Wednesday, February 3, 2021

கதிர்வீச்சில் மின்காந்தத அலைகளின் தாக்கங்கள் ஆய்விற்காக நோபல் பரிசு வென்ற, என்ட்ரிக் லொரன்சு நினைவு தினம் இன்று (பிப்ரவரி 4, 1928).

கதிர்வீச்சில் மின்காந்தத அலைகளின் தாக்கங்கள் ஆய்விற்காக நோபல் பரிசு வென்ற, என்ட்ரிக் லொரன்சு நினைவு தினம் இன்று (பிப்ரவரி 4, 1928). 

என்ட்ரிக் லொரன்சு (Hendrik Antoon Lorentz) , ஜுலை 18, 1853ல் ஆலந்திலுள்ள ஆருனெம் என்ற இடத்தில் ஓரளவு வசதியான லொரன்சு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஜெரிட் பிரெடரிக் லாரன்ட்ஸ், தாயார் கிரீட் ருய்டா லான் ஜிங்கல் ஆவர். இவருக்கு 4 வயதாகும் போது இவருடைய தாயார் மறைந்தார். இவருடைய தந்தையார் மறுமணம் புரிந்துகொண்டார். லொரன்சு தனது ஒன்பதாவது வயதிலேயே அறிவியல், கணித அட்டவணையை எப்படிப் பயன்படுத்துவது என அறிந்திருந்தார். 1866-69ல் ஆருனெமில் அப்போது புதிதாக துவக்கப்பட்டிருந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். அறிவியல், வரலாறு, மொழிப்பாடங்களில் சிறந்து விளங்கினார். 1870 ஆம் ஆண்டு லைடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இயற்பியல் மற்றும் கணிதவியல் கற்றார். இங்கு சேர்ந்த அடுத்த ஆண்டு இறுதியில் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்குரிய ஆய்வு மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அங்கு வானியல் பேராசிரியராகவிருந்த பிரெடரிக் கெய்சரின் கற்பித்தல் முறையால் பெரிதும் கவரப்பட்டார். அவரது தூண்டுதலினாலேயே இயற்பியலாளராகவும் ஆனார். இவ்விரு ஆண்டுகளிலும் ஆருனெம் என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல், கணிதம் பயிற்றுவித்தார். 

1875ல் ஒளி எதிரொளித்தல் மற்றும் ஒளி விலகல் நிகழ்வுகளுக்கான கோட்பாடுகள் குறித்து அவர் செய்த ஆய்வின் அடிப்படையில் லொரன்சுக்கு லைடன் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டத்தை அளித்தது. முனைவர் பட்டம் பெறும்போது லொரன்சுக்கு வயது 22 ஆகும். இவருடைய விளக்க ஆய்வுக்கட்டுரைகள், அன்றைய காலத்தில் வியப்பிற்குரியதாகக் கருதப்பட்ட மாக்ஸ்வெல்லின் மின்காந்தக் கொள்கையை மேலும் சிறப்பாக விளக்கும் வகையில் அமைந்திருந்தன. 1877ல் டச்சுப் பல்கலைக்கழகக் கல்விமுறை விரிவாக்கப்படுத்தப்பட்டது லெய்டன் பல்கலைக் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறை ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் முதல் தலைவராக 24 வயதே நிரம்பிய லொரன்சு நியமிக்கப்பட்டார். 1881ல் லாரன்சு அலெட்டா கர்தரினா கெய்சர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பெண்களும் ஒரு மகனும் பிறந்தனர். அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் இவருடைய வாழ்க்கை அமைதியான தனிப்பட்ட படிப்பு சார்ந்தே அமைந்திருந்தது. உலகம் முழுவதுமிருந்த அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பு கொள்வதிலும் இயற்பியல் கோட்பாடுகள் பற்றி அவ்வப்போது வெளியாகும் புத்தகங்களைப் படித்து ஆய்வு செய்வதிலும் இவருடைய காலம் கழிந்தது.

