மரம் வளர்ப்பில் அசத்தும் மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு
மரம் வளர்ப்பு சேவையில் ஈடுபட்டுள்ள, 7 வயது பள்ளி மாணவியை, பிரதமர் மோடி, 'டுவிட்டர்' பக்கத்தில் பாராட்டியதுடன், மத்திய அரசின் பால சக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், 40, செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திர வேர்ல்டு சிட்டியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருடன் மனைவி ஸ்துதி, மகள் பிரசித்தி சிங், 7, வசிக்கின்றனர்.
மகேந்திரா வேர்ல்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில், சிறுமி பிரசித்தி சிங், 3ம் வகுப்பு படித்து வருகிறார். மரம் வளர்ப்பில், சிறுவயதில் இருந்தே அதிகம் ஆர்வம் இருந்ததால், 2014ல், தான் வசிக்கும் பகுதியில், மரக்கன்றுகள் நட துவங்கினார். இவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர், அவருக்கு உறுதுணையாக இருப்பதால், பழ மர வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வனம் ஆகியவற்றை, பல இடங்களில் உருவாக்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், அஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், பழ வகை மரக்கன்றுகள், காட்டாங்கொளத்துார் சிவானந்த குருகுலம் பள்ளியில், பல வகை செடிகளை நட்டுள்ளார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகள் மற்றும் புதுச்சேரி மாநிலம், தனியார் அறக்கட்டளை பகுதியில், செடிகள் மற்றும் பழ வகை கன்றுகளை நட்டுள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் நற்செயல்பாட்டை அறிந்த, பிரதமர் மோடி, சமூக வலைதளமான, 'டுவிட்டர்' பக்கத்தில், சிறுமியை பாராட்டியதோடு, மத்திய அரசின் பால சக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டில், நேற்று நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் ஜான்லுாயிஸ், சிறுமிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரப்படுத்தினார். மாணவிக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாணவி பிரசித்தி சிங் கூறியதாவது:
செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில பகுதிகளில், மரச்செடிகள் நட்டு உள்ளேன். 13 பழ வகை காடுகளை உருவாக்கிள்ளேன். இந்த ஆண்டில், ஒரு லட்சம் பழ மரக்கன்றுகள் நட்டு வளர்க்க உள்ளேன். தற்போது, 13 ஆயிரத்து, 500 மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
மாணவியின் தாய் ஸ்துதி கூறியதாவது:
என் மகள் பிரசித்தி சிங், மரக்கன்றுகள் வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். இதேபோல, மரக்கன்றுகளை வளர்க்க, பெற்றோர், குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். பால சக்தி புரஸ்கார் விருதுக்கு, பிரசித்தி தேர்வு செய்யப்பட்டிருப்பது, மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment