ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட, அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர், ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் பிறந்த தினம் இன்று (டிசம்பர் 19, 1825).
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் (Albert Abraham Michelson) டிசம்பர் 19, 1852ல் போலந்து நாட்டில், பிரஷ்யாவில் உள்ள 'ஸ்டெரெல்னோ' என்ற ஊரில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சாமுவேல் மைக்கல்சன் ஒரு வணிகர் ஆவார். தாயார் ரோசலியா. இவர் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1855ல் இவரது குடும்பம் போலந்தை விட்டு அமெரிக்காவில் குடியேறியது. முதலில் நியூயார்க், வர்ஜினியா, நெவடா மற்றும் சான் பிரான்சிஸ்கோ என்று பல நகரங்களில் வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. இவர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இறை இருப்பு பற்றி அறியவொணாமைவாதியாகவே(agnostic) இருந்தார். சான் பிரான்சிஸ்கோவில் இவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்த போது தன்னுடைய பள்ளிப்படிப்பை அங்கு மேற்கொண்டார். பொதுப்பள்ளிகளில் சேர்ந்து தன்னுடைய கல்வியைப் பயின்றார். 1899ல் 'எட்னா ஸ்டேன்டன்' என்ற மங்கையை மணந்து கொண்டார். இவ்விணையருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் பிறந்தனர்.
1869ல் அமெரிக்கக் கப்பற்படை அகாதமியில் சிறப்புப்பிரிவு பணியாளராக அப்போதைய அமெரிக்கத் தலைவர் 'யூலிசஸ் எஸ் கிராண்ட்' என்பவரால் நியமிக்கப்பட்டார். அங்கு 4 ஆண்டுகள் பணி புரிந்த போது, இவர் சரியாகப் பயிற்சிப் பெற்றாரோ இல்லையோ, இயற்பியல் பிரிவுகளான, ஒளியியல், வெப்பவியல், பருவகால இயல் முதலிய துறைகளையும் மற்றும் சித்திரம் வரைதலையும் கற்றுத் தேர்ந்தார். 1873ல் பட்டப்படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். அங்கேயே 1875 முதல் 1977 வரை இயற்பியல் மற்றும் வேதியல் போதிப்பவராகப் பணியாற்றினார். 1875ல் 'கிளெவ்லாண்ட்' என்னும் இடத்தில் அமைந்திருந்த பயனுறு அறிவியலுக்கான கேஸ் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1880-82ல் ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியலறிஞரின் மேற்பார்வையில் பெர்லினிலும், பாரிசிலும் தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
1889ல்
கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1892ல் புதிதாக உருவாக்கப்பட்ட சிகாகோ பலகலைக்கழகத்தில் பேராசிரியராக
அமர்த்தப்பட்டார். அப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட இயற்பியல் துறையின் முதல்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பின் அதில் பணியாற்றினார்.
1877ல் 'அன்னபோலிஸ்'
என்ற இடத்தில் இருந்தபோது வகுப்பில் அறிவியல் ஆய்வு ஒன்றினைச்
செய்துகொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதியாக ஒளியின் வேகத்தைக் கண்டறிவதற்கான
முயற்சியை மேற்கொண்டார். 1867ல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த
வானியலறிஞர் 'அர்மெண்ட் பிசியூ' விண்மீன்களின் அளவை அளவிடக் குறுக்கீட்டு மானி ஒன்றைப் பயன்படுத்த
முயன்றார். ஆனால் மைக்கல்சனோ 1887ல் தொடங்கி பல ஆய்வுகளில் ஈடுபட்டுப்
பல ஆடிகளையும் ஒளி ஓரளவு ஊடுருவும் கண்ணாடிகளையும் பயன்படுத்தி ஒரே
மூலத்திலிருந்து வெளிவரும் தனித்தனி ஒளிக்கதிர்களை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு முறையை
உருவாக்கினார். குறுக்கிடும் பல ஒளிக்கதிர்களை ஒருங்கிணைக்க அவை கடந்துவரும் தூரம்,
திசை, இவைகளைப் பொருத்தவகையில் அமையுமாறு ஒரு
குறுக்கீட்டு மானி ஒன்றை அமைத்தார்.
இந்த அண்டம்
முழுவதும் திரவ வாயு நிலைக்கு இடைப்பட்ட ஈதர் என்ற கண்ணுக்குப் புலனாகாத ஊடகம் விரவியுள்ளதாக
அறிவியலறிஞர்கள் கருதினர். இதன் வழியாகத்தான் ஒளி ஊடுருவிச் செல்வதாகவும் கூறினர்.
