Tuesday, March 23, 2021

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் ரத்து-இணையவழி வகுப்பு:மார்ச்31-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் ரத்து-இணையவழி வகுப்பு:மார்ச்31-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு.

கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இன்று முதல் நேரடி வகுப்புகள் கிடையாது. வாரத்தில் 6 நாட்கள் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகளை மார்ச்31-ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, 9, 10, 11-ம் வகுப்புமாணவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கம்போல வகுப்பு நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் குழப்பம்

கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுமா அல்லது விடுமுறை விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இன்று (மார்ச் 23) முதல் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தற்போது கரோனாவைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வாவுடன் ஆலோசனை செய்தார்.

தீவிர ஆலோசனை

அப்போது அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வுத் துறை, உயர்கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினருடன் ஆலோசிக்கப்பட்டது.

மாணவர் நலன் கருதி..

கரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், அவர்களின் நலன் கருதி உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் (கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள்), அனைத்துநிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மார்ச் 23-ம் தேதி (இன்று) முதல் இணையவழி வகுப்புகள் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலை அறிவியல், பொறியியல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு குறிப்பாக இறுதிப் பருவ மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள், செய்முறைத் தேர்வுகளை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பருவத்துக்கான தேர்வுகளை இணையவழியில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அரசாணையும் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக 1,385 பேருக்கு தொற்று; 10 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 1,385 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 817, பெண்கள் 568 என மொத்தம் 1,385 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில்,இங்கிலாந்து, கர்நாடகா, கேரளாவில் இருந்து வந்த 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 496 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 68,367 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 34,702 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 47,139 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 261 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 659 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 3,211 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,609ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,202 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 42,115,கோவையில் 57,267, செங்கல்பட்டில் 54,469, திருவள்ளூரில் 45,176 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 259 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 88 லட்சத்து 54,356 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 73,247 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source By: hindutamil

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...