Friday, January 20, 2023

எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் எழுத அனுமதி...!

எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் எழுத அனுமதி...!


2022 ஆண்டுக்கான பன்னோக்கு  பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வு  (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination) தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளில், வினாத் தாட்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

முன்னதாக, நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வுகள் (CGL Examination 2022) அறிவிப்பில்  ஆங்கிலம் மற்றும் இந்தி  மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதற்கு, கடும் கண்டனம் தெரிவித்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி மாநிலச் செயலாளருமான கனிமொழி, " இந்திய அரசின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை" என்று தெரிவித்தார்.

அதேபோன்று, கடந்த அக்டோபர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையில், மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரை வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், " இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அமித் ஷாவின் தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது?" என்று வினவினார் .

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு நியமனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தில், " தமிழ்நாட்டில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில்,  2022 ஆண்டுக்கான பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வு  (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination) அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. பொதுவாக, இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும். முதற் தாள் கொள்குறி வகை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும். இரண்டாவது தாளில், கொடுக்கப்பட்ட தலைப்பில் சிறு கட்டுரை எழுது வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் இந்த கட்டுரையை எழுதலாம்.

இந்நிலையில், நேற்று வெளியான அறிவிக்கையில்,  தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் முதற் தாள் கேள்விகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பதவிக்கு நடைபெறும் எழுத்துத்  தேர்வு இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே எழுத அனுமதிகப்பட்ட நிலையில், பிராந்திய மொழிகளிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...