Saturday, September 18, 2021

✍🏻🎲🎲இயற்கை வாழ்வியல் முறை🎲🎲நாம் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகள்.

✍🏻🎲🎲இயற்கை வாழ்வியல் முறை🎲🎲நாம் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகள்.


🎲🎲🎲🎲🎲

மாலை முழுவதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்ளுப் பாப்பா' என விளையாட்டின் வீரியத்தை வீதிதோறும் எடுத்துச் சொல்லிவிட்டு சென்றான் பாரதி. இன்றைக்கு வீதிகள் தான் இருக்கிறது; விளையாட்டுகள் போன இடம் தெரியவில்லை. நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் என்பவை வெறும் விளையாட்டு மட்டுமல்ல. நம் பண்பாட்டையும் எடுத்துச் சொல்லும் ஆவணம். தமிழன் எதை செய்தாலும் அதற்கு ஒரு காரண காரியம் இருக்கும். தமிழர் விளையாட்டுகளும் அது போலத்தான். வீரம், விவேகம், மகிழ்ச்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அறிவுத்திறன், சகிப்புத்தன்மை இவற்றினை கற்றுக் கொடுத்தது பாரம்பரிய விளையாட்டுகள்.கம்பு சுழற்றி கவி நடனம் புரிந்தான், மாட்டின் கொம்பு பிடித்து வீரத்தினை காட்டினான், கல்லைத்துாக்கி கல்யாணம் செய்தான். கபடி ஆடி மண்ணைத் தொட்டு வணங்கினான். கில்லி அடித்தான், கண்ணாமூச்சி ஆடினான், நொண்டியும் சடுகுடுவும்,சளைக்காமல் பந்தும் ஆடினான். தாயமும், பல்லாங்குழியும், தத்தித்தாவும் நீச்சலும் தமிழரின் மண் பேசும் சரித்திரங்களாகின. இவற்றினை இன்றைய சமுதாயம் ஏட்டில் படித்துக் கொள்ளலாம் ஆனால் ஆடிப்பாடி அனுபவிக்க முடியாதது வருத்தம் தரக்கூடிய செய்தியே.

உடலும் உள்ளமும்

🎲🎲🎲🎲🎲

நமது பாரம்பரிய விளையாட்டுகள் உடலுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சியையும் உரத்தையும் கொடுத்தன. நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழ அந்தக்கால விளையாட்டுகள் வழிகாட்டின. மனதில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அவை கற்றுக்கொடுத்தன. உடம்பு உரமேறியது. உள்ளம் உறவாடியது. மனித உடலின் வியர்வைத் துளிகள் மண்ணைத் தொட்டு நனைத்தன. கையும் காலும் அசைந்தாடின. உடலும் உள்ளமும் உறுதியாகின. நோய்கள் இல்லை, அதனால் மருத்துவமும் பார்க்கவில்லை. பாரம்பரிய விளையாட்டில் மன உளைச்சலும் மன அழுத்தமும் இல்லை. உடல் புத்துணர்ச்சி அடைந்தது. ஆடுபுலி ஆட்டம் என்பதொரு விளையாட்டு. இதனை ஆடுவதற்கு கணிப்பொறியும், கால்குலேட்டரும் தேவையில்லை. ஆனால் கூர்மையான அறிவு இருக்க வேண்டும். இந்த விளையாட்டை விளையாடினால் மதியால் எதையும் வெல்லலாம் என்ற உந்து சக்தி உள்ளத்தில் ஏற்படுவதை அனுபவித்து பார்க்க முடியும். தாயம், சொட்டாங்கல், பல்லாங்குழி போன்றவை பள்ளிப்படிப்பு கூட இல்லாதவர்களுக்கு கணக்குப் பாடத்தை கற்பித்து தந்தன.

🎲🎲🎲🎲🎲

வெற்றியும் தோல்வியும்

வெற்றியும், தோல்வியும்சேர்ந்தது தான் விளையாட்டு. இதில் வென்றாலும் தோற்றாலும் அடுத்த ஆட்டம் நம்ம ஆட்டம்;ஜெயித்துவிடுவோம் என்ற தன்னம்பிக்கையை தமிழரின் விளையாட்டுகள் தந்தன. மறுபடி மறுபடியும் வாய்ப்புகளையும்,வாயிற்கதவுகளையும் திறந்துவிடும் விதிமுறைகள் நமதுபாரம்பரிய விளையாட்டில் தான் உள்ளது.ஒரு முறை தோற்றுவிட்டால் அடுத்த முறை வெற்றி பெறுவதற்கான சூட்சுமத்தை கற்றுக் கொடுத்திருக்கின்றன. ஒற்றைக்கால் நொண்டி அடித்தல் விளையாட்டு ஒருவருக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கண்ணில் துணியை கட்டி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் தன்னம்பிக்கையை விதைக்கிறது.பம்பரம் சுழட்டலும், சடுகுடு ஓட்டமும், நீர் விளையாட்டுகளும் ஒவ்வொரு நிலையில் நின்று தன்னம்பிக்கை எனும் விளைநிலத்தில் நீர் பாய்ச்சி விளைய வைக்கிறது. வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு என்று காட்டிக்கொடுத்ததும் நாம் தானே.எதற்காக இதனை சொல்லி வைத்தனர். நம் விளையாட்டு விதிகளின்படி வென்றவர்கள் மட்டும் என்று யாரும் இல்லை. தோற்றவர்கள் மட்டும் என்று யாரும் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். இந்த தன்னம்பிக்கையின் சூத்திரம் தான் பாரம்பரிய விளையாட்டுகள்.

🎲🎲🎲🎲🎲

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை என்னும் இந்த சொல்லின் பொருளே தெரியாமல் இந்தக்கால தலைமுறை அல்லல்பட்டுக் கொண்டுஇருக்கிறது. வீடு தொடங்கி வீதி வரைக்கும், கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் எங்கும் சகிப்புத்தன்மை என்பது அரிது. அதனால் தான் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. ஆனால்பாரம்பரிய விளையாட்டுகள் சகிப்புத்தன்மையை கற்றுக் கொடுத்தது.விளையாட்டு விளையாட்டாய் பார்க்கப்பட்டது. யார் மீதும் யாருக்கும் கோபம் வராது. தோற்றுப் போய்விட்டால் பழிவாங்க திட்டம் தீட்ட மாட்டார்கள்.மன அமைதியும், சந்தோஷமும், வென்றாலும், தோற்றாலும், பிரகாசிக்கும் முகபாவனையும் நம் விளையாட்டுகள் சொல்லிக் கொடுத்த விதிமுறைகள். அதனை விளையாட மறந்து போன காரணத்தினால் தான் நாம் சகிப்புத்தன்மையை இழந்து விட்டோம்.

🎲🎲🎲🎲🎲

கூடி விளையாடுவோம்


கூடி வாழ்ந்தால் கோடி நம்மை என்று உலகத்திற்கே உரக்கச் சொன்ன பரம்பரை நம் பரம்பரை. இதற்கான மையப்புள்ளி நம் பாரம்பரிய விளையாட்டில் ஆரம்பித்தது. நான்கு ஐந்து பேர் ஒரு குழுவாக இருந்து அவர்களுக்குள் ஒரு தலைமையை உருவாக்கி விளையாடுவது குழு விளையாட்டு. இதன்மூலம் அவர்களுக்குள் ஆரோக்கியமான புரிதலும், அன்பும் பரிமாறிக்கொள்ளப்படும். தனித்து நின்று வெற்றி பெறுவதை விட கூடி நின்று வெற்றி பெற்றுவிடலாம், என்ற ஆக்கப்பூர்வமான மனநிலையை இவ்விளையாட்டுகள் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

