உலகின்
முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய நோபல்
பரிசு பெற்ற என்ரிக்கோ பெர்மி பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 29, 1901).
என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi) செப்டம்பர் 29, 1901ல் இத்தாலியில் ரோம் நகரில் பிறந்தார். இவரின் தந்தை அல்பெட்ரோ ஃபெர்மி, இரயில்வே துறையில் பணியாற்றியவர். இவர்கள் கிறித்தவக் கத்தோலிக்கப் பிரிவை சார்ந்தவர்கள். இவருக்கு ஒரு சகோதரனும் (கியோலியோ) ஒரு சகோதரியும் (மரியா) இருந்தனர். சிறு வயதிலேயே இயற்பியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்துப் இயற்பியலில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது கதிரியக்க ஆய்வுக்காக 21 ஆம் அகவையில் முனைவர் பட்டம் பெற்றார். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக் கொள்கையைத் தோற்றுவித்தார். இளமைப் பருவத்தில் தனது அண்ணனுடன் சேர்ந்து கையில் கிடைக்கும் இயந்திரங்களை எல்லாம் உடைத்து பிரித்து பார்ப்பார் என்ரிக்கோ. அவரின் அண்ணன் 1915ல் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது அதிர்ச்சி தாங்க முடியாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆனார். தன் அண்ணன் இறந்த மருத்துவமனையின் முன்பே சுற்றி திரிந்தார். அப்போது தான் இயற்பியல் புத்தகங்களை அவர் படித்தார். பின் தன் பதினேழாம் அகவையில் என்ரிக்கோ எழுதிய பல்கலைகழக நுழைவுத் தேர்வின் கட்டுரையை படித்த ஆசிரியர் 'அந்தக் கட்டுரைக்கு முனைவர் பட்டமே தரலாம்' என்று வியந்து பாராட்டினாராம்.
எலக்ட்ரான் அணுக்களின் ஓட்டம் குறித்த ஆய்வுகள் மற்றும் அவை நிறமாலையாய்ப் பிரிவது பற்றியும் ஃபெர்மி ஆரம்ப ஆய்வினை மேற்கொண்டார். ஓர் அணுவின் வெளி வட்டப் பாதையில் சுழலும் எலக்ட்ரானில் ஆரம்பித்த ஃபெர்மி தனது ஆய்வினை முன்னேற்றி மையக் கருவான அணுக்கருவுக்கே சென்றார். அதுவே அவரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் அணுக்கருவைப் பிளக்க முடியும் என்பதை அந்தச் சமயத்தில் வாழ்ந்த இயற்பியலார் ச்ட்ரஷ்மேன் கூறினார். இதைப் படித்த ஃபெர்மி தூண்டல் கதிரியக்கம் (Chain Reaction) நடைபெறுவதைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினார். இதுவே அவர் நோபல் பரிசு பெறக் காரணமான துறை ஆகும். தனது 22 ஆவது வயதில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டில் அணுசக்தியின் ரகசியம் இருப்பதைச் சொன்னர் ஃபெர்மி. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேகமற்ற நியூட்ரான் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார் ஃபெர்மி.
என்ரிக்கோவின் அறிவியல் திறமையைப் பாராட்டி பெனிட்டோ முசோலினி, உலக அளவில் இயங்கும் மிக உயரிய விருதான 'அறிவியல் வித்தகர்' என பொருள்படும் "எக்சலென்சா" என்னும் விருதினை அளித்து பாராட்டினார். ஒருமுறை அறிவியல் கழகங்கள் நடத்திய ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார் ஃபெர்மி. அந்த கூட்டத்திற்கு சிறப்புரை ஆற்ற வந்தவர் முசோலினி. அனைத்து அறிவியலாளர்களும் மகிழுந்தில் வந்து இறங்க, ஃபெர்மி மட்டும் மிகவும் எளிமையாக நடந்து, மிகவும் சாதாரண உடை அணிந்து வந்தார். சாதாரண மக்கள் போல் காட்சி அளித்த ஃபெர்மியைக் காவலாளி உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். மறுத்த காவலாளியிடம் மல்லுக்கு நிற்கவில்லை ஃபெர்மி. தான் இன்னார் என்றும், முசோலினிக்கு என்னை நன்றாகத் தெரியும் என்றோ ஃபெர்மி கூறவில்லை. ஏனெனில், சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை என்று ஃபெர்மிக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர் 'நான் ஃபெர்மியின் கார் ஓட்டி, காலை வேலைக்குத் தாமதமாக வந்துவிட்டேன், திரும்பும் போதாவது அய்யாவை அழைத்துச் செல்ல வேண்டும்' என்று கூறவே காவலாளி அனுமதித்தான், என்று தன் சுயசரிதையில் ஃபெர்மி குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் ஃபெர்மியின் எளிமையான குணத்தைக் கூறுகிறது.
மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய ஃபெர்மி, ஹான்ஃபோர்ட் அணுக்கரு உலை நிறுவுவதிலும் பெரும் பங்கு ஆற்றினார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942ல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார். அனைத்து கணக்கீடுகளையும் சரியாக வடிவமைத்து அன்றைய இயற்பியலின் உச்சியில் ஏறி நின்றார் பெர்மி. தனது தூண்டல் கதிரியக்கத்திற்காக எக்சலென்சா என்ரிக்கோ ஃபெர்மி சுவீடனில் மிக உயரிய விருதான நோபல் பரிசை பெற்றார். ஹிட்லர் போல முசோலினியும் இனவெறிக் கொள்கையைப் பின்பற்ற, தனது மனைவியான யூதப் பெண்மணிக்கு ஆபத்து நேருமோ என்று எண்ணி சுவீடனில் நோபல் பரிசு பெற்ற கையோடு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் ஃபெர்மி. பின் தனது தாய் நாடான இத்தாலிக்கு அவர் செல்லவே இல்லை. மேலும் தனது இறுதிக் காலத்தை ஃபெர்மி தனிமையிலேயே கழித்தார்.
