Saturday, May 15, 2021

குடும்பங்களே கோவில்களாய் இருந்த தேசம், நம் தேசம் - குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக குடும்ப தினம் (மே 15).

குடும்பங்களே கோவில்களாய் இருந்த தேசம், நம் தேசம் - குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக குடும்ப தினம் (மே 15). 

உலக குடும்ப தினம் மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.  உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடும்ப அலகுகளின் ஸ்திரத்தன்மையையும் கட்டமைப்பையும் பாதிக்கும், மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நாள் குடும்பங்களின் முக்கியத்துவம் மற்றும் எதிர்மறையாக பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பலப்படுத்தப்பட்ட குடும்ப அலகு இறுதியில் சமூகங்களையும் நாடுகளையும் வலுப்படுத்த உதவுகிறது என்பதைக் காண்பிப்பதற்கும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது. 

சர்வதேச குடும்பங்கள் தினம் உலகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது.  சில சமூகங்களில், கூறப்பட்ட சமூகங்களில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து பொது அதிகாரிகள் கலந்துரையாடல்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்கிறார்கள்.  சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளைத் திட்டமிடுகின்றன.  தனிநபர்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் இந்த நாளை கொண்டாட தேர்வு செய்கிறார்கள்.  இந்த நாள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அந்த நாள் பொது விடுமுறை அல்ல.

 World Family Day GIF Happy Family Day Status | Rkalert.in

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம். இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய், இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. 

இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு தினம் கடைப் பிடிக்கப்படுகிறது என்பதைக் கூட வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருப்பது வேதனையிலும் வேதனை. ஆம், இளைய தலைமுறையினரின் மெத்தனப்போக்கு, தான்தோன்றித் தனம், கட்டுப்பாடில்லா வாழ்க்கை முறை போன்றவை தற்போது அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. காதல், திருட்டு, வன்முறை போன்றவற்றால் பிஞ்சு மனம் நஞ்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பெற்றோரின் அலட்சியமே காரணம். மேலும் சீரழிந்து வரும் கலாசார மாறுபாடும் இது போன்ற சம்பவங்களுக்கு அடிக்கல்லாக அமைந்துவிடுகிறது. கணவன், மனைவி உறவில் விரிசல், மாமியார், மருமகளிடையே நல்லிணக்கம் இல்லாமை போன்றவற்றால் காலம் காலமாக கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. 

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது. இதனால்தான் கொலை, கொள்ளை, தீவிரவாதம் போன்ற கொடும் செயல்கள் நடந்துவருகின்றன. இதை உடனே தடுப்பதுடன், மனநல ஆலோசனை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: உலக குடும்ப தினம் மே  15

கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை வீட்டில் மூத்தவர்கள் இருப்பதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுடன், கட்டுப்பாடும் நிறைந்திருக்கும். இதனால் உள்ளூர பயம் மேலோங்கும். ஆனால், இன்றோ பலரும் தன்னிச்சையாக வாழவும், முடிவுகளை மேற்கொள்ளவும் கற்றுக்கொண்டுவிட்டனர்.தாய், தந்தை கண்டிப்புடன் இருப்பதால் குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடிகிறது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் வேலைக்குச் செல்ல நேரிடும்போது குழந்தைகளைப் பொறுப்பாக யாரும் கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் அவர்கள் என்ன படிக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எனவே பலர் கணினி, அலைபேசி, இணையதளம், திரைப்படம், நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து என்று திரியநேரிடுகிறது. இதே கூட்டுக் குடும்ப வாழ்க்கையாக இருந்தால் அரவணைப்பும், கண்டிப்பும் கிட்டும். இன்றுள்ள இளம் தலைமுறையினரில் 90 சதவிகிதம் பேருக்கு தங்களது பெற்றோரைத் தவிர, வேறு உறவு முறைகளைத் தெரியவாய்ப்பே இல்லை. 

