Friday, April 16, 2021

தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் மகா கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1889).

தன் கண்ணீரை மறைத்து உலகிற்கு புன்னகையைப் பரிசாக அளித்த, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்து விடும் மகா கலைஞன் சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16, 1889). 

 

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin) ஏப்ரல் 16, 1889ல் இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பா. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். ஒரு நாள் மேடையில் பாடும்போது தொண்டையில் பிரச்னை, பாட முடியவில்லை ஒரே கூச்சல், அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள் ஹென்னா. ஆறு வயது சிறுவன் சார்லி என்ன நினைத்தானோ மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். விசில், கைத்தட்டல் அரங்கமே அதிர்ந்தது. சில்லறைகள் சீறிப் பறந்தன. சில்லறைகளை பொறுக்கினான், சார்லி. பாடச் சொல்லி கூச்சலிட்டது கூட்டம். சில்லறைகளை பொறுக்கிய பிறகுதான் பாடுவேன். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது என்றான். மீண்டும் கொல்லென்று எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது. 

தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி. மேடைப்பாடல், துணி தைத்து கொடுப்பது என்று வந்த வருமானம் போதுமானதாக இல்லை. பசிக்கு முன்னால் மூவரும் தோற்றுப்போனார்கள். வேறு வழியில்லாமல் ஹென்னா சார்லியின் அப்பா மேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தாள், தீர்ப்பு இழுத்தது. தன் பிள்ளைகள் இங்காவது வசதியாகப் படிக்கட்டும் என்று மூவரையும் அநாதை விடுதி ஒன்றில் சேர்த்தாள். தனித் தனியாக பிரிக்கப்பட்டார்கள். காலக்கொடுமை, அதனால்தானோ என்னவோ ஹென்னாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. சார்லி, ஸிட்னியையும் சார்லியின் அப்பா தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பா தன் இன்னொரு மனைவி லூஸி வீட்டுக்கு கூட்டிப்போனார். அங்கேயும் பசி சார்லி, சி ட்னியையும் வீதிக்குத் துரத்தி சிரித்தது. 'அம்மா, அம்மா' என்று கதறி அழுதான் சார்லி. அங்கே அவனுக்கு அழுகையைத் தவிர ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. ஒரு நாள் வீட்டு வாசலில் அந்த அதிசயம் நடந்தது, அம்மா ஹென்னா வந்திருந்தாள். சார்லி, சிட்னி ஓடிப்போய் ஒட்டிக்கொண்டார்கள் மீண்டும் மூன்று உயிர்களும் ஓர் உயிரானது.

 charlie chaplin GIF | Charlie chaplin, Charlie chaplin quotes, Charlie  chaplin old

சாப்ளின் அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வந்தது. பள்ளிப் படிப்பு தடையில்லாமல் தொடர்ந்தது. பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரை சார்லி சம்பாதிக்கத் தவறவில்லை. அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் சந்தர்ப்பம் வந்தது. அங்கு போன சாப்ளின் அமெரிக்க சுதந்திரதேவி சிலை நோக்கி தன்னை மறந்து கத்தினான். ஏய்! அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான் வந்து கொண்டிருக்கிறான் என்று. அடுத்த ஐந்தாண்டுகளில் அதுதான் நடந்தது. உலகத்தையே கொள்ளையடித்தான், சாப்ளின். தன் முதல் காதலி ஹெட்டியை சார்லியின் ஏழ்மையைக் காட்டி பிரித்தான், அவளின் அண்ணன். அந்தத் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரை வாழ்நாள் முழுக்க சித்திரவதை செய்தது. பிற்பாடு அவர் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட எண்ணற்ற திருப்தியற்ற திருமண வாழ்க்கைகளுக்கும் அதுவே காரணமாக அமைந்தது.

 Charlie Chaplin GIF by Maudit - Find & Share on GIPHY

தன்னை துன்புறுத்தும் ஹெட்டியின் நினைவுகளில் இருந்து தப்பிக்க, பொய்யாக தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு தீவிர வாசிப்பை மேற்கொண்டார். தனக்கான சிந்தனைகளை செதுக்கிக் கொண்ட கால கட்டம் அது, முதல் படம் newspaper reporter. ஒரு நாள் ஏதாவது நடித்துக்காட்டு என்று நடிக்க வாய்ப்புக் கேட்ட சார்லியை பார்த்துச் சொன்னார் சென்னட் என்னும் தயாரிப்பாளர். அவர் சைசுக்கு உடைகள் இல்லை என்பதால், பெரிய சைஸ் தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை, ஷு, தொப்பி, கைத்தடி. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளினின் உருவ முத்திரை. இந்த உருவ முத்திரை பதித்த பொருட்கள் இன்றும் கூட விற்று தீர்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியே மேடையேறி நடித்துக் காட்ட சிரிப்பால் மேடை அதிர்ந்து அடங்கியது. என்னிடம் கதை ஒன்று இருக்கிறது, நானே நடித்து நானே இயக்க விரும்புகிறேன் என்றார் சென்னடிடம் சார்லி. முதலில் ஒத்துக்கொள்ளாத சென்னட், மக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கை மனதில் கொண்டு ஒரு நிபந்தனை விதித்தார். "அந்த படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பு செலவு அனைத்தையும் வட்டியும் முதலுமாக நீங்கள் திருப்பித் தரவேண்டும் சம்மதமா?" என்று கேட்டார். அதற்கு சாப்ளின் சொன்னார் "முழுப்பணத்தையும் திருப்பித் தருவேன். அந்தப் படம் தோல்வியடைந்தால், நான் இந்த சினிமாவை விட்டே வெளியேறி விடுகிறேன்" என்று அப்படி இயக்கி வெளிவந்த முதல் வெற்றிப்படம் caught in the rain.

 The circus charlie chaplin GIF on GIFER - by Axeworm 

ஒரு முறை சாப்ளின் படப்பிடிப்பு முடிந்து நியூயார்க் நோக்கிப் போன தகவல் எப்படியோ தெரிய வர, மலர்கொத்துக்கள், பேண்டு வாத்தியங்கள், உயரமான கம்பம், மரங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம். பசியும், அவமானங்களும் இதற்கு தானா? நம் வாழ்க்கை மனிதகுலம் பயனுறும் காவியமாக வேண்டாமா? யோசிக்க ஆரம்பித்தார். அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களிடம் அரசு நடத்தும் கெடுபிடிகளை கடுமையாகச் சாடி the immigrant படம் வெளியானது. அமெரிக்க பிணந்தின்னும் கண் சார்லியை கண்காணிக்க உத்தரவு போட்டது. இப்படித்தான், சார்லி ஏழைகளைப் பற்றியே படம் எடுத்ததால், பணக்காரர்கள் எதிரிகளானர்கள். வேறு வழியில்லாமல் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டியதாயிற்று. இக்கால கட்டத்தில்தான் தன் காதலி ஹெட்டியைப் போலவே இருக்கிறாள் என்று மில்ட்ரெட் ஹாரிஸ் என்பவளை திருமணம் செய்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்து இறந்தது, அவன் நினைவாக தயாரான படந்தான் the kid. லிட்டா கிரே, பவுலட் கோடர்ட், ஊநா ஓ நீல் போன்றவர்கள் மேல் காதல் வயப்பட்டதும் காயப்பட்டதும் துன்பியல் வரலாறு! அவர்கள் அனைவரும் தோற்றத்தில் ஹெட்டியைப் போலவே இருந்தார்கள் என்பது இன்னொரு அதிசய தகவல்.

 sir charlie chaplin gifs | WiffleGif

புகழின் உச்சியில் இருந்த நேரம்.. "என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஹெட்டி! நான் ஒரு முட்டாள், அபாக்கியசாலி. நீங்கள் எவ்வளவு உயரமானவர் என்பதை உங்கள் படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நீங்கள் லண்டன் வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள். கடைசியாக உங்களின் கைகளைப் பிடித்து கதறி அழு வேண்டும். என் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்!" என்ற கடிதம் படித்து தான் பார்த்த எல்லா வேலைகளையும் ரத்து செய்தை விட்டு லண்டனுக்குப் பயணமானர் சாப்ளின். பஞ்சையாய், பராரியாய், பிச்சைக்காரனாய் துரத்தியடித்த அதே லண்டன் தெருக்கள்வெட்கமே இல்லாமல் விழாக்கோலம் பூண்டது சார்லியை வரவேற்க. வெறி பிடித்த மக்கள் வெள்ளம், இந்த தடவையும் ஹெட்டி ஏமாற்றித் தான் போயிருந்தாள். அவளின் மரணச்செய்தியைத் தான் கேடக முடிந்தது. அவளின் நினைவாக கொஞ்ச கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சார்லி இந்த இடி செய்தி கேட்டு இன்னும் ஒரு முறை செத்துப் போனார். கடவுளைப் போலவே காதலும் சரியாக புரிபடாமலேயே இந்த பூமியை ஆண்டு கொண்டுதான் இருக்கிறது. ஓவென கதறி அழக்கூட முடியவில்லை. அவ்வளவு மக்கள் வெள்ளம். நடு இரவில் முகத்தை மப்ளர் கொண்டு மூடி, பசியால் கதறி அழுது சுற்றி அலைந்து திரிந்த வீதிகளுக்கு மீண்டும் ஒருமுறைப் போய் மவுனமாக அழுது விட்டு வந்தான், அந்த மகா கலைஞன்.

 Charlie Chaplin | Wiki | Good Vibes Amino

கூடவே தன் தாயின் மரணமும் சுனாமியாக வந்து தாக்கியது, "இந்த தோற்கும் அன்பு அவளுடையது. அவளது தியாகம், திறமைகள், அவள் பட்ட வேதனைகளுக்கு முன்னால் நானும் என் படங்களும் அவளின் கால் தூசுக்குச் சமம்!" என்று சாப்ளின் நெஞ்சு வெடிக்க கதறி அழதார். சினிமா பேச தொடங்கிய போதும் கூட பேசாத படங்களையே எடுத்தார். தான் எடுக்கும் பேசாத படம் மக்களைப் பேச வைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட படந்தான் city lights. எதிரிகள் சதி செய்ததால் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் திரையிடப்பட்டு கட்டுக்கடங்கா கூட்டத்தைக் கூட்டி எதிரிகளை பணிய வைத்த படம். இந்தியாவிலிருந்து வரும் காந்தியைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார். உலகம் இயந்திரமாகி வருவதையும், மனித பண்புகள் நசுக்கப்படுவது பற்றியும் சாடி வந்த modern times வெளி வந்த பிறகு மனித குலத்தை மேம்படுத்த வந்தவனை சரியாகத் தான் அடையாளப்படுத்தியது அல்பபுத்தி அமெரிக்க அரசு "கம்யூனிஸ்ட்!" என்று. அமெரிக்க அரசு லண்டனுக்குப் புறப்பட்ட சார்லியிடம் தெரிவித்து, உங்கள் சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது, அமெரிக்காவில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவீர்கள். 

ஸ்விட்சர்லாந்து குடிபெயர்ந்து அங்கும் இரண்டு படங்களை இயக்கினார். 1972 ஆம் வருடம் கலையுலகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவப்படுத்தியது. சாப்ளின்டிசம்பர் 25, 1977ல் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88வது அகவையில் சுவிட்சர்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச் 1, 1978ல் இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...