கண்ணாமூச்சி, பந்தடித்தல், நொண்டி, கில்லி அடித்தல், பம்பரம், தாயம், பல்லாங்குழி, சடுகுடு, பூப்பறித்தல், சொட்டாங்கல், சரியாத் தவறா, சிறுதேர், நீர் விளையாட்டு, இளவட்டக்கல் துாக்குதல், மஞ்சுவிரட்டு, கோலிக்குண்டு அடித்தல், கபடி, ஊஞ்சல்கட்டி ஆடுதல் போன்ற விளையாட்டுகளும், இன்னும் பெயர் கூட அழிந்து போன பிற விளையாட்டுகளும் இளைய சமுதாயத்தினருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. 

காரணம் நாகரிக வளர்ச்சி; அதனால் தான் வீடியோ கேம், அலைபேசியில் மரண விளையாட்டு, கம்ப்யூட்டரில் விளையாட்டு என்று விளையாடிவிட்டு எட்டு வயதிலும், பத்து வயதிலும் தலைவலி, கண்தெரியவில்லை, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற வியாதிகளையும், மரணங்களையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். அன்றைக்கு தெருவில் விளையாடிய குழந்தைகளைப் பார்த்து சந்தோஷப்பட்டனர் பெற்றோர்கள். இன்றைக்கு வீதியில் விளையாட விட்டு எத்தனை பெற்றோர்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அதனை கவுரவக்குறைச்சலாக நினைக்கிறார்கள். வீடியோகேமிலும், அலைபேசியிலும் விளையாடினால் ரசிக்கிறார்கள். அதனால் நாம் இன்று நம் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

🎲🎲🎲🎲🎲 

ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும்.

அத்தகைய விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. தற்போதுள்ள தலைமுறையினர் இந்தப் பெயர்களைக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பு இல்லை.

🎲🎲🎲🎲🎲

1 பழந்தமிழர் விளையாட்டுகள்

2 நொண்டி விளையாட்டு

3 பம்பரம் விடுதல்

4 ஆடு புலி ஆட்டம்

5 மெல்ல வந்து கிள்ளிப்போ

6 கல்லன் வாரான் கண்டுபுடி

7 பூப்பறிக்க வருகிறோம்

இருப்பினும் ஒரு சில கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வந்த பாரம்பரிய விளையாட்டுகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் தனிநபர் வீடியோ கேம்ஸ் இடையில்  புகுந்து விட்டன.

🎲🎲🎲🎲🎲

பழந்தமிழர் விளையாட்டுகள்

பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா?பழமா?, உப்பு விளையாட்டு,  ஐந்து பந்து என 65 விளையாட்டுகள் இருந்தன


இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என 27 விளையாட்டுகளும், 

சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டுவிளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30 விளையாட்டுகளும், 

ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல், சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், பானை உடைத்தல் போன்ற 30 விளையாட்டுகளும்,

குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5 விளையாட்டுகள் இருந்தன.

தமிழர்கள் நாம் கண்டுபிடித்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதிற்கும், உடலிற்கும் நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.

🎲🎲🎲🎲🎲

நொண்டி விளையாட்டு

நாம் நம் பண்டைய விளையாட்டுக்களை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.


🎲🎲🎲🎲🎲

பம்பரம் விடுதல்

இந்த பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்தைச் சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காகத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒன் டூ த்ரி சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தைச் சாட்டையால் சுற்றிக் கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும்.

🎲🎲🎲🎲🎲

பின்பு சாட்டையைப் பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க வேண்டும்.

🎲🎲🎲🎲🎲

ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் என்பது திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப் படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப் படுகிறது. ஆடு புலி ஆட்டத்தை வெட்டும் புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.


ஆடு புலி ஆட்டக்கோடு விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்த பகுதியில் முக்கோணக் கூம்புக் கோடு ஒன்றை வரைந்து, கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

மெல்ல வந்து கிள்ளிப்போ

2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர், பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு… ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து கிள்ளிப்பே

ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்து விடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன் பிறகு கண்களை திறந்து விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்.

