துயிர் அளிக்கும் கம்ப்யூட்டர் பொறியாளர் மதுசந்தன்- நான்கு மாதத்தில் ஒரு கோடி விற்பனை.

விவசாயிகளுக்கு புத்துயிர் அளிக்கும் கம்ப்யூட்டர் பொறியாளர் மதுசந்தன்-   நான்கு மாதத்தில் ஒரு கோடி விற்பனை.

 

ஆர்கானிக் மாண்டியா ஸ்டோருக்குள் ஒரு விவசாயி நுழைகிறார். ஒரு பை நிறைய தக்காளியும் மிளகாயும் எடுத்து டேபிள் மீது வைக்கிறார். கேஷியர் எடையை பரிசோதிக்கிறார். தக்காளி 4.5 கிலோவும் மிளகாய் 1.25 கிலோவும் இருக்கிறது. உடனே பணத்தை எடுத்து அவரிடம் கொடுக்கிறார். விவசாயி பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். மொத்த செயல்பாடும் ஆறு நிமிடங்களுக்கு உள்ளாகவே நடந்து முடிகிறது. தாமதமாவதில்லை, பேரம் பேசுவதில்லை, இடைத்தரகர்கள் இல்லை, ஏமாற்றங்களும் இல்லை. ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு மாண்டியா இவ்வாறு இருந்ததில்லை. 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்ட 20 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

 

எப்போதும் நீர்பாசனத்துடன் பசுமையாக காட்சியளிக்கும் மாண்டியா பெங்களூருவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் விவசாயிகள் சுமக்க முடியாத அளவிலான கடன் சுமையுடன் உள்ளனர். மாண்டியாவிலுள்ள விவசாயிகள் கடந்த ஆண்டு (2014-15) கடனாக 1,200 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக அறிக்கைகள் மதிப்பிடுகின்றன. அரசாங்கத்தின் அக்கறையின்மை, குறைந்துவரும் பயிர் விலை, அதிகப்படியான சேமிப்பு, முறையான விவசாய உத்திகள் குறித்த வழிகாட்டுதல் இல்லாதது போன்றவை இத்தகைய மோசமான சூழ்நிலைக்கு காரணங்களாகும்.

 

மாண்டியாவைச் சேர்ந்த 37 வயதான மதுசந்தன் சிக்கதேவய்யா கனவுகளுடன் கலிஃபோர்னியாவில் வாழ்ந்துகொண்டிருந்தார். விவசாயிகளின் நிலை குறித்து அறிந்த அவர் மிகுந்த கவலைக்குள்ளானார். மாண்டியாவில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் மது. அவரது அப்பா விவசாய பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மது தனது ஒட்டுமொத்த குழந்தைப் பருவத்தையும் 300 ஏக்கர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் கழித்தார். மென்பொருள் பொறியாளராக உலகெங்கும் பணிபுரிந்த அவர் நிறுவனங்களுக்கு ஆட்டோமேடட் சாஃப்டுவேர் டெஸ்டிங் சொல்யூஷன்களை வழங்கிய வெரிஃபயா கார்ப்பரேஷன் (Verifaya Corporation) என்கிற நிறுவனத்திற்கு இணை நிறுவனராக இருந்தார். இருப்பினும் அவர் மனதளவில் ஒரு விவசாயியாகவே உணர்ந்தார். 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனைத்தையும் உதறிவிட்டு விவசாய சமூகத்தினரின் மேம்பாட்டிற்கு உதவ 15 நாட்களுக்குள் மாண்டியா வந்தடைந்தார்.