மைக்கல்சன், மார்லி என்பவரோடு இணைந்து L வடிவக் கருவி ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒரே
நீளமுள்ள வெவ்வேறு செங்குத்தான பாதைகளில் செலுத்தினார். பிறகு அவற்றை மீண்டும்
ஒன்றாக இணைத்தார். ஈதர் என்ற ஊடகம் இருந்திருந்தால் அங்கங்கே அவற்றின்
அடர்த்திகளுக்கேற்ப செங்குத்தான பாதைகளில் சென்று திரும்பிய ஒளிக்கதிர்கள்
மீண்டும் இணையும்போது சிறிதளவு நேர மாறுபாடு இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு ஏற்படவில்லை என்பது இவர்களின் ஆய்விலிருந்து தெரியவந்தது.
அவ்வாறு ஏற்படாததால் ஈதர் என்ற ஊடகம் எல்லா இடத்திலும் இல்லை என்று நிரூபித்தனர்.
இந்த ஆய்வு "மைக்கல்சன்-மார்லி ஆய்வு" என்று புகழ் பெற்றது.
மைக்கல்சனுக்கு முன்னால் பல அறிவியலறிஞர்கள் ஒளியின் திசைவேகத்தைக் கண்டறிவதில் ஈடுபட்டிருந்ததனர். ஆனால் அவர்கள் கண்டறிந்த அளவுகள் துல்லியமாக அமையவில்லை. மிகக்குறைந்த செலவில் வெறும் ஆடிகளை வைத்தே தனது ஆய்வினை மேற்கொண்ட மைக்கல்சன் ஒளியின் திசைவேகத்தைத் துல்லியமாகக் கண்டறிவதில் 1878ல் வெற்றிபெற்றார். தன்னுடைய ஆய்வுகளை மீண்டும் மீண்டும் பலமுறை செய்து பார்த்தார். 1920ல் வில்சன், சான் ஆன்டோனியா என்ற 22 மைல்களுக்கிடையேயான இரு குன்றுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் முற்றிலும் புதியதாக வடைவமைக்கப்பட்ட ஆடி அமைப்புகளை அமைத்து ஒளியின் திசைவேகத்தை மிகவும் துல்லியமாகக் (299,940 km/s) கண்டறிந்தார். இவருடைய குறுக்கீட்டு மானியின் உதவியால் ஆல்பா ஆரியனிஸ் என்ற வின்மீண் விட்டத்தை அளந்துகாட்டினார்.
1900 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல்கழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1904ல் இவருடைய ஆய்வுகளின் சிறப்பறிந்து இவருக்கு மத்யூக்கி பதக்கம் வழங்கப்பட்டது. 1907ல் ஒளியியலில் இவருடைய ஆய்வுகளுக்காக, இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெறும் முதல் அமெரிக்கராக இவர் விளங்கினார். 1907ல் இவருக்கு காப்ளே பதக்கம் வழங்கப்பட்டது. 1910-11ல் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் தலைவராக அமர்த்தப்பட்டார். 1918ல் சிகாகோ திரும்பினார். அந்நாட்டின் தேசிய அறிவியல் அகாதமியின் தலைவராக 1923-27 வரை பணியாற்றினார். 1912ல் பிராங்க்ளின் நிறுவனம் எலியட் கிரைசன் பதக்கத்தையும், 1916ல் தேசிய அறிவியல் கழகம், டிரேப்பர் பதக்கத்தைவழங்கியது. 1923ல் ராயல் விண்ணியல் கழகம், தங்கப் பதக்கத்தை வழங்கியது. 1929ல் இயற்பியல் கழகம் சிறப்புப் பதக்கத்தையும் இவருக்கு வழங்கி இவரைப் பாராட்டிச் சிறப்பு செய்தன.
ராயல்
விண்ண்வெளிக் கழகத்தின் சிறப்பு உறுப்பினராக, லண்டன்
ராயல் கழகத்தின் உறுப்பினராக அமெரிக்க ஒளியியல் கழகத்தின் உறுப்பினராக இப்படி பல
சங்கங்களில் நியமிக்கப்பட்டு அவற்றின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். 1925ல்
மதிப்பியல் பேராசிரியராகப் பல பல்கலைகழகங்களில் பணியாற்றினார். அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளில் அமைந்த அறிவியல் சார்ந்த அமைப்புகள் இவரைத் தங்கள் உறுப்பினராக
அறிவித்துப் பெருமைப்படுத்தின. அதே போல், அமெரிக்கா
மற்றும் பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மதிப்பியல் முனைவர் பட்டங்களை
வழங்கிப் பாராட்டின.
மைக்கல்சனின்
ஆய்வுகள் தன்னுடைய சார்புக் கொள்கையின் முன்னேற்றத்திற்கு உதவியது என ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் மனமாறப் பாராட்டியுள்ளார். 1929ல் அனைத்துப்
பதவிகளிலிருந்தும் விலகி பாசதேனா என்ற இடத்தில் அமைந்திருந்த மவுண்ட் வில்சன்
வானியல் ஆய்வு மையத்தில் சேர்ந்து தன்னுடைய ஓய்வுகாலப் பணியை மேற்கொண்டார். ஒளியின்
வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் மே 9,
1931ல் தனது 78வது அகவையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இவ்வுலகை
விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment