Wednesday, December 9, 2020

தமிழ்வழி பயின்றோருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு மசோதா:ஆளுநர் ஒப்புதல்.

தமிழ்வழி பயின்றோருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு மசோதா:ஆளுநர் ஒப்புதல்.

தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத் திருத்தத்திற்கு கடந்த 8 மாதங்களுக்குப் பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவைக் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதன்படி, பட்டப்படிப்பு மட்டுமல்லாது, 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.


தமிழ்நாட்டில் தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் அளவுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் தற்போது அமலில் இருந்துவருகிறது. ஆனால், பட்டப்படிப்பைத் தமிழில் படித்தால், இந்த 20 சதவீத முன்னுரிமைப் பிரிவில் இடம் பெற்றுவிட முடியும். இந்த நிலையில், பள்ளிக்கூடப் படிப்பைத் தமிழில் படிக்காமல் பட்டப்படிப்பைத் தமிழ் வழியில் படித்தவர்கள்கூட இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றனர். இந்த நிலையில், இதனை மாற்றியமைக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்தத்தைத் தமிழக அரசு கொண்டுவந்தது.

அதன்படி, பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுள்ள பணிகளுக்கு, பட்டப்படிப்பை மட்டுமல்லாமல், பத்தாம் வகுப்பையும் மேல்நிலை வகுப்பையும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். பள்ளிக்கூடச் சான்றிதழ்களில் இது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பைக் கல்வித் தகுதியாகக் கொண்டுள்ள அரசுப் பணிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத் திருத்தமானது ''2020-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத் திருத்தம்" என்று அழைக்கப்படும். இந்தத் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் கடந்த 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் நடத்த நேரிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இட ஒதுக்கீடு என்ன ஆயிற்று என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதலுக்காக ராஜ்பவனில் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த, “2020-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டத் திருத்தத்துக்கு" ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...