 

உலகெங்கிலும் விவசாயிகள் மட்டுமே மொத்த விலையில் விற்பனை செய்து, ஆனால் சில்லறை விலையில் வாங்கவேண்டி உள்ளது. விவசாயிகள் தங்களது நிலத்தை விட்டுவிட்டு அடிமைத்தனமான பணிகளைத் தேடி நகரத்திற்கு குடிபெயர்கின்றனர். நிலையற்ற பணியாக இருப்பதால் ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மாறவேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தங்களையும் தங்களது குடும்பத்தையும் பராமரிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இறுதியில் அதிக கடன் சுமைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர். இது ஒன்றோடொன்று தொடர்புடையதாகும். ஆனால் இதை தவிர்க்கமுடியும். அதற்காக உருவானதுதான் ’ஆர்கானிக் மாண்டியா’. இது விவசாயிகளுக்கு வளமான, ஆரோக்கியமான வாழ்க்கையை அளிப்பதால் இந்தத் தொழிலை விட்டு யாரும் விலக மாட்டார்கள்.

 

மது, மாண்டியாவிற்கு திரும்பியபோது நிலத்தோற்றம் சிதறி இருப்பதைக் கண்டார். பல விவசாயிகள் ஆர்கானிக் முறைக்கு மாறி வழக்கமான உத்திகளை பயன்படுத்தி வந்தனர். விளைச்சலும் இருந்தது. இருந்தும் முறையான சந்தையும் தகவல் பரிமாற்றமும் இல்லை. முதலில் ஆர்வமுள்ள நபர்களை (நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள்) ஒன்று திரட்டினார். இவர்கள் ஒரு கோடி ரூபாய் திரட்டினர். மது ஆர்கானிக் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை பதிவு செய்தார். இதன் மூலம் முதல்கட்டமாக கிட்டத்தட்ட 240 ஆர்கானிக் விவசாயிகளை ஒன்றிணைத்தார். அரசு சார்ந்த நடவடிக்கைகளை முறையாக முடிக்கவும் விவசாயிகள் தங்களது விளைச்சலை விற்பனை செய்யக்கூடிய ப்ராண்டான ‘ஆர்கானிக் மாண்டியா’ என்பதை நிறுவவும் எட்டு மாதங்கள் எடுத்துக்கொண்டனர். மேலும், பெங்களூருவில் ஆர்கானிக் கடைகளை தொடங்குவது, இ-காமர்ஸ் வலைதளம் உருவாக்குவது, ரெஸ்டாரண்டுகளுடன் இணைந்து விளைச்சலை விற்பனை செய்வது என பல்வேறு திட்டங்கள் குறித்து யோசித்தோம். ஆனால் இவற்றில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் விவசாயிகள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளமுடியாது. நான் அதற்குத்தான் முன்னுரிமை அளிக்க விரும்பினேன்.  விவசாயியின் கஷ்டத்தின் மதிப்பை ஒரு வாடிக்கையாளரும் வாடிக்கையாளரின் தேவையை விவசாயியும் புரிந்துகொண்டால் மட்டுமே விவசாயம் செழிக்கும்.

 

பெங்களூருவையும் மைசூருவையும் இணைக்கும் மாண்டியா நெடுஞ்சாலையை பயன்படுத்த திட்டமிட்டார். பயணிகள் அங்கே நிறுத்தி வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பினார். மக்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் கடைக்கருகில் ஒரு ஆர்கானிக் ரெஸ்டாரண்டை துவங்கினார். அவர் கூறுகையில், பயணிகள் சாப்பிடுவதற்காக இங்கே நிறுத்தி இறுதியில் கடைக்குள் நுழைந்து வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவார்கள் என திட்டமிட்டேன். ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு நிலைமை தலைகீழானது. மக்கள் முதலில் கடைக்கு வரத் தொடங்கியதைப் பார்த்தபோது மனநிறைவாக இருந்தது.


