Friday, October 21, 2022

தலைகீழாகக் காட்சியளிக்கும் ஆசியாவிலே ஒரே அழியா இலங்கை அம்மன் கோவில்.

தலைகீழாகக் காட்சியளிக்கும் ஆசியாவிலே ஒரே அழியா இலங்கை அம்மன் கோவில்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கூனவேலம்பட்டிபுதூரில் இருக்கிறது ஆயா கோயில் என்று பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் திருக்கோயில். மூன்று வாயில்கள் கொண்ட கோயிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாயில் திறக்கப்படுகிறது. வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாசலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை முன்மண்டபம் 16 தூண்களால் எழுப்பப்பட்டுள்ளது. முன் மண்டபத்தை ஒட்டியுள்ள ஊஞ்சலில் திருவிழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் வைத்து, பாட்டுப்பாடி வழிபடுவது வழக்கமாக உள்ளது. ‘‘இலங்கை அதிபதி ராவணனின் சகோதரியான சூர்ப்பனகை தான், அழியா இலங்கையம்மன் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார். சீதையைத்தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற சூர்ப்பனகை தடுத்தாள்.


அனுமன் தன் வாலினால் அவளை கட்டி சுருட்டி வீச, புதர்மண்டிய வனப்பகுதியான இந்தப்பகுதியில் தலைகீழாக வந்து விழுந்தாள். அந்த சூர்ப்பனகையை அழியா இலங்கை அம்மனாக மக்கள் வழிபடுகின்றனர்,’’ என்பது தலவரலாறு. இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே. கர்பகிரகத்தில் அம்மன் தலை மட்டுமே இருக்கும். ராம, லட்சுமணர்களால் வெட்டப்பட்ட சூர்ப்பனகையின் தலை விழுந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால் உடல் இல்லாத தலை மட்டுமே உள்ளது. இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறார் என்பது பெயர்க்காரணம். பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மனின் தமக்கையாகவும் அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். இதனால் அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாக தெய்வங்களுக்கும் தனிச்சன்னதி உள்ளது.

மேலும் தனிக்கட்டிடம் ஒன்றில் அழியா இலங்கை அம்மனின் குழந்தைகள் என்று அழைக்கப்படும் 27 குழந்தைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களை 27 நட்சத்திரங்களாக பக்தர்கள் வழிபடுகின்றனர். மற்றொரு புறத்தில் நாகர் சிற்பங்கள் உள்ளன. இதற்கு அருகிலுள்ள பாம்பு புற்றில், பால் ஊற்றி முட்டைகளை உடைத்து வழிபடுகின்றனர். இப்படி வழிபடுவதால் பிரசவம் சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நோய் நொடிகள் தீரவும், தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும் பக்தர்கள் திரண்டு வந்து அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறும் போது சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து கோயிலில் வைத்துச் செல்கின்றனர். நாய், பாம்பு உருவங்களையும் சமர்ப்பிக்கின்றனர். அதோடு கோயிலை 3 முறை வலம் வந்து, அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு பிறகு வரும், முதல் வெள்ளிக்கிழமையில் திருவிழா நடக்கும். அதற்கு முந்தைய 3நாட்கள் முன்பே, சுற்றுப்புற கிராம மக்கள் விரதம் தொடங்குவது வழக்கம். இந்த 3 நாட்களும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் அரிசி சாதம் மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது சிறப்பம்சமாகும். கோதுமை, ராகி, கம்பு உணவுகளை மட்டுமே உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். இதற்கடுத்து கோயில் வளாகத்தில் கிடா வெட்டி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விருந்து வைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.














இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...