Sunday, February 7, 2021

பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்பட்டது. 


உலக சாதனை முயற்சியாக இந்தியா முழுவதுமிலிருந்து பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக்கோள்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்கள் மத்தியில் செயற்கைக்கோள் தயாரிப்பு, விண்வெளி துறையில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த பயிற்றுவித்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை ராமேசுவரத்தில் உள்ள அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டு துவங்கின.

இதற்காக இந்தியா முழுவதுமிலிருந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் சுமார் 1,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தலா 10 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவாக 100 குழுவினருக்கு ஆன் லைன் மூலமும் நேரடியாகவும் கையடக்க பெம்டோ செயற்கைக்கோள்களின் (Femto satellite) வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டுக்கான அறிவுத் திறன்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த 1000 பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஒரே நேரத்தில் செலுத்தி கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு ரெக்கார்டு, ஏசியா புக் ஆப் ரெக் கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என 5 சாதனைகள் செய்யும் முயற்சி நேற்று ராமேசுவரத்தில் நடைபெற்றது.

மாணவர்கள் தயாரித்த ஒவ்வொரு செயற்கைகோளும் 40 கிராம் முதல் அதிகப்பட்சமாக 50 கிராம் வரையிலும் எடை கொண்டது. ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தலைமை வகித்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மார்டின் குரூப்ஸ் அறங்காவலர் லீமா ரோஸ், கலாம் பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலிம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறியதாவது,

நாங்கள் எல்லாம் ஒரு செயற்கை கோளை தயாரிக்க வருடங்கள் ஆயின. ஆனால் இன்று குறைந்த நாட்களில் மாணவர்கள் 100 செயற்கைகோள்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார்கள்.

இதில் அரசுப் பள்ளியை சார்ந்த மாணவர்கள் அதிகமாக பங்கேற்று இருப்பதும், குறிப்பாக தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிகளவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக தன்னிறைவு பெற்ற நாடாக்கா கலாம் அயராது முயன்றார். அவரது கனவு முழுமையாக நிறைவடையவில்லை. அவரது கனவை நனவாக்க அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் மூலம் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது,

சிறிய கரங்களில் பலூன்களை வைத்து விளையாட வேண்டிய குழந்தைகள் பலூன் மூலம் விண்வெளிக்கு செயற்கைகோள்களை மாணவர்கள் அனுப்பி உள்ளார்கள். அப்துல் கலாமின் கனவை நனவாக்கி உள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி அடைகின்றேன். விண்வெளியை பற்றி நமக்கெல்லாம் தெரிய காரணமாக இருந்தவரும் அப்துல் கலாம் தான்.

விண்வெளியில் பல சாதனைகளை கலாம் நிகழ்த்தியது போல் மருத்துவத்துறைக்கு மிகக் குறைந்த செலவில் இருதய நோயாளிகளுக்கு பயன்பெறக் கூடிய ஸ்டெண்ட் எனும் கருவி, போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்தார்.

கலாம் அமைத்துக் கொடுத்த இந்த அடித்தளம் தான் இன்று நமது மருத்துவ விஞ்ஞானிகள் கரோனாவிற்கு சொந்த தடுப்பூசி உருவாக்க வைத்தது” என்றார்.

தொடர்ந்து ஹீலியம் நிரப்பப்பட்ட இரண்டு ராட்சத பலூனில் 100 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஹீலியம் பலூன் சுமார் 38 ஆயிரம் மீட்டர் உயரம் வரையிலும் செல்லக் கூடியது.

ஹீலியம் பலூன் இலக்கினை அடைந்த பின்னர் செயற்கைகோள்கள் பாராசூட் மூலமாக பூமியை வந்தடையும். இந்த செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட ஓசோன் படலம், கதிர்வீச்சு, விவசாயம், காற்றின் வேகம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல விவரங்கள் கணிணிகளில் பதிவு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 800 மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர்.


மாணவர்கள் மத்தியில் ஒரு செயற்கைகோள் தயாரிப்பு, விண்வெளித்துறையில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆயிரம் மாணவர்களை கொண்டு 50 கிராமுக்கும் குறைவான எடையுள்ள மிகச்சிறிய 100 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக இவர்களுக்கு செயற்கைக்கோள்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டதோடு ஒருநாள் நேரடி செயல்வழி பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த செயற்கை கோள்கள் உதவியுடன் பூமியின் தட்ப வெட்ப நிலை, கதிர்வீச்சு, ஓசோன் படலம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த குழுவில் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் செய்யது அகமது சமீர் என்ற மாணவன் தயாரித்த செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. அம்மாணவனுக்கு கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு, ஆசியா புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என ஐந்து உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உலக சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனுக்கும், வழிகாட்டிய முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் முகைதீன் அப்துல் காதர், தமிழாசிரியர் செய்யது இப்ராகிம் ஆகியோருக்கும் முகம்மதியா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முகம்மதியா பள்ளிகளின் நிர்வாகக்குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.








No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...