ஆர்கானிக் மாண்டியாவின் மூலம் விவசாயிகளையும் வாடிக்கையாளர்களையும் இணைக்க திட்டமிட்டார் மது. ஒரு புறம் ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால் வாடிக்கயாளர்கள் அவற்றை வாங்கத் தயங்குகின்றனர். மற்றொரு புறம் அதிகப்படியான ரசாயனங்களுக்கு மத்தியில் பணிபுரிந்ததால் 24 வயதான ஒரு விவசாயி புற்றுநோய் தாக்கி உயிரிழக்கிறார். ஆர்கானிக் உணவிற்கு மாறுவதால் ஏற்படும் பலன் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. ஒரு பொதுவான தளத்தை உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியப்படும். அதற்கான முயற்சியாக கீழ்கண்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய நிறுவனத்தின் ’ஆர்கானிக் பயணம்’ துவங்கியது.

 

1. வியர்வை தானமளிக்கும் பிரச்சாரம் – இதுவரை நடைமுறையில் இல்லாத இந்த பிரச்சாரத்தில் தன்னார்வலர்களிடம் தானமாக பணத்தைக் கேட்காமல் வியர்வை கேட்கப்படுகிறது. மது கூறுகையில், சரியான நேரத்தில் வேலையாட்களை பணியிலமர்த்த இயலாமல் போவதால் 20 சதவீதத்திற்கும் மேலான விளைச்சலை விவசாயிகள் இழக்க நேரிடுகிறது.” இந்த முயற்சியில் விவசாயத்தை விரும்புபவர்களோ அல்லது விவசாயப் பணிகளை முயற்சித்து அனுபவம் பெற விரும்புபவர்களோ வார இறுதி நாட்களில் நாள் முழுவதும் ஆர்கானிக் மாண்டியா நிலங்களில் பணிபுரியலாம். ஒரு உதாரணம் குறித்து மது குறிப்பிடுகையில்,  “60 வயது மதிக்கத்தக்க ஒரு விவசாயியிடம் ஒரு நாள் பணிக்கு அளிக்க வேண்டிய தொகையான 3,000 ரூபாய் இல்லை. அவரது ஒட்டுமொத்த நிலத்திலிருந்த பயிர்களையும் வேறு இடத்தில் மாற்றம் செய்யவேண்டிய பணி நிலுவையிலிருந்தது. முதநூல் பக்கத்தில் ஒரு கோரிக்கையை பதிவிட்டோம். 24 தன்னார்வலர்கள் ஒன்றுதிரண்டு அரை நாளில் வேலையை முடித்தனர். கடந்த சில மாதங்களிலேயே வியர்வை தானமளிக்கும் பிரச்சாரம் பெங்களூருவிலிருந்து கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள், ஓய்வுபெற்ற தம்பதிகள் என 1,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கவர்ந்தது."

 

2. நிலத்தை பகிர்ந்துகொள்ளுதல் - இது இவர்களது மற்றொரு தனித்துவமான முயற்சி. நிலத்தை பகிர்ந்துகொள்ளும் இந்த முயற்சியில் அரை ஏக்கர் முதல் இரண்டு ஏக்கர் வரையிலுள்ள நிலத்தை விவசாயம் செய்வதற்காக கிட்டத்தட்ட 35,000 ரூபாய்க்கு மூன்று மாதங்கள் வாடகைக்கு விடப்படும். இந்த பேக்கேஜை தேர்ந்தெடுப்பவர்கள் இந்த மூன்று மாதங்களில் வாடகைக்கு எடுத்துக்கொண்ட நிலத்தில் எட்டு முதல் ஒன்பது இரவுகள் தங்கி விவசாயம் பழகலாம். அவர்கள் இல்லாதபோது ஆர்கானிக் மாண்டியா விவசாயி மொத்த நிலத்தையும் பராமரிப்பார். விளைச்சல் தயாரானதும் அந்தக் குடும்பங்கள் ஆர்கானிக் மாண்டியாவிற்கு விளைச்சலை விற்கலாம் அல்லது அவர்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு தொடர் வருமானம் உறுதிசெய்யப்படுவதுடன் நகர்புற மக்கள் ஆர்கானிக் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை உணரவும் உதவும்.

