Sunday, October 25, 2020

பாரதிதாசன் பல்கலைக்கழக உத்தரவால் மாணவர்கள் குழப்பம்

 பாரதிதாசன் பல்கலைக்கழக உத்தரவால் மாணவர்கள் குழப்பம்

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு கள் நடத்தப்பட்டன. இதற்காக பிரத்யேக இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்த வினாக்களுக்கான விடைகளை மாணவர்கள் எழுதி அந்த விடைத்தாள்களை இணையதளத்தில் பதிவேற்றலாம் அல்லது தாங்கள் படிக்கும் கல்லூரியிலோ அல்லது அருகிலுள்ள கல்லூரிகளிலோ விடைத் தாள்களை ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி, செமஸ்டர் தேர்வுகள் கடந்த செப்.21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்நிலையில் இளங்கலை தேர்வு முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகள் வாயிலாக ஒப்படைக்கப்பட்ட விடைத்தாள்கள் மட்டும் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இணையதளத்தில் விடைத் தாள்களை பதிவேற்றியவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப் படவில்லை. ஆனால், இதை கருத்தில் கொள்ளாமல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுகலை பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க் கையை நேற்று முதல் தொடங்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.


அதன்படி, திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி, மன்னார்குடி மன்னை ராஜகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரி உட்பட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நேற்று முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. அட்மிஷன் கேட்டு வந்த பல மாணவர்களும் தங்களுக்கு தேர்வு முடிவுகள் வராத நிலையில் எவ்வாறு மாணவர் சேர்க்கையில் பங்கேற்க முடியும் என கல்லூரி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இதனால் பேராசிரியர்களும் குழப்பமடைந்தனர்.


இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:


இணையதளத்தில் விடைத் தாள்களை பதிவேற்றியவர்களின் விவரங்களை சேகரிக்கும்போது குழப்பங்கள் நிலவியதால், மாணவர்கள் எப்படியாவது கல்லூரியில் விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என்று கல்லூரி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், அடுத்தடுத்த நாட்களில் கல்லூரிகளிலேயே விடைத்தாட்களை பெரும்பாலான மாணவர்கள் ஒப்படைத்துவிட்டனர். அவ்வாறு கல்லூரியில் ஒப்படைக்கப்பட்ட விடைத்தாள்கள் மட்டுமே திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இணையதளத்தில் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வராததால், பெரும்பாலான மாணவர்கள் மாணவர் சேர்க்கையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.


மாணவர்கள் மதன் மற்றும் லோகேஸ்வரி ஆகியோர் கூறியபோது, “இணையதளத்தில் பதிவேற்றிய விடைத்தாள்களை திருத்தி முடிவுகளை வெளியிடும் வரை மாணவர் சேர்க்கையை நிறுத்திவைக்க வேண்டும்” என்றனர்.


இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளர் சீனிவாச ராகவனிடம் கேட்டபோது, “மாணவர்கள் வெவ்வேறு முறைகளில் விடைத்தாளை பதிவேற்றம் செய்துள்ள தால், அதை பதிவிறக்கம் செய்து திருத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்தான் இதற்கு காரணம். இருப்பினும் மாணவர்களுக்கு அட்மிஷன் பாதிக்கக்கூடாது என்பதற்காக 5-வது செமஸ்டர் முடிவுகளையும் பரிசீலிக்க கல்லூரிகளுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...