கல்லன் வாரான் கண்டுபுடி

மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார். மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

காயே கடுப்பங்கா

கஞ்சி ஊத்தி நெல்லிக்கா

உப்பே புளியங்கா

ஊறவச்ச நெல்லிக்கா

கல்லன் வாரான் காரைக்குடி

கல்லை நீயும் கண்டுபிடி’


என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார். வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்.

🎲🎲🎲🎲🎲

பூப்பறிக்க வருகிறோம்

2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்த படி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள். இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும்.

🎲🎲🎲🎲🎲

பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம்

எந்த மாதம் வருகிறீர் வருகிறீர்

டிசம்பர் மாதம் வருகிறோம் வருகிறோம்

யாரைத் தேடி வருகிறீர்

பூவைத் தேடி வருகிறோம்

எந்தப் பூவை தேடுவீர்

மல்லிகையைத் தேடுவோம்’

இப்படி பாடியதும் ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே களேபரம்தான்.

🎲🎲🎲🎲🎲

உடலைக் காக்கும் விளையாட்டுகள் நம் பாரம்பர்ய விளையாட்டுகள் எனப் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பல நன்மைகள் இருக்கின்றன. பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மூளைத்திறன், கவனத்திறன், பார்வைத்திறன், வர்ம புள்ளிகள் தூண்டப்படுவது, அக்கு புள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகின்றன. அப்படி ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் தரும் விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.

🎲🎲🎲🎲🎲

பரமபதம்

ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து, காயை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டால், கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.

🎲🎲🎲🎲🎲

பல்லாங்குழி 

பல்லாங்குலியை  ஒரு முறைக்கு  இருவரே  விளையாட  முடியும். பண்டையக்  காலத்தில்  வீட்டில்  வேலை  செய்து  முடித்த  பின்  பெரும்பாலான  பெண்கள்  இவ்விளையாட்டில்  அதிக  நாட்டம்  கொள்வார்கள். இவ்விளையாட்டை  விளையாடும்  போது  நாம்  தெளிவாக  ஒரு  வேலையைச்  செய்யக்கூடிய  ஆற்றல்  பெருக்குகிறோம். ஆனால், இவை  அனைத்தையும்  அறியாத இன்றைய  கால  பெண்கள்  வீட்டில்  வெறுமனே  அமர்ந்து  நாடகம்  பார்க்கிறார்கள்.

12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு, வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு. எண்களை சொல்லிக் கொண்டே விளையாட வாய்ப்பாகும். சிந்தனைத்திறன் மேலோங்கும். கைவிரல்களுக்கு நிறைய வேலைக் கிடைக்கும். குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்ஸ் நன்கு செயல்பட உதவும்

🎲🎲🎲🎲🎲

மியூசிக் சேர்

பாடலை ஒலிக்க விட்டு, சுற்றி வைத்திருக்கும் சேர்களை சுற்றி ஓடும் விளையாட்டு. குழந்தைகளுக்கு உடலுழைப்பு கிடைக்கும். ஓடுவது, உட்காருவது, கவனிப்பது போன்றவை இந்த விளையாட்டில் அதிகம். குண்டு குழந்தைகள் இளைக்க வாய்ப்பு உண்டு. கால் தசைகளுக்கு வலு கிடைக்கும்.

🎲🎲🎲🎲🎲

கபடி அல்லது சடு குடு

2 குழு இருப்பார்கள். இவர்களுக்கு இடையே ஒரு பெரிய கோடு இருக்கும். ஒரு நபர் எதிர் டீமில் உள்ள ஒரு நபரை தொட வேண்டும். கபடி கபடி எனச் சொல்லி கொண்டே இருக்க வேண்டும். உடலுழைப்பு தரும் விளையாட்டு இது. மூச்சுப்பயிற்சிக்கு இணையான பலன்கள் கிடைக்கும். பேச்சுத்திறன் மேலோங்கும். நுரையீரல் நன்கு செயல்படும்.