 

3. குழு விவசாயம் - இந்த முயற்சியில் நிறுவனங்கள் அதன் ஊழியர்களை விவசாய நடவடிக்கைகள், கபடி, கில்லி, ஏழு கல் போன்ற கிராமப்புற விளையாட்டுகள், கரும்பு ஆலைகளைப் பார்வையிட பண்ணை சுற்றுலா போன்றவற்றில் நாள் முழுவதும் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள். இதன் மூலம் விவசாயத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மக்கள் தெரிந்துகொள்ள முடியும். இவற்றிற்காக ஒரு நாளைக்கான கட்டணமாக 1,300 ரூபாய் வசூலிக்கப்படும். பலன்கள் ஆர்கானிக் மண்டியா முழுமையாக செயல்படத் துவங்கி ஆறு மாதங்களே முடிவடைந்த நிலையில் வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. இந்த கூட்டுறவு மையத்தில் ஏற்கெனவே 500 பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் உள்ளனர். எல்லோரும் இணைந்து 200 ஏக்கர் நிலத்தில் அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், ஹெல்த்கேர் ப்ராடக்ட்ஸ், பானங்கள், மசாலாக்கள் உள்ளிட்ட 70 வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்றனர்.

 

இந்நிறுவனம் வெறும் நான்கு மாதங்களில் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு மாதத்திற்கான பொருட்கள் 999 ரூபாய், 1,499 ரூபாய் மற்றும் 1,999 ரூபாய் என பேக் செய்யப்பட்டு பலரை கவர்ந்தது. “ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் ஆரோக்கியமாக, ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் மூலமாக ஒருவரின் வீட்டிற்கு வந்து டெலிவர் செய்யப்படும்போது அது அனைவரும் கவரத்தானே செய்யும்?” என்று கேள்வியெழுப்பினார் மது. முக்கியமாக மாண்டியாவிற்கு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். மது கூறுகையில், ஒருவர் நகரத்திற்கு திரும்பி விவசாயத்தை மறுபடி துவங்கினால் அதுதான் என்னுடைய மிகப்பெரிய வெற்றியாகும். இதுவரை 57 பேர் நிலத்திற்கு திரும்பியுள்ளனர். இதுதான் கிராமப்புற ஆர்கானிக் புரட்சியின் துவக்கம். நிலையான எதிர்காலத்திற்கான பாதை எந்த ஒரு வணிகமும் வெற்றியடைய நிலைத்தன்மை ஒரு முக்கிய அம்சமாகும் என்பதை மது நன்கறிவார். ஆனால் அந்த நிலைத்தன்மை விவசாயி மற்றும் வாடிக்கையாளர் என இருவருக்கும் நன்மை பயக்கவேண்டும் என்பதை உறுதிசெய்ய விரும்புகிறார்.

 

அடுத்த ஒரு வருடத்தில் 10,000 குடும்பங்களுக்கு இத்திட்டத்தை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளார். இவர்கள் மாதந்தோறும் சராசரியாக 2,000 முதல் 3,000 ரூபாய் வரை வாங்குவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் சராசரியாக 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளார். அவர் கூறுகையில், வருடத்திற்கு 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி குடும்பங்களை எங்களது உறுப்பினர்களாக பதிவு செய்யவைப்பதே திட்டமாகும். இதன் மூலம் இரண்டு விதமான பலன்கள் கிடைக்கும். அவர்களுக்கு அந்த வருடம் முழுவதும் எங்களது ப்ராடக்டுகளுக்கான சிறப்பான தள்ளுபடி கிடைக்கும். இரண்டாம் ஆண்டில் பல்வேறு ஆரோக்கியமான உணவு பழக்கங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். 2020-ம் ஆண்டில் ஒட்டுமொத்த மாண்டியா மாவட்டத்தையும் ஆர்கானிக்காக மாற்றுவதே மதுவின் இலக்காகும்.

Source By: yourstory, ஸ்வேதா விட்டா
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...