உறவினர்கள் வீட்டு விசேஷங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரமோ, வாய்ப்போ கிடைப்பதில்லை. பெரும்பாலான நேரங்களை தனிமையிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலுமே கழிக்க நேரிடுகிறது. இதனால் மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. தங்களுடைய குறைகளையோ, நிறைகளையோ மனம் விட்டு யாரிடமும் பேச முடிவதில்லை. குறைந்தபட்சம் தான் செய்வது சரியா, தவறா என்று முடிவெடுக்கக்கூடத் தெரிவதில்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தவறான வழிகளை நாட நேரிடுகிறது. தனிக்குடித்தனம் என்றால் யாரும் நம்மைத் தட்டிக் கேட்க மாட்டார்கள். சுதந்திரமாக இருக்கலாம் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது முழுக்க முழுக்க தவறு. எல்லாமே நமது செயல்களில்தான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் கூட்டு வாழ்க்கை ஏன் தேவை என சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நிறைகளை உணர முடியும்.

இதைவிட மற்றொரு அழுத்தமான காரணத்தை மனதில் கொண்டால் கூட்டுக் குடும்பவாழ்க்கை முறை அவசியம் என்ற எண்ணம் ஏற்படும். நாளுக்குநாள் அதிகரித்துவரும் விலைவாசியைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, தனிக்குடித்தனம் இருப்பவர்கள் கூட்டுக் குடும்பத்தில் சேரும்போது அவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கனம் உண்டாகும். அதிலும் முன்னரே குறிப்பிட்ட இன்டர்நெட் வாழ்வியல் முறையில், சமூக வலைதளங்களில் மட்டும் தான் உறவுகள் கூட்டாக இருக்கின்றன. அதாவது ஃபேஸ் புக், வாட்ஸ்-அப்களில் குரூப் உருவாக்கி அதில் ஓர் குடும்பமாக வாழ்கின்றனரே தவிர, கூட்டு குடும்பமாக வாழ்வது என்பது அதிசயமாக இருக்கின்றது. அதிலும் ஃபிளாட்டுகள் வந்தவுடன் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துவிட்டது கூட்டு குடும்ப வாழ்வியல் முறை. தாத்தா, பாட்டி, பெரியப்பா, மாமா, அத்தை, பேரக்குழந்தைகள், என்ற வாழ்வியல் முறை மிகவும் இன்பமானது என்பதை மறந்தே போ விட்டோம். முன்யெல்லாம் கோடை விடுமுறைகளில் மட்டுமே ஒன்றாக இருந்தவர்கள் சிலர் இருந்தன்றனர். அதையும் கூட தற்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து வருகிறது. ஷாப்பிங் மால், பார்ட்டி கிளப், தியேட்டர், பார்க், பீச் இதையெல்லாம் தாண்டி நிறைய சந்தோசங்களும், நன்மைகளும் கொண்டக் குடும்ப வாழ்க்கையை நினைவூட்டும் தினமின்று மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

குடும்பங்களே கோவில்களாய் இருந்த தேசம், நம் தேசம். ஆனால் இன்றைக்கு அழிந்து போன சிட்டுக் குருவிகள் போல குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து போய் விட்டது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்ற உறவுப் பெயர்கள் எல்லாம் மறைந்து கொண்டு இருக்கின்றன. சித்தியோ, அத்தையோ ஆன்ட்டி தான் பெயர். சித்தப்பாவோ, மாமாவோ அங்கிள் தான் பெயர். சித்தியை சின்ன அன்னையாகப் பார்த்த தலைமுறைகள் கடந்து போய் விட்டன. பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளை அண்ணன் என்றழைத்த மரபுகளைக் கடத்தி கஸின் பிரதர் என்ற நாகரீக வார்த்தையில் அழைக்கும் நவீன யுகமாகிப் போனது இன்று. நம் கிளைகள் எங்கெங்கு பரவினாலும் அதன் ஆணி வேர் குடும்பங்கள் தானே. கூடுகளாய் இருந்த மனம் கூண்டுகளுக்குள் சிக்கிக் கொண்டது. இயந்திர மயமாகிப்போன உலகில் இதயங்களுக்கு வேலை இல்லை.

