Sunday, January 3, 2021

கொரோனா தடுப்பூசி: கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியது இந்தியா.

கொரோனா தடுப்பூசி: கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியது இந்தியா.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான வேணுகோபால் ஜி சோமனி, "தடுப்பூசிகள் 100 சதவீதம் பாதுகாப்பானது. மிகச் சிறிய அளவில் பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் கூட நாங்கள் மருந்தை அனுமதிக்கமாட்டோம். எல்லா தடுப்பூசிகளிலும் காய்ச்சல், வலி மற்றும் சில ஒவ்வாமைகள் இருக்கும். ஆனால், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பது முற்றிலும் தவறான தகவல்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த தடுப்பூசிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் மூலம், கொரோனா வைரஸ் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை, டி.சி.ஜி.ஐ அமைப்பு அனுமதித்திருப்பது ஒவ்வொரு இந்தியனையும் பெருமை அடைய செய்யும். சுயசார்பு இந்தியா என்ற கனவை நனவாக்க, நம் நாட்டின் அறிவியலாளர்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது" எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

"இந்த நெருக்கடியான சூழலிலும் சிறப்பாக தங்கள் பணிகளை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என எல்லா கொரோனா போராளிகளுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம். எப்போதும் உளமாற அவர்களுக்கு நன்றி கூறுவோம்" என பிரதமர் நரேந்திர மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பேட்டி

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் மேம்படுத்தி வரும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று (ஜனவரி 2) மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை கட்டுப்பாடுகளுடன் வழங்கலாம் என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தடுப்பூசி மருந்து போடும் தேவைக்காக 50 மில்லியனுக்கும் அதிகமான தமது தடுப்பூசி மருந்து தயாரிப்பை சீரம் நிறுவனம் தயாராக வைத்திருக்கிறது. ந்த சூழ்நிலையில், இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்ஸின்' தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணா் குழு சனிக்கிழமை பரிந்துரைத்திருந்தது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "சனிக்கிழமை நடைபெற்ற சிடிஎஸ்சிஓ நிபுணா் குழு கூட்டத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்ஸின்' தடுப்பூசியை பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிப்பதற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தயாரிப்பான கோவேக்ஸின் தடுப்பூசியை ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகள் தொடர்பான பரிந்துரைகள் மீது இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் இறுதி முடிவெடுத்துள்ளதால், விரைவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை பொது பயன்பாட்டுக்கு விநியோகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source by: www.bbc.com/tamil/




No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...