இந்திய ஏவுகணை நாயகன், மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் இன்று (ஜுலை 27, 2015).
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) அக்டோபர் 15, 1931ல் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால், இளம் வயதிலேயே, இவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும் இருந்தார்.
இராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூயவளன் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். பின்னர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார். கலாம் ஒரு உயர்தரத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து மனக்குறை ஆனதோடு, இரண்டு நாட்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லூரி தலைவரின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் "நான் உனக்கு அதிக பளு கொடுத்து எளிதில்லாத காலக்கெடுவை விதித்தேன்" என்று கூறினார்.
சென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது குறித்து ஒரு வித மனக்குறையுடன் இருந்தார். புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ்.எல்.வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ்.எல்.வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980ல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் எஸ்.எல்.வி திட்டத்தில் வேலை செய்ய தொடங்கியப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விரிவுப்படுத்தக்கூடிய விண்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார்.
1969ல், கலாம் அரசாங்கத்தின் இசைவு பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். 1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். 1970லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எல்.வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன. கலாம் அணு ஆயுத வடிவமைப்பு, வளர்ச்சி, மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின் பதிலியாக அழைக்கப்பட்டார். 1970ல், எஸ்.எல்.வி விண்வெளிக்கலனைப் பயன்படுத்தி ரோகினி-1 விண்வெளியில் ஏவப்பட்டது, இஸ்ரோவின் சாதனை ஆகும். 1970களில், கலாம் வெற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் தலைவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு மர்மமான நிதி ஒதுக்கினார். கலாம் மத்திய அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் தலைமைப்பங்கு வகித்தார்.
அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் மரியாதையால், 1980களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் முனைவர் வி.எஸ் அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். ஆர். வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடுவணரசின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இடைநிலை தூர ஏவுகணை, ப்ரித்வி தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக செலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக பேசப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் தலைமைப் பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார்.
சோதனை கட்டத்தில் கலாம், ஆர். சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது. 1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது. 2012ல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது.
அப்துல் கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார். 10 ஜூன் 2002 ல் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார். கலாம் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். அவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார்.
அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார். அறிவியலாலோசகர் பதவியிலிருந்து 1999ல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார். அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார். மக்களின் ஜனாதிபதி, பாரத ரத்னா ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ஜுலை 27, 2015ல் தனது 86வது அகவையில் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜுலை 30,2015ல், மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியம் நாள்தோறும் காலை எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வரை பொது மக்கள் கட்டணமின்றி காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த, கலாமை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாள், தமிழகத்தில் இளைஞர் எழுச்சி நாளாக 2015 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
APJ Kalam Nehru Memorial College Visit 06.04.2015 <---VIDEO LINK
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment