Saturday, January 23, 2021

கொரோனா காலம்: ஆசிரியர் பணியும், பாதுகாப்பு வழிகாட்டுதலும்..!

 கொரோனா காலம்: ஆசிரியர் பணியும், பாதுகாப்பு வழிகாட்டுதலும்..!

தமிழ்நாட்டில், 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகளுக்கு பழகிப்போன மாணவர்களும், ஆசிரியர்களும் மீண்டும் சுறுசுறுப்பான பள்ளி வாழ்க்கைக்கு திரும்புவது சாத்தியமா...? என்ற கேள்விக்கு, சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கல்வியாளர் கலைவாணி சுரேஷ் பதிலளிக்கிறார். மேலும் கொரோனா கால ஆசிரியர் பணி அனுபவத்தை பகிர்ந்து கொள்வதுடன், கொரோனா காலத்தில் பள்ளி செல்லும் ஆசிரியர்கள் எப்படி எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் விளக்குகிறார். அதை கேட்போம்.  

                              

 கொரோனா காலம் ஆசிரியர்களை எந்தளவிற்கு சோதித்தது?
பள்ளி மாணவ-மாணவிகளை தினமும் சந்திப்பதில்தான் ஆசிரியர்களின் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடங்கியிருக்கிறது. அதேபோல கரும்பலகையில் பாடம் நடத்துவதுதான், அவர்களின் பிரதான பணி. ஆனால் கொரோனா சமயத்தில் இவை இரண்டுமே தடைபட்டு போனது. மாணவ-மாணவிகளை நேரில் பார்க்கமுடியவில்லை. அவர்களுக்காக பாடமும் நடத்த முடியவில்லை. கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர்கள் ஏராளமான சோதனைகளை சந்தித்திருந்தாலும், மாணவர் களிடமிருந்து விலகி இருந்ததும், ஆசிரியர் வாழ்க்கையில் இருந்து விலகி இருந்ததும் அவர்களை அதிகமாக சோதித்தது. பெரிதாக பாதித்தது.  

பள்ளிக்கூடமே கதி என வாழ்ந்த ஆசிரியர்களுக்கு ஊரடங்கு சுகமான அனுபவமா? சோகமான அனுபவமா?
ஊரடங்கு வாழ்க்கை ஆசிரியர்களுக்கு மோசமான அனுபவங்களையே வழங்கியது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான பந்தம் கொஞ்சம் நஞ்சம் அல்ல, கிண்டர்கார்டன் எனப்படும் மழலையர் வகுப்பில் தொடங்கி பிளஸ்-2 வரை மொத்தம் 15 ஆண்டுகள் நெடியது. பள்ளி வாழ்க்கையில்தான், ஒரு குழந்தை சமூக அந்தஸ்து நிறைந்த மனிதனாக, பிரபலமானவராக, தொழில்துறை நபராக, சமூக ஆர்வலராக வளர்க்கப்படுகிறான். அப்படிப்பட்ட பந்தம், தடைபடும்போது, மனவருத்தம் இருக்கத்தான் செய்யும்.  

ஊரடங்கு சமயத்தில் பள்ளிக்கூட வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் சமாளித்தது எப்படி?
பொதுவாக ஆசிரியர்களுக்கு இருவேறுவிதமான வாழ்க்கையும், உலகமும் உண்டு. ஒன்று பள்ளி, மற்றொன்று குடும்பம். ஆனால் கொரோனா இவை இரண்டையும், ஒன்றாக்கி ஆசிரியர்களை திக்குமுக்காட செய்தது. வீட்டில் இருந்துகொண்டு, குடும்ப தலைவி பொறுப்பையும், ஆசிரியர் கடமையையும் சரிவர செய்யவேண்டும். தன்னுடைய குழந்தையையும் ஆன்லைன் வகுப்பிற்கு ஆயத்தப்படுத்தி, தன்னையும் ஆன்லைன் வகுப்பிற்கு தயாரிக்கவேண்டும். எல்லோருக்குமான ஸ்மார்ட்போன், மொபைல் டேட்டாக்களை உறுதிப்படுத்தி, பொறுப்புள்ள அம்மாவாக குழந்தையின் வீட்டுப்பாடத்தை முடித்து கொடுக்கவேண்டும். அதேசமயம் ஆசிரியராக, மாணவர்களுக்கு வீட்டுப்பாடமும் கொடுக்கவேண்டும். இதற்கிடையில், துணி துவைப்பது, சமைப்பது, வீடு துடைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வீட்டு வேலைகளையும் சரிவர முடிக்கவேண்டும்.  

