Friday, December 25, 2020

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுவதுமாக மீளவில்லை. அதற்குள் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என அடுத்தடுத்த அதிர்ச்சிகள் ஏற்பட்டன. இந்த சூழலில் கொரோனா வைரஸ் மரபியல் ரீதியாக மாற்றம் பெற்று புதிய வடிவத்தில் மனிதர்களிடையே பரவத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இங்கிலாந்தில் ஆட்டம் காட்டத் தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், எந்த நாட்டிலும் நுழைவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

இந்தியாவில் புதிய வைரஸ்

சம்பந்தப்பட்ட அரசுகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அது புதிய வகை வைரஸ் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை இந்தியாவிற்குள் புதிய கொரோனா வைரஸ் நுழையவில்லை என்று தெரிகிறது. முன்னதாக சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பந்து போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இதன் மேற்புறம் சிறிய கொம்புகள் இருக்கின்றன. இதனை ஸ்பைக்ஸ் என்று கூறுகின்றனர்.

மரபு ரீதியாக மாற்றம்

இது மனித உடலில் ஒட்டிக் கொண்டு பல்வேறு உறுப்புகளின் செல்கள் மூலம் பரவத் தொடங்குகிறது. இந்நிலையில் மேற்கூறப்பட்ட ஸ்பைக்ஸில் தான் மரபியல் ரீதியான மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி திறனில் இருந்து மறைந்து கொள்ளும் வகையில் மாற்றம் பெற்றிருப்பதாக இங்கிலாந்து மருத்துவ அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸ் வடிவத்தில் ஒட்டுமொத்தமாக உருமாறவில்லை என்பது தெரியவருகிறது.

எப்படி தாக்கும் புதிய வைரஸ்?

இந்த மாற்றம் தான் புதிய பரிணாமம் என்று அழைக்கின்றனர். இத்தகைய புதிய வைரஸ் ஏற்கனவே பரவி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகத்தில் பரவுகிறது. ஏற்கனவே உள்ள வைரஸை விட நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக தாக்கக் கூடியது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளே புதிய வைரஸின் பாதிப்பைத் தடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

உயிர்பலி வாங்குமா புதிய வைரஸ்?

இருப்பினும் பலகட்டப் பரிசோதனைகளின் அடிப்படையில் தான், இதனை உறுதி செய்ய முடியும் என்கின்றனர். இவ்வாறு வைரஸ்கள் உருமாற்றம் அடைவது இயல்பு தான். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் புதிய வகை வைரஸால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள்

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதாவது பயணிகள் தங்கள் பயணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு RT-PCR பரிசோதனை செய்து நெகடிவ் சான்று வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அமலுக்கு வந்த இரவுநேர ஊரடங்கு

இங்கே வந்தவுடன் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேரும், கோவையைச் சேர்ந்த 3 பேரும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 7 பேரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புதிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொண்டாட்டத்திற்கு தடை

இதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கிடையில் வரும் 2021ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி டிசம்பர் 31ஆம் தேதி இரவு, ஜனவரி ஒன்றாம் தேதி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடற்கரை, சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகிக் கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை இரண்டு இலக்கங்களில் காணப்படுகிறது. எனவே நிலைமை படிப்படியாக கட்டுக்குள் வருவது தெரிகிறது. இந்த சூழலில் புதிய வகை கொரோனா வைரஸால் தமிழகம் பாதிப்பைச் சந்தித்திடக் கூடாது. எனவே அரசும், பொதுமக்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருந்தால் நிச்சயம் புதிய கொரோனா வைரஸ் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.
Source By : tamil.samayam


No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...