Wednesday, September 2, 2020

பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
 

லடாக்கில் சீனா ராணுவத்தினர் அத்துமீறியதை தொடர்ந்து, அந்த நாட்டுடனான வர்த்தக உறவை இந்திய அரசாங்கம் மெல்ல குறைத்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக, டிக்டாக், ஷேர் இட், ஹெலோ, ஷெய்ன், லைக்கீ, வி சாட், யுசி பிரௌசர் உள்ளிட்ட சீனாவுக்கு சொந்தமான 59 செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், பல லட்சம் கோடி இழப்பை சீன நிறுவனங்கள் எதிர்கொண்டன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் அளித்தது.


மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன. இதனிடையே, சீனாவுக்கு சொந்தமான பப்ஜி உள்ளிட்ட மேலும் பல செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு பொதுவான கோரிக்கை வலுத்து வந்தது. இந்த நிலையில், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதில் பிரபல மொபைல் கேமிங் செயலியான PUBG, Baidu, CamCard Business Card Reader, WeChat reading, Tencent Weiyun உள்ளிட்டவை அடங்கும். அரசின் இந்த உத்தரவு ஆன்லைன் விளையாட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
இந்த செயலிகள் மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு பாதிக்கப்படுவதாகவும், இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இந்திய சைபர் கிரைம் மையம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில மொபைல் செயலிகள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக அரசுக்கு தொடர் புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் மூலம் பயனர்களிள் தரவுகள் மற்ற நாடுகளுக்கு பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
மேலும், தடைசெய்யப்பட்ட செயலிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிடைக்கச் செய்வது மற்றும் செயல்படுவது சட்டவிரோதமானது மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் குற்றமாகும். அவ்வாறு செயல்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...