ஆன்லைன் வகுப்பிற்கும், நேரடி வகுப்பிற்கும் என்ன வித்தியாசம்? எது சுலபமாக இருந்தது?
ஆன்லைன் வகுப்புகளின் மூலம் மாணவர்களை கண்காணிக்க, கட்டுப்படுத்த, கற்பிக்க, ஒருங்கிணைக்க, மதிப்பிட ரொம்பவே கடினமாக இருந்தது. ஆனால் நேரடி வகுப்பில் மாணவர்களை சுலபமாக கையாள முடியும். வகுப்பறையில் பாடங்களை முகம் பார்த்து, ஆழமாக கற்பிக்கமுடியும். உடல்மொழிகளை பார்த்தே, பாடத்தின் புரிதலையும் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை ஒருமுகப்படுத்துவதே பெரிய போராட்டமாக இருக்கும். புத்தகத்தில் இருக்கும் பாடத்திட்டத்தை கற்றுக்கொடுப்பதோடு ஆசிரியர் பணி முடிந்துவிடுவதில்லை. பாடத்திட்டத்தோடு அவர்களை நல்வழிப்படுத்துகிறோம். இலக்கை நோக்கி முன்னேற செய்கிறோம். அவர்களை ஊக்கப்படுத்துகிறோம். இத்தகைய ஆசிரியர்-மாணவர் பந்தத்தை ஆன்லைன் வகுப்பில் வளர்க்கமுடியாது.  

வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வீட்டில் பாடம் நடத்தி பழகிப்போன ஆசிரியர்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்?
ஆசிரியரின் வாழ்க்கையே பாடம் நடத்துவதுதான். அது ஆன்லைன் பாடமாக இருந்தாலும் சரி, நேரடி வகுப்பு பாடமாக இருந்தாலும் சரி, ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடுதான் பாடம் நடத்துவார்கள். ஏனெனில் முதல் பெஞ்ச் மாணவர்களில் தொடங்கி கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரைக்கும், எல்லோருக்கும் கல்வியை கற்றுக்கொடுத்து, அவர்களை உயர்ந்த நிலையில் அமர வைப்பதுதான் ஆசிரியர்களின் குறிக்கோளாக இருக்கும். அதனால் வெகு நாட்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டாலும் ஆனந்தமாகவே செல்வார்கள். கிட்டத்தட்ட ஒரு கல்வி ஆண்டிற்கு பிறகு தங்களுடைய பள்ளி மாணவ-மாணவிகளை சந்திக்கும் உற்சாகமும், ஆசிரியர்களை கூடுதலாக குஷியாக்கி இருக்கும் என நினைக்கிறேன். மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முடங்கி இருந்த ஆசிரியர்களுக்கு, பள்ளி திறப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.  

பேரிடர் காலங்களில் பணியாற்றும் பயிற்சிகள், ஆசிரியர் பயிற்சியில் சேர்க்கப்படுவது அவசியமா?
நிச்சயமாக..! கொரோனா வைரஸ் உலகிற்கே புது பாடத்தை கற்பித்திருக்கிறது. தடுப்பு மருந்து இல்லாததால்தான், கொரோனா உலகையே ஆட்டிப்படைக்கிறது. இருப்பினும் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக பராமரிப்பதினால், இதுபோன்ற வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். இதை முன்னிறுத்தி, ஆசிரியர் பயிற்சியில் பிரத்யேக பாடத்திட்டத்தை சேர்ப்பது அவசியமாகிறது. இதற்காக பிரத்யேக மருத்துவர் குழு அமைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதினால், ஆசிரியர்கள் வழியாக மாணவர்களுக்கும், மாணவர்கள் வழியாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு பாடத்தை கடத்தலாம். அதேபோல ஆன்லைன் கல்வி முறையை ஆசிரியர் பயிற்சியில் சேர்ப்பதும் கட்டாயமாகிறது. ஆன்லைனில் குழந்தைகளை கையாளும் விதம், சுவாரசியமாக பாடம் நடத்தும் முறைகளை கற்றுக் கொண்டால், பேரிடர் சமயங்களை சுலபமாக கையாளலாம். அதேசமயம் எல்லா பள்ளிகளிலும், ஆசிரியர்-மாணவர் வீடுகளிலும் டிஜிட்டல் வகுப்பறை அமைப்பது நல்லது. அதில் ஒரு லேப்டாப், ஒரு மைக் கட்டாயம் இடம்பெறவேண்டும். ஏனெனில் ஆன்லைன் வகுப்பிற்கு நாம் எப்போதும் தயாராக இருப்பது நல்லது.  

