Sunday, January 3, 2021

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1831).

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் இன்று (ஜனவரி 3, 1831). 


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule) ஜனவரி 3, 1831ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை (13 அகவை) 1840ல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, பெண் குழந்தைகளுக்கான ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. 

பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பையில் ஒரு மாற்று உடையை எடுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும் குளித்து உடை மாற்றிவிட்டு பணியாற்றினார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார். விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார். இந்த 21- நூற்றாண்டிலேயே மறுமணம் செய்து கொள்பவர்களை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் சமூகம் இருக்கையில் 18-ம் நூற்றாண்டிலேயே விதவைகளுக்கு மறுமணம் செய்துவைத்தார். 1870 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார். 1897ல் ஏற்பட்ட பிளேக்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர்.

புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார்.  அக்கால கட்டத்தில் தீண்டாமையின் கொடுமை அதிகம் அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தண்ணீர் மறுக்கப்பட்டது. ஆகையினால் அவர்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டிய சூழல் இருப்பதைக் கண்டு, தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். சாவித்திரிபாய் புலே நல்ல கவிஞரும் ஆவார். மராத்தியத்தில் நவீன கவிதைப் போக்கு இவரில் கவிதைகளிலிருந்தே தொடங்குகின்றது. டெல்லி பல்கலைக்கழகத்தில் உலகளாவிய ஆய்வுகள் பற்றி ஆராயும் பணி புரிந்துகொண்டிருக்கும் பேராசிரியர் டாம் உல்ப் என்பவர் ஆயிகோஸ் என்ற உலகப் பத்திரிகையில், சாவித்திரிபாய் புலேவை `இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை' என்று குறிப்பிடுகிறார். 

1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள். கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடம்  மட்டுமே இருந்ததால், வரலாறு என்பது அவர்களே அவர்களுக்காக எழுதிக்கொண்டதாக அமைந்துவிட்டது. ஒவ்வோர் இந்தியரும் நினைவில் வைத்திருக்க வைத்துக்கொள்ள வேண்டியவருக்கு உன்னதமான சேவையும், தொண்டும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறாமலேயே போய்விட்டன. கடந்த 2017 ம் ஆண்டு இவரின் பிறந்த தினத்திற்கென பிரத்தியேக `கூகுள் டூல்' அமைத்துச் சிறப்பித்தது கூகுள். இன்று கல்வி அனைவரிடத்திலும் இருக்கிறது வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டிய நிலையில் சாவித்திரிபாய் புலேவின் பிறந்த நாள் பெண் குழந்தைகளின் கல்வி தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்.

                              

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே மார்ச் 10, 1897ல் 21, 1994ல் தனது 66வது அகவையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயில் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது. 2015ல் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. மார்ச் 10, 1998 அன்று, இந்திய அஞ்சல் துறை இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.



No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...