Saturday, December 5, 2020

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார்.

மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல், 32, சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியராக தேர்வாகியுள்ளார். 

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த, வர்க்கி அறக்கட்டளை என்ற அமைப்பு, சர்வதேச அளவில், கல்விப் பணியில் சிறப்பான சேவை செய்து வரும் ஆசிரியரை தேர்ந்தெடுத்து, ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது. இந்த அறக்கட்டளையை, இந்தியாவை சேர்ந்த கல்வியாளரும், சமூக சேவருமான சன்னி வர்க்கி என்பவர், 2014ல், லண்டனில் நிறுவினார். இதற்கு, யுனெஸ்கோ எனப்படும், ஐ.நா., கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு, பொருளுதவி அளித்து வருகிறது.


சர்வதேச அளவில், நடப்பு ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியர் விருதுக்கு, 140 நாடுகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். இதில் இருந்து, 10 ஆசிரியர்கள், இறுதி சுற்றுக்கு தேர்வாகினர். அதில், மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில், பரித்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியரான, ரஞ்சித்சின்ஹ் திசேல், இந்த ஆண்டுக்கான, சிறந்த ஆசிரியராக நேற்று அறிவிக்கப்பட்டார். இவருக்கு, 7.50 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையில், 50 சதவீதத்தை, இறுதி சுற்றுக்கு தேர்வான, மீதமுள்ள, ஒன்பது ஆசிரியர்களின் கல்வி பணிக்காக பகிர்ந்தளிக்க போவதாக, ரஞ்சித் அறிவித்தார்.

பரித்வாடி கிராமத்தில், மாட்டு கொட்டகையுடன் சேர்ந்தாற்போல் பாழடைந்து கிடந்த ஆரம்ப பள்ளியில், 2009ம் ஆண்டு, ரஞ்சித்சின்ஹ் பணியில் சேர்ந்தார். அங்கு, கல்வி கற்பிப்பதில் பல சீர்திருத்தங்களை உருவாக்கினார். பாடங்களை தாய்மொழியில் மொழிபெயர்த்தார். பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவித்தார். இதையடுத்து, சிறுமியர் திருமணம் அக்கிராமத்தில், 100 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தகங்களில், க்யூ.ஆர்., கோடு தொழில்நுட்பத்தை புகுத்தி, மாணவர்கள், 'ஆடியோ, வீடியோ' வாயிலாக பாடங்களை படிக்கும் முறையினை அறிமுகம் செய்தார். பிரச்னைகளுக்கு உரிய இரு நாடுகளின் மாணவர்களை, 'ஆன்லைன்' வாயிலாக உரையாட வைத்து, அவர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியையும் செய்து வருகிறார். இதில், இந்தியா - பாகிஸ்தான், பாலஸ்தீனம் - இஸ்ரேல், ஈராக் - ஈரான், அமெரிக்கா - வட கொரியா நாடுகளைச் சேர்ந்த, 19 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...