1926 ஆம் ஆண்டில் மேட்டியூக்சி பதக்கம், 1938 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு, 1942ல் இயூசு பதக்கம், 1947 ஆம் ஆண்டில் ஃபிராங்க்லின் பதக்கம் மற்றும் 1953ல் ரம்ஃபோர்ட் பரிசு ஆகிய பல பரிசுகள் பெர்மியின் சாதனைகளுக்காக வழங்கப்பட்டன. மன்காட்டன் திட்டத்தில் இவரது சீறிய பங்களிப்புக்காக 1946 ஆம் ஆண்டு மதிப்பு மிக்க மெடல் பார் மெரிட் பரிசு கிடைத்தது. 1950 ஆம் ஆண்டு இராயல் கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தாலியின் புகழ் பெற்ற கலைஞர்கள், விஞ்ஞானிகள், வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க பிரமுகர்கள் பட்டியலில் பெர்மியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்காக இத்தாலிய பேரிடர் ஆலயங்களாக அறியப்படும் சாண்டா குரோசின் பசிலிக்காவில் அமைக்கப்பட்டுள்ள தகடு பெர்மிக்கு ஒரு நினைவுச்சின்னமாக உள்ளது. 1999 ஆம் டைம் இதழ் பட்டியலிட்ட இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 மனிதர்களில் பெர்மியும் இடம்பெற்றார். 20 ஆம் நூற்றாண்டு இயற்பியலாளர்களில் பெர்மி ஓர் அசாதாரணமானவராக கருதப்பட்டார். கோட்பாட்டு ரீதியாகவும் பரிசோதனை ரீதியாகவும் இரண்டிலும் சிறந்து விளங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பெர்மி பிறந்திருந்தால், அவரே ரூதர்போர்டின் அணுக்கருவை கண்டுபிடித்து, ஹைட்ரஜன் அணுவின் போரின் கோட்பாட்டையும் வளர்த்திருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளலாம் என்று இயற்பியல் வரலாற்றாசிரியர் சிபி சினோ கூறுகிறார்.
பெர்மி ஓர் எழுச்சியூட்டும் ஆசிரியராக அறியப்பட்டார். மேலும் கவனம், எளிமை மற்றும் அவரது விரிவுரைகளுக்கான கவனமான தயாரிப்பு ஆகியவற்றுக்காகவும் நன்கு அறியப்படுகிறார். இவரது சொற்பொழிவுகள் பின்னர் புத்தகமாக்கப்பட்டன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. என்ரிக்கோ பெர்மியை கௌரவிப்பதற்காக பல பொருட்களுக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெர்மி ஆய்வகத் துகள் முடுக்கி, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான இலினொய் மாநிலத்தின் பட்டாவியா நகரிலுள்ள இயற்பியல் ஆய்வகம் உள்ளிட்டவை 1974ல் மறு பெயரிடப்பட்டன. பெர்மியின் அண்டக்கதிர் வீச்சு ஆராய்ச்சியை கௌரவிக்கும் பொருட்டு பெர்மி காமா-கதிர் விண்வெளித் தொலைக்கியும் 2008 ஆம் ஆண்டில் மறு பெயரிடப்பட்டது. மிச்சிகன் நியூபோர்ட்டில் பெர்மி 1 மற்றும் பெர்மி 2 என்ற பெயர்களில் அணு மின் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இத்தாலியில் உள்ள டிரினோ வெர்சல்லீசுவில் என்ரிக்கோ பெர்மி அணு மின்நிலையம் மற்றும் அர்கெந்தினாவில் ஆர்.ஏ-1 என்ரிகோ பெர்மி அணு ஆராய்ச்சி உலை ஆகியவையும் இவ்வாறே பெயரிடப்பட்டன. விஞ்ஞான சமுதாயத்திற்காக பெர்மியின் பங்களிப்பிற்கு மரியாதை அளிக்கும் விதமாக 1952 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு செயற்கை தனிமத்திற்கு பெர்மியம் என்று பெயரிடப்பட்டது. இதன்மூலம் தனிமங்களுக்குப் பெயரிடப்பட்ட 16 விஞ்ஞானிகளின் பட்டியலில் இவரும் ஒருவராக இடம்பெற்றார்.
1956 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அணுசக்தி ஆணையகம் பெரிமியை கௌரவிக்கும் நோக்கில் பெர்மி விருது என்ற விருதை உருவாக்கி மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படும் பெர்மி விருதை வழங்கி வருகிறது. ஓட்டோ ஆன், இராபர்ட் ஓப்பனெய்மர், எட்வர்ட்டு டெல்லர் மற்றும் ஆன்சு பெத்தே போன்ற நன்கு அறியப்பட்ட விஞ்ஞானிகள் இவ்விருது பெற்றுள்ளனர். குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய என்ரிக்கோ பெர்மி நவம்பர் 28, 1954ல் தனது 53வது அகவையில் சிக்காகோ, அமெரிக்காவில் வயிற்று புற்று நோயினால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவருடன் பணி புரிந்த இரு மாணவர்களும் அவருடனேயே புற்றுநோயின் காரணமாக இறந்தார்கள்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
No comments:
Post a Comment