 

 குடும்ப தினத்தை அறிவித்துக் கொண்டாடும் நம் சமுதாயத்தில் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டிய அவலமும் நிகழ்ந்து விட்டது. குடும்ப வன்முறைகள் பத்து வருடங்களில் அதிகரித்து விட்டன என்பதை நீதி மன்ற வழக்குகள் எடுத்துரைக்கின்றன. 2005ல் இந்த சட்டம் கொண்டு வரப் பட்ட பிறகு, தினம் தினம் காவல்துறையில் குவியும் புகார்களோ எண்ணிலடங்கா. வீட்டுச் சத்தம் வெளியே தெரியக் கூடாது என்ற காலம் போய் தெருச் சத்தங்களாக கேட்டுக் கொண்டு இருக்கின்றன. உப்பு பெறாத சண்டைகளால் பிரிந்த குடும்பங்கள்... தேவையற்ற ஈகோ, புறக்கணிப்பு, அவமானம் இப்படி குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகள் ஏராளம். குழந்தைகள் தினத்தையும், அன்னையர் தினத்தையும், தந்தையர் தினத்தையும் கொண்டாடும் நாம், இதன் அஸ்திவாரமான குடும்பத்தை கொண்டாட மறந்து விட்டோம். மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதில் சமூக என்ற வார்த்தை விடுபட்டு போய் விட்டது. 

குடு + இன்பம் = குடும்பம். இன்பங்களைத் தரும் இடங்கள் குடும்பங்களே. தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை தானே. தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தானே தந்தையின் அன்பு முன்னே. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தானே. பிள்ளைக் கனி அமுது தானே. இவையனைத்தும் சேர்ந்த நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் தானே. அம்மாவை நேசிக்கும் பிள்ளை மனைவியையும் நேசிப்பான். வீட்டில் தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தட்டிக் கொடுத்து வளர்க்கிறான் தன் குழந்தையை. குடும்ப பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள். 'கண்ணுக்குள்ளே வைச்சு வளர்த்திட்டேன், பொத்தி பொத்தி வளர்த்துட்டேன் என வயிற்றுக்கு வெளியேயும் கருப்பை சுமந்து வளர்க்கப்படும் குழந்தைகள், குடும்ப கஷ்டங்களை உணர்வதில்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட தலை முறைகளின் வலிகள், இன்று சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் நவ நாகரிகத் தலை முறைகளுக்குப் புரியாது தான்.

 

குடும்ப உறவுகளின் உன்னதங்களையும், வலிகளையும் உணரும் குழந்தைகளே பெற்றோரின் முதுமைக் காலத்தில் அவர்களைக் காப்பாற்றுகின்றனர். வாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல மனம் விட்டுப் பேசினால் கூட நோய் விட்டுப் போகும். 'எனக்கு ஒன்னுனா கேக்குறதுக்கு எங்க தாய் மாமா இருக்காரு' என்று கெத்து காட்ட முடிவதில்லை இன்று. காரணம் தனிக் குடும்ப அமைப்பு. தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும். கூட்டுக் குடும்ப உறவுகளாலே தான் இந்தப் பழமொழி சாத்தியமாகும்.

 