🎲🎲🎲🎲🎲

பச்சக்குதிரை

ஒரு நபரை கீழே குனிய வைத்து, மற்றொருவர் தனது இரு கைகளையும் குனிந்தவரின் முதுகில் வைத்து தாண்டி ஆடும் ஆட்டம். கை, கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும். கை, கால்கள் நன்கு ஸ்ட்ரெச் ஆகும். வளைவுத்தன்மை கிடைக்கிறது. பலமுடன் மற்றொருவரை தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலம் தரும் விளையாட்டு.

🎲🎲🎲🎲🎲

பாண்டி ஆட்டம்

செவ்வகம் வரைந்து, அதில் கட்டங்கள் வரைந்து ஒரு காலை மடக்கி, இன்னொரு காலால் நொண்டி அடிப்பது போல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம். கால்களின் தசை நரம்புகளுக்கு சீரான இயக்கம் கிடைக்கிறது. கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கிறது. உடல் சமநிலை சீராகிறது.

🎲🎲🎲🎲🎲

கில்லியாட்டம்

ஒரு சின்ன கட்டையை தரையில் வைத்து, அந்த கட்டையை பெரிதான கட்டையைக் கொண்டு அடித்து, எறிந்து, விளையாடுவது கில்லி விளையாட்டாகும். உடல் இயக்கங்கள் சீராக நடைப்பெறும்.

🎲🎲🎲🎲🎲

கும்மி ஆட்டம்

முளைவிட்ட தானியங்களை, ஒரு மண் பாண்டத்தில் போட்டு, நன்கு வளர்ந்து இருக்கும். அதனை முலைப்பாரி என்று கூறுவர். இதை நடுவில் வைத்து, பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் தட்டி, கும்மிப்பாட்டு பாடுவர். இதனால் கைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கிறது.

🎲🎲🎲🎲🎲

பம்பரம்

ஒரு வட்டத்தில் 3 பம்பரங்கள் வைக்கப்படும். வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை, தன் பம்பரத்தால் சுற்றி, விளையாடி பம்பரத்தை வெளியே வர செய்ய வேண்டும். பார்வைத்திறன், கவனத்திறன் மேலோங்கும்.

🎲🎲🎲🎲🎲

கோலிக்குண்டு

கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக்கொள்ள, மற்றொருவர் தன்னுடைய கோலி குண்டை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிப்பார்த்து அடிக்க வேண்டும். குழந்தைகளின் பார்வை திறன் மேலோங்கும். கவனிப்பு திறன் அதிகரிக்கும். கைகளில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும்.

🎲🎲🎲🎲🎲

நொண்டி விளையாட்டு. 

நொண்டி விளையாட்டில் குறிப்பாக இதனை பேர் விளையாட வேண்டும் என வரைமுறை எதுவும் இல்லை. இதில் எத்தனை பேர் வேணுமானாலும் கலந்துகொள்ளலாம். நொண்டி விளையாட வட்டம் அல்லது சதுரம் போட்டுக்கொள்ள வேண்டும். விளையாட்டில் கலந்து கொள்பவர்கள் போடப்பட்டிருக்கும் வட்டத்திற்குள் தான் ஓட வேண்டும்.


இந்த நொண்டி விளையாட்டானது ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது. ஒருவர் ஒற்றை காலில் நொண்டியடித்து கொண்டு ஓடுபவர்களை விரட்டியடித்து தொடுவது தான் நொண்டி விளையாட்டு. நொண்டி அடிபவரரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் போடப்பட்டிருக்கும் வட்டத்தினுள் மட்டுமே நின்று கொள்ளலாம். வட்டத்தை தவிர மற்ற பகுதியில் காலை ஊன்ற கூடாது. நொண்டியடித்து செல்பவர் ஒருவரை தொட்டால் தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். இப்படி எல்லைக்குள் நிற்கும் ஒவ்வொருவரையும் தொட்டு வெளியேற்ற வேண்டும். இவ்வாறு நொண்டி விளையாட்டு தொடரும். இது குழந்தைகளுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி ஆகும். இந்த நொண்டி விளையாட்டானது குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை நீக்கி, மனதை குதூகலமாக வைக்கிறது.

இந்த நொண்டி விளையாட்டானது விளையாடும் போது கால்களுக்கு இடையே இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. உடலுக்கு நல்ல ஆற்றலை தருவதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. 

🎲🎲🎲🎲🎲 

ஓடியாடி விளையாடுவதால் உறுதியான தசைகள், எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி சீராக இருப்பதோடு அனைத்து உறுப்புகளும் சிறப்பாக செயல்படும்.

🎲🎲🎲🎲🎲

விளையாட்டின்போது அதிகளவில் ஆக்ஸிஜன் மூளைக்கு செல்வதால், நுறையீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதனால் படிப்பில் கவனம், மெமரி பவர் அதிகரிக்கும்.

🎲🎲🎲🎲🎲

விளையாடுவதால் பசி எடுக்கும். நாம் கேட்காமல்.. கெஞ்சாமல் உணவு தானாக உள்ளே போகும்.

🎲🎲🎲🎲🎲

உடலில் உள்ள கழிவு உப்புக்கள் வியர்வையாக வெளியேறும். அதிக வியர்வை வெளியேறும் போது உடல் வெப்பம் சீராகி, உடல் குளிர்ச்சியடையச் செய்கிறது.

🎲🎲🎲🎲🎲

சேர்ந்து விளையாடுவதால் மனிதநேயம் ஏற்படுவது மட்டுமல்லாமல், நட்புணர்வும் வளரும்.

🎲🎲🎲🎲🎲

விளையாட்டின் மூலம் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம், விட்டுக் கொடுக்கம் மனப்பான்மை, ஒழுக்கம், தன்னம்பிகை, புதுமையான செயல் திறன்கள் வளரும்.

🎲🎲🎲🎲🎲

மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். எப்படி ஒரு பிரச்னையை கையாள வேண்டும், என்ன செய்தால் இந்த சிக்கலான பாதையில் இருந்து வெளி வரலாம் என்கிற எண்ணங்கள் தோன்றும். அந்த பலன் வாழ்க்கையிலும் பிரபலிக்கும்.

செல்போன், வீடியோ கேம்ஸில் மூழ்கும் குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள்...

🎲🎲🎲🎲🎲

சுறுசுறுப்பு இல்லாமல் போதல், சிந்திக்கும் திறனை இழத்தல். ஒரே நேர்க்கோட்டில் பயணித்தல் ஆகியன ஏற்படும்.

🎲🎲🎲🎲🎲

ஒரே திரையை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் நாளடைவில் கண் பார்வை பாதிப்புக்குள்ளாதல், கண்ணில் நீர் வற்றிப் போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

🎲🎲🎲🎲🎲

சக நண்பர்களிடம் எப்படி பழகுவது, பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் போன்ற மரியாதை பண்புகள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும்.

படிப்பில் கவனக்குறைவு, வீடியோ கேம்ஸில் உள்ள வன்முறை மனதில் பதிவது, மன அழுத்தம் போன்ற ஏற்படுதல்.

பெற்றோர் கவனத்துக்கு

ஒரு நாளில் அரை மணிநேரத்துக்கு மேல் வீடியோ கேம்ஸ், டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காதீர்கள்.


தினமும் அல்லது வாரத்தில் ஒரு மணி நேரமாவது மற்றவர்களுடன் சேர்ந்து உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள்.

🎲🎲🎲🎲🎲

கட்டுரை: மசொ தங்கராசு அறம் வாழ்வியல் சிந்தனையாளர்.

🎲🎲🎲🎲🎲

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...