Thursday, February 25, 2021

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது. எனவும், தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன.

தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எதிர்பாராத தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன.

கரோனா பாதிப்பு குறைவு

கரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிப்.8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இதற்கிடையே மே 3-ம் தேதி 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கற்றல் இழப்பால் பிற வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இன்றித் தேர்ச்சி வழங்க வேண்டும், குறைந்தபட்சம் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது எனவும் தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காகப் பள்ளிகள் மூடப்பட்டு, கரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.





No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...