மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார், வைக்கம் வீரர், ஈ.வெ.இராமசாமி நினைவு தினம் இன்று (டிசம்பர் 24, 1973).
ஈரோடு வெங்கட்ட
இராமசாமி (E.V. Ramasamy) செப்டம்பர் 17, 1879ல்
தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை
தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான
வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட
சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா
மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர்கள் ஆவர். 1929ல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும்
விதமாக, செங்கல்பட்டு
சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின்
பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.
இராமசாமி மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல்
பெற்றவராவார். அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி
பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம்
வயது முதல் மேற்கொண்டார்.
தன் தந்தையின்
விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக்
(உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார்.
அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து
புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே
வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக்
கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின்
மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப்
போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும், இம்மக்களைக்
காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.
இராமசாமியின் 19
வது வயதில் அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல்
நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின்
புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும்
இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை
ஈன்றெடுத்தார். அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப்
பிள்ளைப் பேறு இல்லை. 1904ல்
இராமசாமி, இந்துக்களின்
புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச்
சென்றார். அங்கு
நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள்,
பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற
அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.
இதனிடையே
காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது.
பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில்
இராமசாமிக்கு பிராமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது.
இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை
தாளமாட்டாமல் பிராமணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறி
உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர்
யாரும் இந்து சாத்திரத்தின்படி, இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து
தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார். பசித்தாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில்
விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார்.
பிராமணரல்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிராமணரல்லாதாருக்கு உணவு வழங்க
பிராமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து
சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றதாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை
அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக
அதுவரை இறைப்பற்றுள்ளவராக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின், தன்னை ஒரு இறைமறுப்பாளராக
மாற்றிக்கொண்டார்.
இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார். கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார். வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921ல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.
1922ல் இராமசாமி சென்னை இராசதானியின்
(மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்
பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும்
இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரஸ் கட்சி
ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார்.
அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும்
வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது.
அதனால் 1925ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில்
உள்ளது. கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும்
கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
1924ல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப்
(சத்தியாகிரகம்) போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டது.
வைக்கம்
போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான
டி.கே.மாதவன் என்பவரால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரசில் தீவிரமாகச்
செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. டி.கே.
மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக
ஆனதும், அந்தப்
போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அன்னி பெசண்டின் உதவியையையும் பின்னர்
காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தைக் காந்தியின் வழிகாட்டலுடன்
(சத்தியாக்கிரகப்) அறப்போராட்டமாக முன்னெடுத்தார். நாடெங்கிலும்
இருந்து காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். வினோபா பாவே
அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ.பி.கேசவமேனன், இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன்
போன்றவர்களும் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் இருந்து ஈ.வே.ரா, கோவை
அய்யாமுத்து, எம்.வி.நாயுடு ஆகியோர்கள் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ.வே.ரா
முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். ஈ.வே.ரா அந்தப்போரில் பங்கெடுத்தது சில
மாதங்கள் மட்டுமே. ஆனால் வைக்கம் போராட்டம் மேலும் பல மாதங்கள் நீடித்தது.
ஏப்ரல் 14 அன்று
இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து
கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காந்தியின் அறிவுறுத்தலின்படி, இப்போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம்
சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை. இராமசாமி கைது செய்யபட்ட போதிலும் இராமசாமியின்
தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தைத் தொடர்ந்ததால் இச்சட்டம்
விலக்கிக்கொள்ளப்பட்டது. அதுமுதல் இராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்களால்
அழைக்கப்படலானார். விடுதலைக்கான பல போராட்டத்தில் கலந்து கொண்ட இராமசாமிக்கு
கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது. நடுவே போராட்டம்
வலுவிழந்தபோது காந்தியும், ஸ்ரீ நாராயணகுருவும் நேரில் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள்.
கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு பங்கெடுத்து நடத்திய ஒரே
போராட்டம் இதுவே. கடைசியில் வெற்றி ஈட்டியது. அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில்
தேவதாஸ் காந்தியும் போராட்டக்குழு சார்பில் ராஜாஜியும் கையெழுத்திட்டனர். பின்னர்
இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர்
இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது.
இராமசாமி
மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய
ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின்
விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி
வந்தனர். சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் தாம் பழம்பெரும்
திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை
அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது. சுயமரியாதை இயக்கம் 1925ல் இராமசாமியால்
தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின்
ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத்
தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து
மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன.
பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின.
பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம்
வலியுறுத்தியது.
1937ல் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில், இந்தி கட்டாய
மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக
வெடித்தது. நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும்
இராமசாமி இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938ல் பலர் கைது
செய்யப்பட்டுச் சிறையில் இராஜாஜி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே
வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது. இராமசாமி
பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். 1944ல் நீதிக்கட்சித் தலைவராக இராமசாமி
முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என இராமசாமியால்
பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும்
இராமசாமி நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத்
தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பி.டி.ராஜன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று
அணி செயல்பட்டது.
1949ல் இராமசாமியின் தலைமைத் தளபதியான காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை இராமசாமியிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். இந்த பிரிவுக்கு இராமசாமி மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார். அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். இராமசாமி தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், ஜூலை 9, 1948 அன்று இராமசாமி, தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர். இராமசாமி 1957 தேர்தலில் காங்கிரஸை முழுமையாக ஆதரித்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களைப் பிடித்தது.
தந்தை பெரியார்
கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில்
சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப்
பேச்சு ஆகும். மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண்
விடுதலைக்காகவும் போராடிய ஈ.வெ.இராமசாமி டிசம்பர் 24, 1973ல் தனது 94வது அகவையில் வேலூரில்
இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக்
கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக
அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.
இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம்
வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ்,
இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு
கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment