Monday, November 2, 2020

பள்ளி, கல்லூரி திறப்பு - கல்வித்துறை சவால்கள் - தினகரன் தலையங்கம்.

 பள்ளி, கல்லூரி திறப்பு - கல்வித்துறை சவால்கள் - தினகரன் தலையங்கம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை மாதத்திற்கு பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அவசரம் காட்டவில்லை. மாணவர்களின் நலன் கருதி கல்வி நிலையங்கள் திறப்பதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதிலும் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான வகுப்புகளும், கல்லூரிகளும் மட்டுமே திறக்கப்பட உள்ளன. கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதில் சில சிக்கல்களையும், சவால்களையும் அரசு எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்னும் 4 மாதங்களில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டிய மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களாகவே பதற்றத்தில் உள்ளனர்.

குறிப்பாக ஆன்லைன் கல்வி அவர்களுக்கு திருப்திகரமாக இல்லை. வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிப்பது போல ஆன்லைன் கல்வியில் பாடங்களை கற்க முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளை இப்போது திறப்பதால் ஆன்லைன் வகுப்புகளுக்கு குட்பை சொல்ல முடியும். அதேசமயம் மாணவ, மாணவிகள் ஓரிடத்தில் மொத்தமாக திரளும் போது நோய் தொற்று காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதிகம். தமிழகத்தில் உள்ள பல கல்வி மையங்களில் மாணவ, மாணவிகள் இடைவெளி விட்டு அமரும் வகையிலான வகுப்பறைகள் கிடையாது. எனவே பள்ளி வளாகம் தொடங்கி, வகுப்பறைகள் வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓரிடத்தில் கூடும்போது நோய் பரவலுக்கு வாய்ப்புகள் அதிகம். மாணவர்களின் எதிர்காலம் கருதி மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளை திறக்கும்போது அதற்கேற்ப சுகாதார வசதிகளையும் அரசு செய்து தரவேண்டும். பள்ளி வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிப்பது, வளாக பராமரிப்பு, வகுப்பறைகளில் போதிய இருக்கை வசதிகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த கல்வி நிலையங்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.

 

அதற்கடுத்தாற்போல் பாடப்பகுதிகள் குறைப்பும் மிக அவசியம். முழு பாடப்பகுதிகளையும் இனிமேல் படித்து மாணவர்கள் முழு ஆண்டு தேர்வை எழுதுவது கடினம். எனவே பாடப்பகுதிகளை குறைத்து, தேர்வுகளை அவர்கள் மனச்சுமையின்றி எதிர்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகள் திறந்த மறுமாதமே மாணவ, மாணவிகள் அரையாண்டு தேர்வை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதற்கேற்ப பாடப்பகுதிகளை குறைப்பது மிக அவசியம். மேலும் பள்ளி, கல்லூரிகளை வரும் 16ம் தேதி திறக்கும்போது, மாணவர்கள், அவர்களை அழைத்து செல்லும் பெற்றோருக்கான போக்குவரத்து வசதிகளும் கேள்விக்குறியாகிறது. தமிழகத்தில் இன்னமும் பஸ், ரயில் போக்குவரத்து சீராகவில்லை.

 

இந்நிலையில் தீபாவளி முடிந்த மறுதினமே மாணவர்கள் தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும், கோவைக்கும், திருச்சிக்கும் பெற்றோரோடு கல்வி நிலையங்களுக்கு செல்லும்போது போக்குவரத்து அடிப்படையில் சிரமங்கள் ஏற்படும். அதை தீர்க்க தேவையான பஸ் மற்றும் ரயில் வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். கொரோனா சவால்களில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவியர் விடுதிகளும் சிக்கி கொள்ள வாய்ப்புகள் அதிகம். முன்பு போல விடுதிகள் பராமரிப்பற்று, அசுத்தமாக காட்சியளித்தால் மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவல் எளிதாகிவிடும். எனவே விடுதிகளில் முறையான சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரவும் அரசு உத்தரவிட வேண்டும். கல்வியை விட மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதை அரசும், கல்வி நிறுவனங்களும் உணர்ந்து செயல்படுவது நல்லது.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...