 Spacetime transformation movieFile:Animated Lorentz Transformation.gif - Wikimedia Commons

ஜனவரி 25, 1878ல் இவருடைய முதல் சொற்பொழிவு மூலக்கூறு இயற்பியல் பற்றியது. ஓர் ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்திற்கும் அதன் அடர்த்திக்கும் உள்ள தொடர்பு பற்றிய விளக்கக் கட்டுரையை வெளியிட்டார். அதுமட்டுமன்றி, இயங்கு பொருள்கள் பற்றிய அடிப்படைக் கருத்துகள் பலவற்றை வெளியிட்டார். 1897ல் டஸ்ஸல் டார்ப் என்ற இடத்தில் ஜெர்மன நாட்டு இயற்பியலறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பல நாடுகளில் இருந்தும் அறிவியலறிஞர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் இவர் ஆற்றிய பொருள் பொதிந்த பேச்சுகளினாலும், இவருடைய ஆளுமைத்திறனினாலும் லொரன்சு இம்மாநாட்டில் முன்னணி அறிஞராக விளங்கினார். அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்குவதில் லொரன்சு சிறப்புப் பெற்றிருந்தாலும் செய்முறைச் செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டினார். 1918ல் டச்சு அரசு கேட்டுக் கொண்டபடி திட்டமிட்டு அமைக்கப்பட்ட அணைக்கட்டு மற்றும் கடல் தொடர்பான வேலைகள் (நெதர்லாந்து) ஆகியவற்றின் விளைவுகளைக் கண்காணித்த குழுவின் தலைவராக இருந்து செயல்பட்டார். 

20 ஆண்டுகள் மின்காந்தக் கொள்கை பற்றிய ஆய்வு, மின்சாரம், காந்தம், ஒளி ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றி இவருடைய ஆய்வுகள் அமைந்திருந்தன. எந்திரவியல், வெப்பவியல், வெப்ப இயக்கவியல், நீர்ம இயக்கவியல், இயக்கக் கோட்பாடுகள், தின்மநிலை இயற்பியல் ஒளி பரவும் வகை என்று இத்துறைகள் அனைத்திலும் இவருடைய ஆய்வுகள் அமைந்திருந்தன. லொரன்சு மின்காந்தவியல், எலக்ட்ரான் கோட்பாடு மற்றும் ஒப்புமை இயல் இவற்றில் அதிக அளவு ஆர்வம் செலுத்தினார். ஒப்புமை இயக்கங்களின் குறிப்பாயங்களுக்கிடையேயான ஒப்புமையை விளக்கக் காலநீட்டிப்பு பற்றிய கருத்தை வெளியிட்டார். அணுக்கள் மின்னூட்டத் துகள்களைக் கொண்டவை. ஒளியின் மூலங்களைப் பொருத்து இவற்றின் அலைவுகள் அமைகின்றன. இக்கொள்கையை 1896ல் ஆய்வுகளின் அடிப்படையில் மெய்ப்பித்துக் காட்டியவர் பைடர் சீமன் என்பவர். இவர் லொரன்சின் முன்னாள் மாணவர். சீமன் அப்போது இவருக்கு உதவியாளராக அமைந்தார்.

Zeeman splitting - Questions and Answers in MRI

லொரன்சு விதி, லொரன்சு விசை, லொரன்சின் பகிந்தளிப்பு லொரன்சு மாற்றம் ஆகிய்வை இவருடைய ஆய்வின் வெளிப்பாடுகள். நீளக் குறுக்கம், கால நீட்டிப்பு, நிறை அதிகரிப்பு போன்ற கணித விளக்கங்கள் ஒப்புமைக் கோட்பாட்டினை நன்கு விளக்குவதற்குப் பயன்பட்டன. ஈதர் என்ற ஊடகத்தின் வழியே மின்காந்த அலைகளின் இயக்கம் பற்றிய 'ஆல்பெர்ட் மைக்கல்சன்' மற்றும் 'எட்வின் மாலி' ஆகியவர்களின் ஆய்வுகளில் எழுப்பப்பட்ட பல ஐயங்களுக்கு விளக்கமளிக்கின்ற வகையில் லொரன்சு வகுத்த முறைகளினால் லொரன்சின் புகழ் மேலும் பரவியது. இதற்கான வழிமுறைகளைத் தனியாக 'ஜார்ஜ் பிட் ஜெரால்டு' என்பவர் வகுத்தார். இவை இரண்டும் சேர்ந்து பிற்காலத்தில் லொரன்சு பிட்ஜெரால்டு சுருக்கம் என்று அழைக்கப்பட்டது. 1920ல் கதிர்வீச்சில் காந்தத்தின் தாக்கங்கள் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக இவருக்கும், இவருடன் துணை புரிந்து உதவிய இவருடைய முன்னாள் மாணவர் பைடர் சீமென் என்பவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. 


நோபல் பரிசு பெற்றதற்குப் பின்னால், இவருக்குப் பல்வேறு சிறப்புகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. ராயல் கழகத்தின் உறுப்பினராக 1905ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1908ல் அக்கழகத்தின் சிறப்புப் பரிசான ராம்போர்டு பதக்கமும், 1918ல் காப்ளே பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டன. கொலம்பிய பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரான்கள் கொள்கை பற்றி இவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகளைத் தொகுத்து 1909ல் நூலாக வெளியிட்டார். 1912ல் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற முதல் கால்வே மாநாட்டிற்கு லொரன்சு தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த மாநாட்டிற்குப் பிறகு பாயின்கேர் என்பவர் குவைய இயற்பியல் பற்றி எழுதிய கட்டுரையில் லொரன்சின் நிலை பற்றிய விளக்கங்கள் வெளியாயின. 1912ல் லாரன்சு தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1912ல் லொரன்சு ஆர்லெம்மில் உள்ள டெய்லர்சு அருங்காட்சியகத்தின் ஆய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டார். லெய்டன் பல்கலைக் கழகத்தில் வாரா வாரம் விரிவுரையாற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்பல்கலைக் கழகத்தில் லொரன்சுக்குப் பின்னால் அவருடைய பணியலமர்ந்த பால் எரென்பெஸ்டு என்பவர் கோட்பாட்டு இயற்பியலுக்கான கல்வி அமைப்பை 'லொரன்சு கல்வி நிறுவனம்' என்று இவருடைய பெயரால் மாற்றியமைத்தார். 

லொரன்சு தன்னுடைய வாழ்நாளில் அதிக அளவைக் கற்பதிலும், மருத்துவம், அறிவியல் ஆகியவற்றைக் கற்பிப்பதிலும் கழித்து வந்தார். தன்னுடைய இறுதிக் காலங்களில் அனைத்துலக அறிவியல் மாநாடுகளில் அதிகம் கலந்துகொண்டு அறிவியல் தருக்கங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கதிர்வீச்சில் மின்காந்தத அலைகளின் தாக்கங்கள் ஆய்விற்காக நோபல் பரிசு வென்ற  என்ட்ரிக் லொரன்சு பிப்ரவரி 4,1928ல் தனது 74வது அகவையில் நெதர்லாந்தின், ஆருலெம் என்ற மாநகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.  பிப்ரவரி 10 ஆம் நாள் நடைபெற்ற இவருடைய இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பலரும், புகழ்பெற்ற இயற்பியலாளர்களும் கலந்துகொண்டனர். ராயல் கழகத்தின் சார்பாக அதன் தலைவராக இருந்த எர்னஸ்ட் ரூதர்போர்டு கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். ஆலந்து நாடு அன்றுமதியம் 12 மணி அடித்தபோது இப்புகழ்பெற்ற அறிவியலறிஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நிமிடங்கள் தந்தி மற்றும் தொலைபேசிச் சேவையை நிறுத்தி வைத்தது. இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...