Monday, September 28, 2020

புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்த, நோபல் பரிசு பெற்ற பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28, 1852).

புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்த, நோபல் பரிசு பெற்ற பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28, 1852).

பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) செப்டம்பர் 28, 1852ல் பாரிசு, பிரான்சில் கிழக்குத் இரயில்வே துறையில் பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார்.பிறந்தார். 1864ல் மொ (Meaux) என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து சென்று, அங்குப் பள்ளியில் கல்வி பெற்றார். ஆனால் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி பெறும் தகுதிச் சான்றிதழ் ("grade universitaire") பெறாமலே பள்ளியில் இருந்து சென்றுவிட்டார். பின்னர் பாரிசில் ஒரு வேதியியலாளராகப் பணிபுரியத்தொடங்கினார். அங்கு ஆர்சனிக்கு (arsenic) கலந்ததைக் குடித்து உயிர்போகும் நிலையில் இருந்த ஒருவரைக் காப்பாற்றினார். அதன்பின் வேதியியலை முறையாகப் பயில முடிவு செய்து எடுமான் ஃவிரெமி (Edmond Frémy) அவர்களின் செய்முறைச் சாலையில் சேர்ந்தார். அதன் பின் பியர் பால் துரியான் (Pierre Paul Dehérain) அவர்களின் செய்முறைச்சாலையில் சேர்ந்தார். அங்கு துரியான் அவர்களின் வலியுறுத்தலால் கல்விசார் பணியைப் பின் தொடர ஒப்புக்கொண்டார்.

 

பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான தகுதி பெறும் பாக்குலோரியா (baccalauréat) என அழைக்கப்பட்ட இளநிலை பட்டத்தைப் பெறுவதில் முதலில் தோல்வி அடைந்து, பின்னர் 1874ல் வெற்றி பெற்றார். அவர் பாரிசில் இருந்த பொழுது வேதியியலாளர் அலெக்ஃசாந்திரே லியோன் எட்டார் (Alexandre Léon Étard) என்னும் வேதியலாளரோடும், வாசுக்கு (Vasque) என்னும் செடியியலாளருடனும் நண்பராக இருந்தார். முவாசான் முதன் முதலாக 1874ல் தாவரத்தில் கார்பன்-டை-ஆக்சைடும், ஆக்சிசனும் நிகழ்த்தும் மாற்றங்களைப் பற்றி அறிவியல் கட்டுரை ஒன்றை, துரியானுடன் சேர்ந்து எழுதினார். அதன் பின்னர் தாவரவியலை விட்டுவிட்டு, கரிமமற்ற வேதியியல் துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினார். குறிப்பாக தீப்பிடிக்கும் இரும்பு பற்றிய வேதியியலில் ஈடுபட்டார். இவருடைய கருத்துகளை அக்காலத்தில் முன்னணியில் இருந்த கரிமமற்ற வேதியியல் அறிவியலாளர்கள் இருவர் வரவேறனர். இவர்கள் ஆன்றி துவ்யெல் (Henri Etienne Sainte-Claire Deville) என்பாரும் துபாய் (Debray) என்பாரும் ஆவர். முசாசான் 1880 இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் அவருடைய நண்பர் இலாண்டுறீன் (Landrine) அவருக்கு பகுப்பாய்வு வேதியியலில் பணிபுரிய வாய்ப்புத் தந்தார். 

முவாசான் 1882ல் இலியோனீ இலியுகோன் (Leonie Lugan) என்பாரை மணந்தார். இவர்களுக்கு 1885ல் ஒரு மகன் பிறந்தார். 1880களில் இவர் ஃவுளூரின் ஆய்விலும், அதனைப் பெரிய அளவில் விளைவிப்பதிலும் ஆழ்ந்து இருந்தார். ஆனால் இவருக்கான தனி ஆய்வகம் ஏதும் இல்லை. அங்கு அருகில் இருந்த பற்பல ஆய்வகங்களைப் பயன்படுத்தினார். அங்கே இவருக்கு 90 புன்சென் மின்கலங்கள் (Bunsen cell) கிடைத்தன. இவற்றை இணைத்து உருகிய ஆர்சனிக்கு டிரைக்குளோரைடு மின்பகுப்பாய்வு செய்யும் பொழுது, அங்கே வெளிப்பட்ட வளிமத்தைக் கூர்ந்து அறிந்தார். இவ்வளிமம், மீண்டும் ஆர்சனிக்கு டிரைக்குளோரைடால் உள்வாங்கப்பெற்றது. பின்னர் ஐதரச புளூரைடு மின்பகுப்பாய்வு செய்த பொழுது ஜூன் 26, 1886 அன்று புளூரின் வளிமம் கிடைத்தது. உண்மையை உறுதி செய்யும் முகமாக, பிரான்சிய அறிவியல் உயர்கல்வி மன்றம் (French academy of science) மூன்று பேரை, மார்சிலென் பெர்த்திலோ (Marcellin Berthelot), ஆன்றி துபாய், எடுமான் ஃவிரெமி ஆகியோரை, அவர்களின் சார்பாளர்களாக அனுப்பியது. 

முவாசானால் மீண்டும் அந்த விளைவைச் செய்து காட்ட இயலவில்லை, காரணம் ஐதரச புளூரைடில், முன்பு செய்த ஆய்வில் கலந்திருந்தவாறு சிறிதளவு பொட்டாசிய புளூரைடு கலந்து இருக்கவில்லை. இதனை பகுத்தறிந்து, திருத்திப் பின்னர் பலமுறை செய்து காட்டினார். இதற்குப் பரிசாக 10,000 பிரான்சிய வெள்ளியாகிய "பிராங்கு" தந்தனர். அடுத்து வந்த ஆண்டுகளில், அதாவது 1891 ஆம் ஆண்டு வரை, இவர் புளூரின் வேதியியல் ஆய்வில் ஆழ்ந்து இருந்தார். இவர், புளூரின் கூறாக உள்ள பல வேதியியல் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தார். பால் இலெபோ (Paul Lebeau) என்பவரோடு சேர்ந்து 1901ல் கந்தக ஃகெக்சாபுளூரைடு (SF6) கண்டுபிடித்தார். இவருடைய ஆய்வின் பயனாய் போரான், செயற்கை வைரம் முதலான்வற்றைப் விளைவிப்பதில் முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன. மின்சாரத்தால் சூடாக்கப்பட்ட அடுப்புகள் 3500°C வரை வெப்பநிலை எய்தும்படியாக செய்ய முடிந்தது. இதற்காக 80 வோல்ட்டு அழுத்தத்தில் 2200 ஆம்பியர் மின்னோட்டம் பாய்ச்ச வேண்டி இருந்தது.

பெர்டினாண்டு புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்துக் கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு 1906 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. பெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் பிப்ரவரி 20, 1907ல்  தனது 54வது அகவையில் பாரிசு, பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...