Sunday, February 7, 2021

சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்த கணிதப் பகுப்பாய்வு அறிஞர் ஜி.எச்.ஹார்டி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7, 1877).

சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்த கணிதப் பகுப்பாய்வு அறிஞர் ஜி.எச்.ஹார்டி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7, 1877). 

ஜி.எச்.ஹார்டி (Godfrey Harold Hardy)  பிப்ரவரி 7, 1877ல் இங்கிலாந்து நாட்டில் சர்ரே பகுதியில் ஒரு ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை கிராங்லெய்க் பள்ளியில் கலை ஆசிரியராகவும் மற்றும் கருவூல அதிகாரியாகவும் இருந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் கணிதத்தின் மீது வெறுப்புடயாராக இருந்தாலும் அவரிடம் இயல்பாகவே கணிதத்தின் மீது நாட்டம் இருந்தது. பள்ளி கல்விக்கு பின்னர் ஹார்டி அவரது கணித திறனுக்காக, வின்செச்டர் கல்லூரி சென்று, கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு அவர் கேம்ப்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார். இரண்டு ஆண்டு கல்விக்குப்பின் அவர் நான்காவது இடம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் பயின்ற போது ஹார்டி "கேம்பிரிட்ச் திருத்தூதர்கள்" என்று அழைக்கப்பட்ட அறிவார்ந்த கமுக்கக் குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்தார். 1900 ஆம் ஆண்டில் அவர் இரண்டாம் கட்ட பல்கலைக்கழக இறுதி தேர்வில் (ட்ரப்போஸ் II) தேர்ச்சியடைந்து பட்டம் பெற்றார். 1903 ஆம் ஆண்டில் அவர் அந்த காலகட்டத்தில் ஆங்கில பல்கலைக்கழகங்களில் உயர்ந்த முதுகலை பட்டத்தை பெற்றார். 



1906 முதல் 1942 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலத்தில் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் அவரின் வாழ்க்கை, இராமானுசனுடனான அவரின் நட்பு முதலியவறை இடேவிட் லேவிட் என்பவர் 2007 ஆம் ஆண்டு தி இந்தியன் கிளார்க் என்ற தலைப்பில் ஒரு புதினமாக வெளியிட்டார். கணிதத்தில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும் அவர் சற்று கூச்சமும் மென்மையான குணமும் உடையவராவார். ஒரு சில நண்பர்களை மட்டுமே உடைய அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார்.  கணிதத் துறையில் சிறப்புத் தேர்ச்சி இல்லாதோர் நடுவே, சி.எச்.ஹார்டி தாம் 1940 ஆம் ஆண்டில் கணித அழகியல் பற்றி எழுதிய "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" (A Mathematician's Apology) என்னும் கட்டுரையின் பொருட்டு அறியப்பட்டுள்ளார். கணிதத்தில் சிறந்த அறிவு இல்லாதோரும் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இக்கட்டுரையில், ஒரு கணித மேதையின் உள்மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அரிய சிந்தனைகளை ஹார்டி வழங்கியுள்ளார். 


1914 ஆம் ஆண்டிலிருந்து ஹார்டி, இந்தியக் கணித மேதையான சீனிவாச இராமானுசனுக்கு ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். அந்த இரு பேரறிஞர்களுக்கும் இடையே முகிழ்த்த நட்புறவு தனிச்சிறப்பு வாய்ந்தது. இராமானுசனைச் சந்தித்த முதல் நாளிலியே ஹார்டி அவருடைய மிகச்சிறந்த கணித அறிவைக் கண்டு மலைத்துப்போனார். இத்தனைக்கும் இராமானுசன் கணிதத் மெய்யியல் பற்றிக் கல்விக்கூடங்களில் பயின்றதில்லை. பின்னர் ஹார்டியும் இராமானுசனும் கணித ஆய்வில் நெருங்கிய ஒத்துழைப்பாளர் ஆயினர். பால் ஏர்டோசு (Paul Erdős) என்பவர் ஒருமுறை ஹார்டியோடு நிகழ்த்திய நேர்காணலின்போது, கணிதத் துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்டார். அதற்கு ஹார்டி அளித்த பதில், "இராமானுசனைக் கண்டெடுத்ததே நான் கணிதத் துறைக்கு வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு" என்பதாகும். மேலும், இராமானுசனும் அவரும் கணித ஆய்வில் இணைந்து ஈடுபட்டது அவர்தம் "வாழ்வில் நிகழ்ந்த இன்பமிகு ஒரு நிகழ்ச்சி" என்று ஹார்டி கூறியுள்ளார். 


இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர் ஹார்டி. அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர். இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார். சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்த கணிதப் பகுப்பாய்வு அறிஞர் ஜி.எச்.ஹார்டி டிசம்பர் 1, 1947ல் தனது 70வது அகவையில் கேம்பிரிச், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...