ரெட் அலர்ட்... நிவர் புயலை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம்.
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல், திங்கட்கிழமை இரவு 8.30 நிலவரப்படி, சென்னைக்குத் தென்கிழக்கில் 420 கி.மீ தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து 360 கி.மீ தூரத்திலும் காரைக்காலில் இருந்து 290 கி.மீ தூரத்திலும் நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனேகமாக வடமேற்கு நோக்கி நகரும் சாத்தியம் உள்ள புயல் காரைக்கால், மாமல்லபுரம் அருகே நவம்பர் 25ஆம் தேதிவாக்கில் கடக்கலாம் என்று கணித்துள்ள வானிலை மையம், அப்போது மணிக்கு 110 முதல் 110 கி.மீ வேகத்தில் இருந்து 120 கி.மீ வேகம் வரை புயலின் வேகம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நிவர் புயல் காரணமாக செவ்வாய்கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கலந்தாய்வு 30-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் வேகம் தொடர்பாக இலங்கை வானிலை ஆய்வு மையம் சில படங்களை வெளியிட்டிருக்கிறது. அதில், தமிழக வடமேற்கு கடலோர பகுதியை நோக்கி நகரும் நிவர் புயல், அடுத்த 48 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அதீத கன மழை, கடுமையான கடல் சீற்றம், பலத்த சூறை காற்று வீசும் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், நிவர் புயல், 25.11.2020 அன்று மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (23.11.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 18, அக்டோபர் 12 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 21ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தலைமையிலும் நடந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட நடவடிக்கையை அவர் பட்டியலிட்டுள்ளார்.
அதில், பேரிடர் காலங்களில் கண்காணிக்கவும், அறிவுரைகள் வழங்கவும் 36 மாவட்டங்களுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை - முன் எச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், எனது உத்தரவின்படி, கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருவாய் நிர்வாக ஆணையர் நேரடியாக சென்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
வங்ககடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. 24ந்தேதி முதல் 25ந்தேதி வரை பெரும் மழையும், புயலும் வீச இருப்பதால், எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொது மக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாள அறிவுறுத்தப்படுகின்றனர்.
பலத்த காற்று வீசும் போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழவும் வாய்ப்புள்ளதால் அச்சமயங்களில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
வடகடலோர மற்றும் டெல்டா பகுதியை சேர்ந்த ஒன்பது மாவட்டங்களுக்கு நிவர் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24. 25, 26 ஆகிய மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment