Sunday, February 21, 2021

62 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்: 7 மாவட்டத்தின் 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி.

62 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்: 7 மாவட்டத்தின் 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி.

வெள்ளக்காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் 40 டி.எம்.சி. க்கு மேல் உபரி நீர் கடலில் கலக்கிறது. இந்த நீரை கால்வாய் மூலம் புதுக்கோட்டை, ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கொண்டு வர, அக்காலத்திலேயே புதுக்கோட்டை தொண்டைமான், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் முயற்சி செய்தனர்.

1933-ல் புதுக்கோட்டை நிர்வாக அலு வலராக இருந்த டாட்டன் ஹாமின் முயற்சி யால், மாயனுாரில் தென்துறை கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் கால் வாய் வெட்டும் பணி ஏனோ பாதியில் நிறுத்தப்பட்டது.

1954-ல் இத்திட்டம் குறித்து புதுக்கோட்டை எம்.பி. முத்துச்சாமி வல்லத்தரசு நாடாளுமன்றத்தில் பேசினார். இதையடுத்து 1958-ல் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு ரூ.189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால் திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

2008-ல் ரூ.3,290 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனுாரில் காவிரி நதியில் கதவணையும், அங்கிருந்து 255.60 கி.மீ.க்கு கால்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இந்த கால்வாய் கதவணையில் இருந்து 70 கி.மீ. தென்கிழக்கு திசையில் செல்லும். அதன் பின் வலது பக்கம் திரும்பி தென்மேற்கில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புதுப்பட்டி அருகே குண்டாறில் இணையும். இந்த கால்வாய் தொடக்கத்தில் 20 மீ., அகலம், 5 மீ. ஆழத்தில் இருக்கும். முடிவில் 6.4 மீ., அகலம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது. மேலும் 9 ரயில்வே பாலங்கள் உட்பட 144 பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் புங்கா ஆறு, நாப்பன்னை ஆறு, அரியாறு, காரையாறு, அக்கினி ஆறு,கொண்டாறு, வெள்ளாறு, பாம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, கானல் ஓடை, குண்டாறு என 15 நதிகள் இணைக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் நீங்கும். உபரிநீர் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 எக்டேர் (8.30 லட்சம் ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 50 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். முதற் கட்டமாக 2008 ஜூனில் ரூ.234 கோடியில் மாயனுார் கதவணை அமைக்கப்பட்டு, 2014 ஜூன் 25-ல் திறக்கப்பட்டது. இந்த அணை மூலம் 1.05 டி.எம்.சி. நீரை சேமிக்க முடியும். வெள்ள காலங்களில் 4.83 லட்சம் கன அடி நீரை வெளியேற்ற முடியும். கதவணை திறந்தபிறகு கால்வாய் கட்டும் பணி தொடங்கவில்லை.

அதிக நிதி தேவைப்பட்டதால் மத்திய அரசிடம் நிதி கோரியும் வரவில்லை. இதையடுத்து தமிழக அரசே நிதி ஒதுக்கி காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் போராடி வந்தனர். இந்நிலையில் இத் திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடி யில் செயல் படுத்தப் போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக ரூ.700 கோடியை அரசு ஒதுக்கியது. புதுக் கோட் டை, கரூர் மாவட்டங்களில் கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் 11 கி.மீ.க்கு கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ள ரூ. 331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது. ரூ.6,941 கோடி மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. மூன்றாவது கட்டத்தில், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள் மற்றும் 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. 

ரூ.14 ஆயிரத்து 400 கோடியில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ. நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4 லட்சத்து 67 ஆயிரத்து 345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும். மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமை மிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் (SCADA) மூலம் ரூ.72 கோடி மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காவிரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 சதவீதம் அதிகரிக்கப்படும்". இவ்வாறு அவர் கூறினார்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.







No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...