வெகு நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை ஆசிரியர்கள் எப்படி கையாள வேண்டும்?
மாணவர்களை நட்புறவோடு வரவேற்க வேண்டும். அசாதாரணமான சூழ்நிலையை எப்படி கையாண்டனர், தங்களை எப்படி தற்காத்துக் கொண்டனர், நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவு செய்தனர் என்பவற்றை கேட்டறிந்து, அவர்களை பாராட்டலாம். மேலும் எதிர்க் காலத்தில் இப்படி ஒரு சூழல் வந்தால், அதை கையாளும் விதத்தை கற்றுக்கொடுங்கள். இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் பொதுத் தேர்வுகளை அவர்கள் பதற்றமின்றி, உற்சாகமாக எதிர்கொள்ள பாதை அமைத்து கொடுங்கள். அவர்கள் விரும்பும் வகையில் கல்வி கற்றுக்கொடுத்து, பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துங்கள். அவர்கள் வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றுங்கள்.  

ஆன்லைன் வகுப்பை போன்று, ஆன்லைன் தேர்வு முறை சாத்தியமா? அதை கொண்டு மதிப்பெண் அளவிட முடியுமா?
இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் தேர்வு முறைகள் நடைமுறையில் உள்ளன. கூகுள் மீட் வழியாக கேள்வித்தாள்கள் பகிரப்பட்டு, மதிப்பெண்கள் மதிப்பிடப்படுகின்றன. வெளிநாடுகளிலும் ஆன்லைன் தேர்வுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அதனால் எதிர்காலத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. கல்வி பணியில் 26 ஆண்டுகள் அனுபவமிக்கவரான கலைவாணி, தனியார் பள்ளியின் முதல்வராக செயல் படுகிறார். ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்துவதோடு கல்வித்துறையில் ஆலோசகராகவும் திகழ்கிறார். ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கிறார்.  

கொரோனா அச்சுறுத்தலோடு பள்ளிக்கு செல்வதிலும், பாடம் நடத்துவதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை கூறுங்கள்? 

மத்திய-மாநில அரசுகள் கொரோனாவிற்கான விழிப்புணர்வு வழிகாட்டுதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதை ஆசிரியர்கள் சரிவர கடைப்பிடித்தாலே போதுமானது. தன்னுடைய பள்ளி மாணவ-மாணவிகளும் அதை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தன்னையும் பாதுகாத்து, தன்னுடைய பள்ளி மாணவர்களையும் பாதுகாக்கும் கடமை ஆசிரியர்களின் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல், இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்தல், மாணவ-மாணவிகள் கூட்டம் கூடுவதை தவிர்த்தல், குழுவாக சேர்ந்து படிப்பதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. மேலும் மாணவர்கள் கேன்டீனில் கூடுவது, பிரேயர் அரங்கில் கூடுவதையும் தவிர்க்கவேண்டும். ஒரே சமயத்தில் கூட்டமாக கழிவறைக்கு செல்வதையும் தவிர்க்கவேண்டும். குறிப்பாக அடுத்தவரிடமிருந்து நோட்டு-புத்தகங்கள், பேனா-பென்சில்களை கடன் பெறுவதையும் அறவே தவிர்க்கவேண்டும். கட்டாயம் முககவசம் அணிந்தே இருக்கவேண்டும்.

Source By: Dailythanthi

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...