Thursday, January 14, 2021

பொங்கட்டும் தமிழர் வாழ்வு- தலையங்கம்.

பொங்கட்டும் தமிழர் வாழ்வு-தலையங்கம். 

இன்று தைப்பொங்கல். எங்கு நோக்கினும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் நன்னாள் இது. தை பொங்கலை தமிழர் திருநாள் என்பார்கள். விவசாயிகள் அனைவரின் வாழ்விலும் புதுவாழ்வு பொங்கும் நாள். அதனால்தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது காலகாலமான நம்பிக்கையாக இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியாக ஒரு பண்டிகை உண்டு. இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவார்கள். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள். முஸ்லிம்கள் ரம்ஜான் கொண்டாடுவார்கள். இப்படி ஒவ்வொரு மதத்தினரும் அவரவருக்கு உரித்தான பண்டிகையை அவரவர் மட்டும் கொண்டாடுவார்கள். அடுத்தவர்கள் வாழ்த்து சொல்வார்கள். 

NFTE KARAIKUDI

ஆனால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும், குறிப்பாக விவசாய பெருங்குடி மக்களுக்கும் தமிழ்நாட்டில் மகிழ்ச்சி திருநாள் என்றால், அது பொங்கல்தான். இந்த நாட்களில் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும். கொரோனா பாதிப்பு எல்லா துறைகள் மீதும் கைவைத்தது. ஆனால் எங்கள் வேளாண் தொழிலை மட்டும் தொட்டுப்பார்க்க முடியவில்லை. பெரும்பாலான உழவர்கள் உழைத்து உழைத்து உரமேறிய உடலை கொண்டவர்கள் என்பதால், அவர்களை கொரோனாவால் தீண்டமுடியவில்லை. தூர இருந்து எட்டிப்பார்த்தது கொரோனா. ஆனால் கிட்ட நெருங்க முடியவில்லை. 
தை பொங்கல் பொங்கட்டும்... வாழ்வில் மங்கலம் பெருகட்டும்... - ஆரூர்  சுந்தரசேகர்

இந்த கொரோனா காலத்திலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழுது, விதைவிதைத்து, நீர்பாய்ச்சி, உரமிட்டு, அறுவடையும் அமோகமாக உள்ளது. நல்ல மகசூலும் கிடைத்திருக்கிறது. தங்கள் வீட்டு பசியையும் தீர்த்து, நாட்டு பசியையும் தீர்த்து வைத்திருக்கிறார்கள். விவசாயம் தழைத்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு, கடந்த மாதம் டிராக்டர் விற்பனை அதிகரித்திருப்பதுதான். தமிழர்கள் என்றைக்குமே நன்றி உணர்வு மிக்கவர்கள். அதிலும் குறிப்பாக விவசாய பெருங்குடி மக்கள் தங்களுக்கு செய்யப்பட்ட உதவிகளை மறக்கவேமாட்டார்கள். அந்தவகையில்தான் இன்று விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் புத்தாடை அணிந்து புதுநெல்லில் அரைத்த பச்சரியை புதுப்பானையில் வைத்து, வெல்லம்போட்டு, நெய்யூற்றி பொங்கலிடும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரல்எழுப்பி ஆனந்த பொங்கலை அளவிலா மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். 
🐄 மாட்டு பொங்கல் GIFs sathish - ShareChat - India's own Indian Social  Network

இந்த பொங்கல், கொரோனா பொங்கல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு கொண்டாடுவோம். 2-ம் நாள் விவசாயிகளின் உற்ற நண்பனான விவசாயத்துக்கு துணைநின்ற கால்நடைகளை போற்றி வணங்கும் மாட்டுப்பொங்கல் ஆகும். 3-ம் நாள் காணும் பொங்கல். இந்த நல்லநாளில் வீரமிக்க இளைஞர்கள் சீறிப்பாய்ந்து வேகமாக ஓடிவரும் காளைகளை, துணிச்சலுடன் அடக்கும் வீரவிளையாட்டுக்குரிய நாளாகும். கொரோனாவால் தேசிய உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொண்ட விவசாயிகளுக்கு அரசும் நன்றி செலுத்தும்வகையில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும். ‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்ற விவசாயிகளின் அனுபவ பழமொழி, இந்தாண்டு பொய்த்துவிடவேண்டும். டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்களே... அதில் ஒரு கோரிக்கையான அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து, அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கொடுக்கவேண்டும். ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்’ என்று பிரதமர் நரேந்திரமோடி கூட உறுதிமொழி கொடுத்திருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் 2009-ம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையில், விவசாயிகளின் உற்பத்தி செலவுடன் 1.5 மடங்கு விலை கிடைக்கும்வகையில் அவர்களின் விளைபொருட்களுக்கு விலைநிர்ணயம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இதை எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் அரசுகளால் பேசப்படுகிறதே தவிர, இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது விவசாயிகளுக்கு பெரிய குறையாக இருக்கிறது. எனவே இந்த ஆண்டில் விவசாயம் ஒரு லாபகரமான தொழில் என்று ஆக்கும்வகையில், அவர்களின் செலவுகளை குறைத்தும், வருமானத்தை அதிகரிக்கவும் செய்யும்வகையில் அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகளின் உள்ளம் உவகையுடன் இருந்தால்தான் நாட்டில் வளம் பெருகும். எனவே விவசாயிகளின் மனதில் என்றென்றும் பொங்கல் பொங்கட்டும். நாட்டில் மகிழ்ச்சி பொங்கட்டும்.

Source By: தினத்தந்தி

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.







No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...