பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.23 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவுகிறது. பூமியில் இருந்து 752 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்டப்பாதையில் இதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த ராக்கெட்டில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த அமசோனியா-1 என்ற முதன்மை செயற்கைகோளுடன், இந்தியாவை சேர்ந்த 20 செயற்கைகோள் உள்பட 21 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதில் இஸ்ரோவுக்கான ஐ.என்.எஸ்-2டிடி மற்றும் இன்ஸ்பேஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜெ.ஐ.டி. சாட், ஜி.எச்.ஆர்.சி.இ. சாட், ஸ்ரீசக்தி சாட் ஆகிய 3 பல்கலைக்கழக செயற்கைகோள்கள் மற்றும் சதீஷ் தவான் சாட் இதுதவிர என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்தினுடைய 15 செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது.
பிரேசில் நாட்டைச்சேர்ந்த அமசோனியா-1 பூமி கண்காணிப்பு செயற்கைகோள் அமேசான் பிராந்தியத்தில் காடுகள் அழிப்பைக் கண்காணிப்பதற்கும், பிரேசிலிய நாட்டு பிரதேசத்தில் பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்தை பகுப்பாய்வு செய்வதற்கும், பயனாளிகளுக்கு தொலை தொடர்பு தரவுகளை வழங்குவதன் மூலம் தற்போது இருக்கும் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த இந்த செயற்கைகோள் உதவும்.
தற்போது விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 53-வது ராக்கெட்டாகும். மத்திய அரசின் இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியுஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான முதல் வணிக ராக்கெட்டாகும்.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலைகளும் தன்னுடைய சொந்த உந்துவிசை மூலம் தனியாக செயல்படும் திறன் கொண்டவை. முதல் மற்றும் 3-வது கட்டங்களில் கலப்பு திட உந்துசக்திகள் பயன்படுத்தப்படுகின்றன. 2-வது மற்றும் 4-வது நிலைகளில் திரவ உந்துசக்திப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது ராக்கெட் வடிவமைப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், எரிபொருள் நிரப்புவதற்கான பணிகளும் தொடங்க இருக்கிறது. இறுதிகட்டப் பணியான கவுண்ட்டவுண் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் கூறினார்கள்.
Source By: maalaimalar
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
நன்றி.
No comments:
Post a Comment