Saturday, January 23, 2021

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி சுதந்திரப் போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 23, 1897).

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி சுதந்திரப் போராட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 23, 1897). 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose) ஜனவரி 23, 1897ல் ஒரிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது. இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால், சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார். ஐந்து வயதான போது, கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913 தேர்வில் கல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியோர்களின்பால் ஈடுபாடுடையவராயும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின்பால் ஈடுபாடு கொண்டார். 

துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன், தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார். அப்போது, வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு, சுபாசின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து, பின்னாளில் தனது நண்பரான திலீப்குமார் ராயிடம், யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ, அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது. எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது. அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன். இன்னொன்றும் சொல்லி விடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் (பிரம்மானந்தர்), வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்," என்று குறிப்பிட்டுள்ளார். தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார். துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால், தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போசும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர். 

இதனால், தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன், 1917 ஆம் ஆண்டு, இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன், மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார். அக்காலத்தில், நாட்டுச் சூழ்நிலை பற்றி, அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார், இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது, லண்டனுக்கு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார். தன் படிப்பைத் தொடர்ந்த போஸ், 1920ல் (லண்டனில் நடந்த) இந்திய மக்கள் சேவைப் படிப்புக்கான ("இந்தியக் குடிமைப் பணி" எனப்படும் ஐ.சி.எஸ்.) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர், இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார். வழக்குரைஞரான சி. ஆர். தாஸ், தன் தொழிலை விட்டுவிட்டு, ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ், கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம், தான் தாய் நாடு திரும்பியதும், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று, சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால், தான் ஏற்றுக் கொள்வதாகவும், பதவி துறந்ததைப் பாராட்டியும், சி. ஆர். தாசும் மறுகடிதம் அனுப்பினார்.

 Netaji - GIF on Imgur

இக்காலகட்டத்தில் தான், தென்னாப்பிரிக்காவிலிருந்து, இந்தியா திரும்பியிருந்த மகாத்மா காந்தியும், இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும், காங்கிரசின் தலைமையின் கீழ் விடுதலை எழுச்சி பெற்றிருந்தனர். 1921ல், மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ், மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து, சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ், சித்தரஞ்சன்தாசின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்றுக் கொண்ட சி.ஆர்.தாசும், அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன், திறமைமிக்க அவரது குடும்பப் பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக, 25 வயதே நிரம்பிய போசை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்சில் படிக்கும் போது, மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ், தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம், சொற்பொழிவு ஆற்றியதுடன், பாடமும் கற்பித்தார். 1922ல், வேல்ஸ் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப, பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும், வேல்சு இளவரசரை வரவேற்க, நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால், சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை, இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்சு இளவரசர் வந்தடையும் போது, நாடு முழுதும் எதிர்க்க, காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கிலேய அரசாங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.

 Happy Independence Day | Happy independence day gif, Independence day gif,  Happy independence day india

இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும், வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது, அங்கு மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்தது. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோசை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு, போசின் தலைமையிலான தொண்டர் படையை, சட்ட விரோதமானது என அறிவித்து, போசையும், சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் சவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைதானதால், மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும், கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடத்தப்பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ், 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது, காந்தியும் ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் ஆகியவற்றை விரிவுபடுத்தியிருந்தார். ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய, ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போசுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது. 

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக, 1940 சூலையில், நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானியப் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரித்தானியாவின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி இரகசியக் காவலர்கள் சாதாரண உடையில், 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். ஜனவரி 26, 1941 அன்று இரவிலிருந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும், இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.

 Netaji Subhas Chandra Bose! by Surajit on Dribbble

ஜனவரி 15, 1941 ஆம் நாள், நேதாஜி ஒரு முசுலிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெசாவர் நகரை  அடைந்து, இந்தியாவின் எல்லையைக் கடந்தார். பின்னர் ஆப்கானித்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார். பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர். அக்டோபர் 21, 1943ல், சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை சப்பான், இத்தாலி, செருமனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது. அது மட்டுமல்ல; சப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார். 


போஸ், 'இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும்' என்ற உறுதியுடன், அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில், இந்திய காங்கிரஸ் சபை, 'படிப்படியாக விடுதலை பெறுவதை' ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில், பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக, இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது. போசு, இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும், கட்டுப்பாடுகள் தகர்ந்ததால், காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். 'காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது' என்றும், 'பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவதே விடுதலைக்கான வழி' என்றும் கருதினார். இவர் ஃபார்வர்ட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். 'இரத்தத்தைத் தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிறேன்' என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போதும், இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம், நாட்சி ஜெர்மனி, சப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்காசியாவில் இருந்த இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டும், நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும், இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார். 

சுபாஷ் சந்திர போஸ், பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார். அவரது சொந்த சாமான்கள் கொண்ட சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார். சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும், தேசியவாத, சமூக சிந்தனையும், சீரமைப்பு எண்ணங்களும், சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும், இவரிடம் மதவெறியோ, பழைமைவாதமோ இருக்கவில்லை. சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார். இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில், பெண்களுக்கென தனிப் பிரிவான 'ஜான்சி ராணி படை'யைத் தொடங்கியவர். ஒரு முறை, ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை, வேறு யாரோ என்று எண்ணி, கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல், அவருடைய பாதுகாப்பு சேவையைப் பாராட்டி, அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. 



இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகஸ்ட் 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா, “நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!”. 1992ல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால், சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

 Salute To True Hero – Netaji Subash Chandra Bose | Specials | Premium  Wishes #greetingcards #ecards #goodmorning … | Inspirational quotes,  Inspirational words, Hero

சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு செப்டம்பர் 17, 2015 ல் அன்று வெளியிட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பசும்பொன் தேவரின் அழைப்பை ஏற்று 1939 மதுரைக்கு வருகை புரிந்த சமயம் மேடையில் பேசும்போது நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என மேடையில் முழங்கியவர்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.






No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...