Saturday, January 16, 2021

நாடெங்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

நாடெங்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி மூலம் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, "தடுப்பூசிகளை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது" என்றார்.

நாட்டில் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும்படி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேரைத் தொடர்ந்து 27 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 வயதுக்கு மேற்பட்டோரை தொடர்ந்து இணைநோய் உள்ள 50 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பணிகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி காணொலியில் தொடங்கி வைத்தபிறகு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், ‘’சரியான நேரத்தில் நமக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது. எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எழுந்த எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க அனைத்து விஞ்ஞானிகளும் இரவு பகல் பாராமல் உழைத்தனர். அவர்களின் உழைப்பால்தான் குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசி அல்ல, இரண்டு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மனித குலம் ஒன்றை நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல என்பதற்கு இது ஓர் உதாரணம். தடுப்பூசிகளை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. பாடுபட்ட விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டுமக்களின் நலனுக்கு உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி போடப்படும். அதேபோல் ராணுவ வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது.

அடுத்த 2-3 மாதங்களில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிதான் உலகிலேயே விலை குறைவானது. அதேசமயம் இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிக்கு எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல.

இந்தியாவில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை, வதந்திகளை நம்பவேண்டாம்.  தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவுடன் முகக்கவசங்களை நீக்கிவிட வேண்டாம்’’ என்று பேசினார்.

தமிழகத்தில் இன்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் நடைபெறுகின்றன. இதை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு முடிவுகட்டும் விதமாக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 பகுதிகளில் கோவாக்சினும் வழங்கப்படுகின்றன.

26 அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் 6 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இதில் மருத்துவர்கள், செவிலியர், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அடங்குவர். ஒரு மணி நேரத்தில் 25 பேருக்கு என்ற அடிப்படையில் ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவ்வாறாக இன்று 166 மையங்களில் 16,600 பேருக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. சென்னையைப் பொறுத்தவரை 4 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு தனியார் மருத்துவமனை உட்பட 12 இடங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மருத்துவமனை முதல்வர்கள் உட்பட தமிழகத்தில் தலைசிறந்த 10 மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளவுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் , ஸ்டான்லி முதல்வர் பாலாஜி , ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி என அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசி குறித்து அடிக்கடி கேக்கப்படும் கேள்விகள்-------> Link






No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...