ஆல்பர்ட் ஐன்சுடீனின் பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் சான் பத்தீட்டு பெரென் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 30, 1870).
சான் பத்தீட்டு பெரென் (Jean Baptiste Perrin) செப்டம்பர் 30, 1870ல் பிரான்சு நாட்டில் லீல் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தை ஓர் இராணுவ அலுவலர். அவர் பிரெஞ்சு-புருசியப் போரில் வீர மரணமடைந்தார். எனவே இவருடைய தாயார் பெரினையும் அவரின் இரண்டு சகோதரிகளையும் வளர்த்து ஆளாக்க மிகவும் துன்புற்றார். பெரென் உள்ளூரிலுள்ள பொதுப்பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். பின்னர் பாரிசில் 'லைசி ஜேன்சன் டி செய்லி' என்ற கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கட்டாய இராணுவ சேவை காரணமாக 1891ல் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சியின் போதுதான் இவருக்கு இயற்பியலில் ஆர்வம் ஏற்பட்டது. 1897ல் என்றியட் டுபோர்டல் என்ற பெண்னை பெரின் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் பிறந்தனர்.
1894-97 ஆண்டுகளில் பெரென் ஈகோல் நார்மலே என்ற இடத்தில் இயற்பியல் ஆய்வு உதவியாளராகச் சேர்ந்து பணிகளில் ஈடுபடார். அப்பொழுது, எதிர்மின் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் இவற்றைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அவற்றையே ஆய்வறிக்கையாக அளித்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றர். அப்பொழுது வெற்றிடக் குழாயில் மின்னிறக்கம் செய்யும்போது எதிர்மின் வாயிலிருந்து எதிர்மின் கதிர்கள் தோன்றுகின்றன என்பதை அறிவியலறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கதிர்கள் எதிர்மின் துகள்களால் ஆனவை. அவை அலை வடிவாக வெளியிடப்படுகின்றன என்பதிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. 1895ல் பெரென் ஆய்வுகளில், எதிர்மின் கதிர்கள் காந்தப்புலத்தில் விலகலடைகின்றன என்பது மிக முக்கியமான முடிவாகும். இவை எதிர் மின்தன்மை உடையவை. இத்துகள்களின் மின்னூட்டம்-நிறை இவற்றுக்குள்ள விகிதத்தைக் கண்டறிய முற்பட்டார். ஆனால் ஜெ. ஜெ. தாம்சன் இவருக்கு முன்னால் அதைக் கண்டறிந்தார்.
1901ல் இயல்வேதியலில், பிரௌனியன் இயக்கம் மற்றும் மூலக்கூறு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். 1928ல் இராபர்ட் பிரௌன் என்பவர் 'நீரில் மூழ்கியுள்ள மகரந்தத்துகள்கள் தொடர்ந்து இங்குமங்குமாக ஒழுங்கின்றி இயங்குகின்றன.' என்று கூறினார். 1905ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதற்கான விளக்கத்தை துகள்கற்றை இயற்பியலின் அடிப்படையில் தந்தார். 'நீர்மூலக்கூறுகளினால் இத்துகள்கள் இயக்கப்படுகின்றன. ஒரு துகளினால் கடத்தப்படும் தூரம், அவற்றிற்கு இடைப்பட்ட நேரத்தின் வர்க்கத்திற்கேற்ப அதிகரிக்கிறது. எனக் குறிப்பிட்டார். வெப்பநிலை, துகள்களின் அளவு, இயங்குகின்ற திரவம் இவற்றில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் துகள்கள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை ஐன்ஸ்டீன் தெளிவாக விளக்கினார். 1908ல் ஐன்ஸ்டீனின் கருத்துகளை ஆய்வுகளின் மூலம் பெரின் மெய்ப்பித்தார்.
ரிச்சர்ட் சீய்க்மாண்டி(Richard Zeigmandy), ஹென்றி சீடண்டாப் (Henry Siedentop), என்ற அறிவியலறிஞர்கள் 1903ல் உருவாக்கிய நுட்பமான நுண்ணோக்கிகள் இந்த ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவின. ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தி, நீர் மூலக்கூறின் அளவு மற்றும் அவகாட்ரோ எண்ணிற்கான திடமான மதிப்பையும் கணக்கிட்டார். இந்த ஆய்வுகளுக்காக இவருக்கு 1926ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1913ல் அணுக்கள் என்ற தலைப்பில் இவர் ஒரு நூலை வெளியிட்டார். இவருடைய ஆய்வு விளக்கங்களாக மட்டுமன்றி இந்நூல் கதிரியக்க வேதியல், கரும்பொருள் கதிரியக்கம், மூலக்கூறுகளின் முழுத்தன்மையையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. 1936க்குள் இது பல பதிப்புகள் அச்சிடப்பட்டு சுமார் 30,000 பிரதிகள் விற்பனையாயின. பல மொழிகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது. இது போல் பல நூல்களை பெரின் வெளியிட்டார். ஜெ. ஜெ. தாம்சன் இவருடைய கருவிகளைப் பயன்படுத்தியே தன்னுடைய முடிவுகளை வெளியிட்டார். சார்போனில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகத்தில் இயல் வேதியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பிறகு அத்துறையின் தலைவரானார்.
1896ல்
ராயல் கழகத்தின் ஜூல் பரிசு, 1911ல் ராயல் கழகத்தால் மத்யூக்கி பதக்கம்,
1912ல் போலோக்னாவின் வல்லௌரி (Vallauri) பரிசு, 1914ல் பாரிசின் அறிவியல் கழகத்தினால் லா
கேசு (La Caze)பரிசு போன்ற பரிசுகள் பெற்றார்.
பிரசல்சு,லைகே, கெம், கொல்கத்தா, நியூயார்க், பிரிசுடன், மான்செசுடர் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு
மதிப்பியல் முனைவர் பட்டம் அளித்துச் சிறப்பித்தன. ராயல் கழகம், மற்றும் பெல்சியம், சுவீடன், பிரேக்,
உருமானியா போன்ற நாடுகளில் உள்ள அறிவியல் கழகங்கள் இவரை உறுப்பினராக
ஏற்றுக் கொண்டன. இங்கிலாந்து, பெல்ஜிய அரசுகளின் மதிப்புமிக்க
பட்டங்கள் இவருக்கு அளிக்கப்பட்டன. அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்வதற்கென பிரெஞ்சு
நாட்டில் தேசிய மையம் ஒன்றை அமைக்க இவர் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார்.
1914-18 ஆம் ஆண்டுகளில் நடந்த போரின் போது பொறியாளர் படைக்குத் தலைமை அலுவலராகப் பொறுப்பேற்றார். 1040ல் ஜெர்மானியர் ஊடுருவியபோது இவர் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். ஆல்பர்ட் ஐன்சுடீனின் விளக்கத்தையும் மெய்ப்பித்து, பொருளின் அணுத்தன்மையை உறுதி செய்த சான் பத்தீட்டு பெரென் ஏப்ரல் 17, 1942ல் தனது 71வது அகவையில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1948ல் போருக்குப் பின் இவருடைய பொருள்கள் சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன. இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments:
Post a Comment