இன்பத்திலும், துன்பத்திலும் நம் உடன் இருப்பவை குடும்பம் தான். எத்தனை மைல் துாரத்தில் இருந்தாலும் கூட பேசும் குரலை வைத்து, என்னப்பா உடம்பு சரியில்லையா என்று கேட்கும் அம்மாக்கள் இருக்கும் வரை, 'பிள்ளைக்கு இந்த முட்டைய வைச்சுரு, நான் ஊறுகா வைச்சு சாப்பிட்டுக்கறேன்' என்று சொல்லும் அப்பாக்கள் இருக்கும் வரை, 'தங்கச்சி படிக்கட்டும்மா, நான் வேலைக்கு போய் உன்னையும், தங்கச்சியவும் பாத்துக்கறேன்மா' எனச் சொல்லும் அண்ணன்கள் இருக்கும் வரை, கணவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை, தனக்கும் பிடிக்காது என்று கூறும் மனைவிகள் இருக்கும் வரை, மனைவிக்காக தனக்கான சுகங்களை இழந்து கஷ்டப்படும் கணவன்கள் இருக்கும் வரை, 'ஆயிரம் சொன்னாலும் அது என் அத்தை தானே, அவங்கள விட்டுத் தர முடியுமா' எனச் சொல்கின்ற மருமகள்கள் இருக்கும் வரை இந்த மண்ணில் குடும்பம் என்ற அமைப்பு செழித்து வளர்ந்து கொண்டே தான் இருக்கும். 

 

இந்தியாவில் உலக குடும்ப தினமும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இதில் பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் கொண்டாட்டங்களில் இணைகின்றன.  இங்கே, இந்த சந்தர்ப்பத்தை கவனிப்பதன் நோக்கங்கள் ஒரு குடும்பத்தில் பிணைப்புகளைக் கொண்டாடுவது மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன.  இது ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிறுவனத்தின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வதற்கும் நிறுவனத்தில் உள்ள மற்றவர்களுடன் பிணைப்புகளை உருவாக்குவதற்கும் அனுமதிக்கிறது. 

 

சமுதாயத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியர்கள் தங்கள் குடும்பங்களுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளனர்.  உண்மையில், பல இந்தியர்கள் இன்னும் ஆணாதிக்க வரிகளின் அடிப்படையில் கூட்டு குடும்ப அமைப்பில் வாழ்கின்றனர்.  இந்திய சமுதாயத்தில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு தேவை, அதற்காக இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாக நிரூபிக்கப்படலாம். உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த நாள்.  பல்வேறு குடும்ப உறுப்பினர்களை அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் பற்றி பேசுமாறு நீங்கள் கேட்கலாம்.  உங்கள் அருகிலுள்ள பிற குடும்பங்களுடன் ஒரு தெரு விருந்தை ஏற்பாடு செய்வதன் மூலம் உங்கள் சமூகத்தின் மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளவர்களுடன் இந்த நாளைக் கொண்டாடலாம். 

 

உங்கள் சமூகத்துடன் இணைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமூக சேவையைப் பற்றி உங்கள் குடும்பத்தினருக்குக் கற்பிப்பதற்கான வாய்ப்பாக இந்த நாளை பயன்படுத்தவும்.  இந்த நாளில் நீங்கள் சமூக மேம்பாட்டு திட்டங்களுடன் பதிவுபெறலாம் மற்றும் பிற வறிய குடும்பங்களுக்கு உதவலாம். நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து விலகி இருந்தால், இதேபோன்ற சூழ்நிலையில் இருக்கும் உங்கள் நண்பர்களை அணுகவும்.  உங்களுக்காக ஒரு சமூகத்தை உருவாக்குவது முக்கியம், அது உங்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் உங்கள் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளும்.  நம்பிக்கை மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்ட உங்கள் சொந்த குடும்பத்தை உருவாக்கும் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள்.. 

எந்தவொரு சமூகத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று குடும்பங்கள்.  சமூகத்தின் பிற உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது மற்றும் ஒருங்கிணைப்பது என்பது குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுவது இங்குதான்.  பெரியவர்கள் தங்கள் குடும்பத்தினரால் ஆதரிக்கப்படுகிறார்கள்.  குடும்பப் பத்திரங்களை வளர்ப்பதற்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் நேரம் ஒதுக்குவது முக்கியம்.  ஒரு குடும்ப அலகு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், அத்தகைய குடும்பத்தின் தனிப்பட்ட உறுப்பினர்கள் ஆரோக்கியமாகவும் சமூகத்தின் பங்களிப்பு உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...