பல்கலைக் கழகங்களில் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15 க்குப் பிறகு நடைபெறும் - உயர்கல்வித் துறை அமைச்சர்.
உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்து பல்கலைக் கழகங்களின்
கட்டுப்பாட்டில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும்
மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கான இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15 க்குப் பிறகு நடத்தப்பட உள்ளது. இதற்கான
விரிவான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மேற்படி
இறுதி ஆண்டு தேர்வுகள் மாணாக்கர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது. மாணாக்கர்கள் தேர்விற்கு தங்களை
தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை விடுத்துள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டன. இதன் காரணமாக பல மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டன.
இதேபோல், கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக
அறிவித்துவிட்டன. இதனையடுத்து கொரோனாவை காரணம் காட்டி பல்கலைக்கழகங்கள் மற்றும்
கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி
பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யூ.ஜி.சி. திட்டவட்டமாக அறிவித்தது. மேலும்
கல்லூரி இறுதி தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க
வேண்டுமென்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து யூ.ஜி.சி.யின் இந்த முடிவை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஒன்றை தொடர்ந்தனர்.
இந்த வழக்கானது நீதிபதி அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கொரோனா காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து
செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். மேலும் இறுதியாண்டு தேர்வினை
நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது என யூ.ஜி.சி.யும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இதன் பின்னர் செப்டம்பர்
மாத இறுதிக்குள் பல்கலைக்கழக இறுதி தேர்வினை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் புதிய
அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அனைத்து
ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், இன்னும் ஒரிரு நாளில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் அண்ணா
பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும்
தற்போது வெளியிடப்பட்டுள்ள யூ.ஜி.சி.யி சுற்றறிக்கையில் விரைவில் திருத்தப்பட்ட
ஆண்டு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இறுதி
ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தப்படாததால் வேலைக்குச் செல்வதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment