Tuesday, January 31, 2023

அரியமங்களத்தில் நட்சத்திர திருவிழா

அரியமங்களத்தில் நட்சத்திர திருவிழா 


கி. பி. 1610 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வானியலாளர் கலிலியோ கலிலி நம் சூரிய குடும்பத்தின் வியாழன் கோளை தன்னுடைய தொலைநோக்கி மூலமாக கண்டறிந்து அதனை சுற்றிவரும் நான்கு நிலவுகளை முதலில் கண்டுபிடித்தார். அதை போற்றும் விதமாக நட்சத்திர திருவிழா 19.01.2023ல் நடத்தப்படுகிறது. 


இதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம்,  எய்டு இந்தியா மற்றும் நேரு நினைவு கல்லுரி அஸ்ட்ரோ கிளப், திருச்சி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து திருச்சி அரியமங்கலம் ஜோசப் கிருஷ்ணா தெருவில் நட்சத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது. கோள்கள், நிலா காட்சிகளை தொலைநோக்கி வழியாக 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்  மற்றும் பொதுமக்கள் கோள்களை பார்வைவிட்டனர். 








லால்குடி தென் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் வான்நோக்கும் நிகழ்ச்சி.

லால்குடி தென் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் வான்நோக்கும் நிகழ்ச்சி. 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் உள்ள தென் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் வானில் உள்ள கோள்களை தொலைநோக்கி மூலம் மாணவ மாணவிகள் காணும் வகையில் 26.01.2023ல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் குழந்தைகள் 300க்கும் மேற்பட்ட பெரியோர்கள் கோள்களை தொலைநோக்கி மூலம் பார்வையிட்டனர்


மணக்காலில் உள்ள தென்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் லால்குடி இயற்கை விழுதுகள், நேரு நினைவு கல்லுரி அஸ்ட்ரோ கிளப், திருச்சி அஸ்ட்ரோ கிளப் மற்றும் சங்கம் சில்க்ஸ் இணைந்து லால்குடியில் முதன்முறையாக வானில் உள்ள கோள்களை தொலைநோக்கி வழியாக காணும் நிகழ்ச்சி நேற்று மாலை ஆறு மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது


4கோள்கள் பூமிக்கு அருகில் வருகின்ற காட்சிகளை தொலைநோக்கி வழியாக 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் குழந்தைகளும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோள்களை பார்வைவிட்டனர். நான்கு கோள்கள் எதிர்பார்த்த நிலையில் ஐந்தாவது கோளும் காட்சியளித்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.







Monday, January 30, 2023

50,000 ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம்.

50,000 ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம்.


வானில் ஒரு புதிய விருந்தாளி பூமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பச்சை நிற வால் நட்சத்திரம் என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஏனெனில், இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்குகிறது. 

இதற்கு முன்பு இந்த வால் நட்சத்திரம் வருவதற்கு முன் நியாண்டர்தால் மனிதர்கள் பூமியில் வாழ்ந்தனர். மேலும் பூமியை ஒருமுறை சுற்றி முடிக்கும் வரை நவீன மனிதர்கள் பரிணாம வளர்ச்சியடைந்தனர்.

அதனால்தான் இந்த வால்நட்சத்திரம் தனித்துவமானது என பெரும்பாலானோர் கருதுகின்றனர். 

வால் நட்சத்திரம் என்பது என்ன?

சூரிய குடும்பத்தின் எச்சங்களில் இருந்து உருவானவை வால் நட்சத்திரங்கள் என்று அமெரிக்க விண்வெளி முகமையான நாசா கூறுகிறது. 

எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், விண்ணில் உள்ள பாறைகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் ஆன கோள வடிவிலானதுதான், வால் நட்சத்திரம்.

வால் நட்சத்திரங்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனை நெருங்கும்போது அவற்றுக்கு வால் போன்ற பகுதி தோன்றுகிறது. இது, வால் நட்சத்திரத்தில் உள்ள ஐஸ் கட்டி, சூரியனின் வெப்பத்தால் உருகுவதால் தோன்றுகிறது.  


2020ஆம் ஆண்டில் வடக்கு அரைக்கோளத்தின் பல பகுதிகளில் காணப்பட்ட நியோவைஸ் வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. 


சில வால் நட்சத்திரங்கள் சூரியனை ஒருமுறை சுற்றிவர குறுகிய காலத்தை எடுத்துக்கொள்ளும். சில நட்சத்திரங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாகும். நீண்டகால வரம்புடைய வால் நட்சத்திரங்கள் என இவை அழைக்கப்படுகின்றன.


விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பெரும்பாலான 'நீண்ட கால வால் நட்சத்திரங்கள்' சூரியனில் இருந்து 306 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனி மேகத்தில் உருவாகின்றன.

பனிக்கட்டி துண்டுகளால் ஆன இத்தகைய பனி மேகம் (Oort Cloud), சூரியனைச் சுற்றி வரும் ஒரு போர்வை அல்லது மேல் ஓடு எனலாம்.  

C/2022 E3 (ZTF) எனும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரமும் பனி மேகத்தில் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகளின் கூறுகின்றனர். 


விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகை, காந்தி மண்டபம் ரோடு, சென்னை 600 025.
 பத்திரிக்கைச் செய்தி! 

பக்கத்தில் வருகிறது பச்சை வால்மீன் ! 
கண்டு ரசிப்போம் வாருங்கள். 

த.வி வெங்கடேஸ்வரன், பா.ஸ்ரீகுமார் அறிவியல் பலகை (விஞ்ஞான் பிரசார். புது டெல்லி) .

வால்மீனால் வரும் ஒரே 'தோஷம்' "சந்தோஷம்" மட்டுமே.

பல நூறு வால்மீன்கள் ஒவ்வொரு ஆண்டும் சூரியனுக்கு அருகே வருகிறது. ஆனால் இவற்றில் சில வால்மீன்கள் தான் பூமிக்கு அருகாமையில் வந்து செல்கிறது. பூமிக்கு அருகே வரும்போது போதிய அளவு பிரகாசத்துடன் இருந்தால் மட்டுமே வெறும் கண்களுக்கு இரவு வான் விருந்தாகக் காட்சி தர முடியும். அவ்வாறு வெறும் கண்களுக்குக் காட்சி தரும் வால்மீன்கள் அரிது. பச்சை வால்மீன் எனப்படும் C/2022 E3 (ZTF) வால்மீனும் இது போன்ற அரிய வகை வால்மீன்.

பச்சை வால்மீன் அடுத்த சில நாட்கள் நடு இரவு சமயத்தில் வட துருவ விண்மீன் (pole star) அருகே காட்சி தரும். வெறும் கண்களால் காணும் அளவுக்கு பிரகாசம் அடையும் என விஞ்ஞானிகள் எதிர் பார்கிறார்கள்.

50,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் கற்காலம் நிலவிய போது இந்த வால்மீன் பூமிக்கு அருகே வந்தது. அதன் பின்னர் தற்போது தான் வருகிறது.

இந்த வால் மீன் வருவதால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இந்த வால் மீனை நாம் அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும். 

எப்படி பார்க்கலாம்

குறிப்பாக வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி மாலை மயங்கியதும் வடக்கு அடிவானில் இந்த வால்மீன் பிரகாசமாக தென்படும் என கணிப்பு செய்துள்ளனர். எனினும் ஜனவரி மாத இறுதி நாட்கள் முதல் பிப்ரவரி பத்தாம் நாள் வரை காண இயலும். வடக்கு அடிவானுக்கு அருகில் துருவ விண்மீன் அருகே இந்த வால் மீன் தென்படும். எனவே துருவ விண்மீனை எளிதில் காணும் படியான இடத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும். வடக்கு அடிவானை மறைப்பு செய்யும் மரம், கட்டிடம் போன்றவை ஏதுமில்லாத இடமாக அது இருக்கவேண்டும். மேலும் அருகே பிரகாசமான விளக்கு ஒளி இல்லாமல் இருட்டான பகுதியை தேர்வு செய்வது அவசியம். சுமார் நடுஇரவில் வானில் உயரே எழும் எனவே நடுநிசி சமயத்தில் காண்பது தான் சிறப்பு. சிறு பைனாகுலர் போன்ற கருவிகள் வால் போன்ற பகுதிகளை நுணுக்கமாக காண உதவும்.


வால்மீன் என்றால் என்ன ?

அழுக்கு தூசி, தும்பு மற்றும் பனிக்கட்டி சேர்ந்த கலவை தான் வால்மீன். சுமார் பத்து கிலோமீட்டர் அளவு கொண்டது வால்மீன்கள் நீராலான பனி தவிர உலர் பனி எனப்படும் கார்பன் டை ஆக்சைடு மீத்தேன், அம்மோனியா, கார்பன் மோனாக்சைடு போன்ற எளிதில் ஆவியாகும் பொருள்களும் உறைந்து பனி வடிவில் வால்மீன்களில் இருக்கும்.

ஒரு கட்டிடம் கட்டி முடிந்த பின்னர், அந்த இடத்தில் உடைந்த செங்கல். திட்டுத் திட்டாகச் சிமென்ட், கான்கிரீட், காலி பெயின்ட் டப்பா எல்லாம் இரைந்துகிடப்பது போல, சுமார் 460 கோடி ஆண்டுகள் முன்னர் உருவான சூரிய குடும்பத்தில் சூரியன், கோள்கள், துணைக்கோள்கள் எல்லாம் உருவாகிய பின்னர். எஞ்சிய பொருட்களே வால்மீன்கள் எனக் கருதுகிறார்கள்.

வால்மீனுக்கு வால் வருவது எப்படி ?

குயுப்பர் மண்டலத்திலும், ஊர்ட் முகில் பகுதியிலும் வால்மீன் நிலை கொள்ளும்போது அதற்க்கு வால் ஏதும் இருக்காது. தற்செயலாக அவற்றின் நிலை தடுமாறி சூரியனை நோக்கி வலம் வரும்போது தான் வால் உருவாகும். சூரியனுக்கு அருகே வரும்போது அதன் வெப்பம் மற்றும் சூரியனிலிருந்து வெளிப்படும் அயனி காற்று முதலியவற்றால் தான் வால்கள் உருவாகின்றன.


சூரிய வெப்பத்தின் காரணமாக பல்வேறு வகை உறை பொருள்கள் உருகும் சூரிய கதிர்கள் தூசு முதலியவற்றை ஊதித்தள்ளும். இதன் காரணமாக. இரண்டு விதமான வால்கள் வால்மீன்களில் உருவாகும் அயனி பொருள்கள் கொண்ட நீண்ட குறுகிய நீல நிற வால் ஒன்றும், வாயு தூசு, தும்பு மற்றும் போல விரிந்த சிறிய வால் ஒன்றும் தோன்றும்.


சூரியனை வலம் வரும்போது அதனை சுற்றி வரும், மறுபடி சூரியனிலிருந்து விலகி செல்லும். வால்மீனின் தொலைவு கூடக்கூட அதன் வால் அளவு சுருங்கும் மேலும் மேலும் தொலைவில் செல்லும்போது மறுபடி வால் மறைந்து போகும் எனக் கூறத் தேவையில்லை.



பச்சை வால்மீன் ஏன் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது ?

இந்த வால்மீனில் கார்பன் சிறப்பு வடிவில் உள்ளது. நிலக்கரியும், வைரமும் கார்பனின் வெவ்வேறு வடிவங்கள் என நாம் அறிவோம் . அதுபோல இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்த ஈரணு மூலக்கூறு வடிவில் கார்பன் உள்ளது. மேலும் இந்த வால்மீனில் சயனசன் மூலக்கூறுகளும் செறிவாக உள்ளன. இந்த மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வரும் ஏழு நிறங்களில் பச்சை நிறத்தைத் தவிர மற்ற எல்லா நிறங்களையும் உட்கவர்ந்து கொள்ளும் பச்சை நிறம் மட்டும் பிரதிபலிப்பதால் இந்த வால்மீன் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது.

வால்மீன்கள் எங்கிருந்து வருகிறது

சூரிய மண்டலத்தில் இரண்டு பகுதிகள் வால்மீன்களின் வாழ்விடங்கள் நெப்டியுனுக்கு அப்பால் குயுப்பர் மண்டலமும் (Kuiper belt) மிக தொலைவில் சூரிய மண்டலத்தை புகைமூட்டம் போல சூழ்ந்துள்ள ஊர்ட் முகில் (Oort cloud) பகுதியிலும் வால்மீன்கள் திரண்டு உள்ளன என கருதுகிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கும் குறைவான ஊசல் பொழுது கொண்டுள்ள குறை ஊசல் வான்மீன்கள் பெரும்பாலும் சூரியனும் கோள்களும் உருவானபோது எஞ்சிய எச்சம். இவை குடயுப்பர் மண்டலத்தில் உள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீண்டகால ஊசல் பொழுது கொண்ட வால்மீன்கள் பெரும்பாலும் சூரியன் உருவான வின்முகிலின் எச்சமாகவோ அல்லது சூரிய குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தை சுற்றி வரும்போது
விண்மீன்களுக்கு இடையே உள்ள விண்வெளியில் உள்ள பொருள்கள் கவரப்பட்டு உருவானதாக இருக்கும் பகுதியில் எனக் கருதுகிறார்கள் . இவை ஊர்ட் முகில் உள்ளன. சுருக்கமாக கூறினால் வால்மீன்களை ஆராய்வதால் சூரியன் மற்றும் சூரிய மண்டலத்தின் பரிமாண வளர்ச்சியை அறிந்து கொள்ள இது உதவும். 


வால்மீன் தோன்றுவதால் ஆபத்தா ?

ஒருகாலத்தில் திடீர் என வானவெளியில் வால்மீன் தோன்றுவது அச்சத்தை விளைவித்தது. அதன் காரணமாக வால்மீன்களை ஒருகாலத்தில் "தூமகேது" என்று அழைத்தனர். தூமகேது வானில் தோன்றினால் பஞ்சம், பசி, பட்டினி, அரசர்களின் இறப்பு போன்ற தீய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறி பயமுறுத்தி வந்துள்ளனர். எனவே வால்நட்சத்திரத்தின் வரவு என்பது ஒரு கெட்ட சகுனமானவே கருதப்பட்டது. இது மிகவும் தவறானது. இப்படி வால் நட்சத்திரம் வருவதால் பூமியில் எந்த  விதமான பாதிப்பும் ஏற்படாது. 

இன்று ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி வழியே மாதத்துக்குச் சுமாராக ஐந்து அல்லது ஆறு வால்மீன்களை வானவியலாளர்கள் இனம் காண்கிறார்கள். எடுத்துக்காட்டாக 2019 இல் 66 வால்மீன்களும், 2020இல் 73 உம், 2021இல் 105 உம் 2022 இல் 76 புத்தம் புது வால்மீன்கள் இனம் காணப்பட்டது. இவையெல்லாம் இரவு வானில் வானக் காட்சியை ஏற்படுத்தாது, சில மட்டுமே பூமிக்கு அருகிலும் பிரகாசம் கொண்டும் அமையும் . அவை மட்டுமே வெறும் கண்களுக்கு தென்படும். வாராது வந்த மாமணியை போல அரிதாக தென்படும் வால்மீனை கண்டு இன்பம் அடையாமல் சிலர் அச்சத்தில் ஆட்பட்டு விடுகின்றார்; சிலர் வேண்டும் என்றே தேவையற்ற பீதியை கிளப்பி விடுகின்றனர். இது தவறு. இந்த அற்புத வான் நிகழ்வை கண்டு ரசிக்க வேண்டுமே தவிர அச்சம் கொள்ள தேவையில்லை. 

காலந்தோறும் வால்மீன் ஆய்வு

மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக சிலர் செயல்ப்பட்டு வருவது சரியான போக்கு அல்ல. 
பண்டைய காலம் தொட்டே ஆய்வு வழியில் வால்மீன்களை காணும் அறிவியல் போக்கும் இருந்தது. தொலைநோக்கி இல்லாத காலத்தில் வெறும் கண்களால் வால்மீன்களை கண்டு அதுகுறித்த குறிப்புக்களை எழுதி வைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக புறநானூறு பாடலில் "மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்" எனும் வரி அந்தக் காலத்தில் வால்மீன்களை இனம் கண்டுள்ளனர் என நமக்கு தெரிவிக்கிறது. ஆயினும் கடந்த காலத்தில் தொலைநோக்கி பயனுக்கு வந்த பிறகு வால்மீன்களின் வால் எப்படி உருவாகிறது. ஒன்றல்ல மூன்று வால்கள் உண்டு என பற்பல தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடிந்தது. சமீபகாலங்களில் விண்கலங்கள் கொண்டு பற்பல வால்மீன்களை ஆய்வு செய்கிறார்கள் . 67P/சுரியுமோவ்- ஜெராசிமென்கோ, 19P/போரெல்லி, C/2006 P1 - மெக்நாட், 21P/ஜியாகோபினி- ஜீனர், 26P/கிரிக்-ஸ்க்ஜெல்லரப், 1P/ஹாலி, 103P/ஹார்ட்லி, 9P/டெம்பிள்-1. 81P/வைல்டு முதலிய வால்மீன்களை விண்கலம் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். வால்மீன்களில் உள்ள பொருள்களின் செறிவு என்ன? இந்த வால்மீன்கள் எங்கே எப்படி எப்போது உருவாயின போன்ற சுவையான கேள்விகளுக்கு இந்த ஆய்வுகள்மூலம் விடை தேடிக் கொண்டிருக்கிறோம். 

பூமிக்கு நீர் கொண்டு வந்ததா வால் மீன்கள்?

வால்மீன்கள் கண்களுக்கு விருந்து மட்டும் அல்ல. பூமிக்கு நீர் கொண்டு வந்து அளித்ததும் வால்மீன்கள் தாம் எனக் கருதுகிறார்கள். நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். பூமியின் நீர் எங்கிருந்து வந்தது? யார் கொண்டு வந்தது? பூமி உருவான போது அதன் வெப்பம் மிகமிக கூடுதலாக இருந்தது. அந்த கட்டத்தில் பூமியில் இருந்த நீர் மூலக்கூறுகள் எல்லாம் மிகு வெப்பத்தின் காரணமாக ஆக்சிஜன் தனியாகவும் ஹைட்ரஜன் வேறாகவும் உடைந்து போயிருக்கும். ஏற்கனவே உடைந்து போய்விட்டதால் பூமி குளிர்ந்த பிறகும் போதிய நீராவி எஞ்சி இருக்காது என்பதால் பூமியின் மீது கடல் எரி போன்ற நீர்நிலைகள் உருவாகியிருக்க முடியாது. அப்போது பூமியில் உள்ள நீர் எங்கிருந்து வந்தது?

புராணக்கதையின் படி பகீரதன் தவம் செய்து சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார் என்பது ஐதீகம். கங்கை பூமிக்கு வந்தபிறகு தான் நீர் மிகுந்து கடல் எரி குளம் போன்ற நீர் நிலைகள் உருவாயிற்று எனக் கருதினர். ஆனால் பூமிக்கு நீரை கொண்டு வந்து அளித்தது வால்மீன்கள் தான். சுமார் சரிபாதி பனிக்கட்டி நிரம்பிய வால்மீன்கள் பூமியின் மீது மோதியபடி இருந்தன. இந்த வால்மீன்களில் இருந்த நீர் தான் சிறிது சிறிதாகச் சேர்ந்து பூமியில் கடல் எரி, குளம் போன்ற நீர்நிலைகள் உருவாயின. 

வால்மீன்களை எப்படி பெயரிடுகிறார்கள் ?

வால்மீன்களின் பெயரில் நான்கு பகுதிகள் உண்டு. முதல் பகுதி P/ அல்லது  C/ என்று இருக்கும். குறிப்பிட்ட கால அளவில் மீண்டும், மீண்டும் வந்து போகும் ஹாலி வால்மீன் போன்ற வால்மீன்களுக்கு P/ என்றும் நீண்டகால ஊசல் காலமும் சூரியனின் ஈர்ப்பு தளையிலிருந்து விடுபட்டு செல்லும் அளவுக்கு வேகமும் கொண்ட வால்மீன்களுக்கு C என்றும் குறி செய்வார்கள். பெயரின் இரண்டாவது பகுதி அந்த வால்மீன் இனம் காணப்பட்ட ஆண்டு. மூன்றாவது பகுதி எழுத்தும் எண்ணும் இணைந்தது. ஜனவரி 1 முதல் 15 வரை இனம் கண்டால் A எனவும் ஜனவரி 16 முதல் 31க்குள் இனம் காணப்பட்டால் அது B எனவும், பெப்ரவரி 1 முதல் 15 க்குள் என்றால் C எனவும் ஆங்கில எழுத்து அளிப்பார்கள். அந்த பதினைந்து நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரிசையைப் பொருத்து எண் அளிக்கப்படும். நான்காவது பகுதியில் இனம் கண்ட நிறுவனம் அல்லது கண்டுபிடிப்பாளர் பெயர் அளிக்கப்படும்.

C/2022E3 (ZTF)  என்பது Zwicky Transient Facility (ZTF)  தொலைநோக்கி நிறுவனம் மூலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 முதல் 15 ஆம் தேதிக்குள் மூன்றாவதாக கண்டுபிடிக்கப்பட்ட வால்மீன் என்ற பொருள் கொள்ள வேண்டும். 
எங்கிருந்து பார்க்கலாம்?
தமிழ்நாட்டிலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணிக்குள் வடகிழக்கு வான் பகுதியில் துருவ நட்சத்திரத்திற்கு அருகே இந்த வால் நட்சத்திரத்தை காண முடியும்.

தமிழ்நாட்டில் விஞ்ஞான் பிரச்சார்- அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து பல்வேறு மாவட்டங்களில் தொலைநோக்கி மூலம் அதிகாலைப் பொழுதில் வால் நட்சத்திரங்களை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த வால் நட்சத்திரத்தை எங்கு காண்பது? எப்படி காண்பது?

பச்சை நிற வால் நட்சத்திரத்தை எங்கு காணலாம்?

இந்த வால் நட்சத்திரம் மார்ச் 2022ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அதாவது, இது வியாழன் கோளுக்கு அருகில் செல்லும் வரை இந்த வால் நட்சத்திரம் மனிதர்களால் கண்டறியப்படவில்லை. 

C/2022 E3 (ZTF) என்பது இந்த வால் நட்சத்திரத்தின் அறிவியல் பெயர். ஆனால், இது பச்சை நிறத்தைக் கொண்டிருப்பதால் பெரும்பாலானோர் இதை பச்சை வால் நட்சத்திரம் என்கின்றனர்.

இந்த வால் நட்சத்திரத்திற்கு பச்சை நிறம் எப்படி வந்தது? 

இந்த வால் நட்சத்திரம் அதிக டயட்டோமிக் கார்பனை (இரண்டு கார்பன் அணுக்களின் ஜோடி) கொண்டுள்ளது. இதனால் சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களால் இந்த வால் நட்சத்திரம் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது. 

வரும் பிப்ரவரி 2ஆம் தேதியன்று இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிப்ரவர் 10-12க்கு இடையில் செவ்வாய் கோளை அடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, இந்த வால் நட்சத்திரம் வடக்கு அரைக்கோளப் பகுதிகளில் தெரியும். 

”இந்த வால் நட்சத்திரம் சுமார் 4.2 கோடி கிமீ தொலைவில் வரும், இந்தத் தொலைவு, சூரியனிலிருந்து புதன் கிரகத்தின் தொலைவுக்கு ஒத்ததாகும்," என மும்பை நேரு கோளரங்கத்தின் இயக்குநர் அர்விந்த் பராஞ்ச்பே கூறுகிறார்.

வால் நட்சத்திரத்தை எப்போது காணலாம்? 

வடக்கு கீழ்வானத்தில் இரவு 10 மணிக்கு இந்த வால் நட்சத்திரம் எழும். 

பிப்ரவரி 2 அன்று பூமிக்கு அருகே வரும்.

பிப். 10-12க்கு இடையில் புதன் கோளுக்கு அருகே செல்லும்.

தொலைநோக்கி மூலம் இதைக் காணலாம், ஆனாலும் தொலைவில் இருந்து இருட்டான பகுதியிலிருந்து வெறும் கண்களாலும் காண முடியும். 

”தற்போது இந்த வால் நட்சத்திரம் வடக்கு கீழ் வானத்தில் இரவு 10 மணிக்கு எழுகிறது,” என்று அர்விந்த் பரஞ்ச்பே கூறுகிறார்.

அவர், “காலை 11 மணி வரை இதைப் பார்க்க முடியும். இதை தொலைநோக்கிகள் வாயிலாகக் காணலாம்,” என்கிறார். 

தற்போதைக்கு ஒரு சிலர் மட்டுமே இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்த்துள்ளனர். ஏனெனில், இந்த வால் நட்சத்திரம் எதிர்பார்த்ததைவிட பிரகாசமாக இல்லை என்று பரஞ்ச்பே கூறுகிறார். 

“வால் நட்சத்திர விஞ்ஞானிகள் அவற்றை அடிக்கடி பூனைகளுடன் ஒப்பிடுகின்றனர். அவை எப்படி செயல்படும் என்பதே உங்களுக்குத் தெரியாது,” என்கிறார் அவர்.

எனினும், இருட்டான பகுதிகளிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தைக் காண நீங்கள் முயற்சி செய்யலாம்.

வால் நட்சத்திரங்கள் ஏன் முக்கியமானவை?

நமது சூரிய குடும்பத்தின் முதன்மையான அங்கமாக விளங்குபவை வால் நட்சத்திரங்கள். 

அதாவது, வால் நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வு சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பற்றிய தகவல்களை வழங்க முடியும். இது பிரபஞ்சத்தைப் பற்றிய பல ரகசியங்களை வெளிப்படுத்தும்.

வால் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வு அவசியம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவின் சிக்சுலுப் பகுதியில் ஒரு பெரிய எரிமலை சரிந்து, இன்றும் இருக்கும் ஒரு பெரிய பள்ளத்தை விட்டுச் சென்றது.

ஒரு கோட்பாட்டின் படி, இந்த வெடிப்பு டைனோசர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. சில விஞ்ஞானிகள் பூமியில் விழுந்த பெரிய பாறை ஒரு சிறுகோள் அல்லது வால் நட்சத்திரம் என்று நம்புகிறார்கள்.

வால் நட்சத்திரங்கள் பூமிக்கு தண்ணீரைக் கொண்டு வந்ததாகவும் அதிலிருந்து உயிர்கள் உருவானதாகவும் சிலர் நம்புகிறார்கள்.

சில அறியப்பட்ட வால் நட்சத்திரங்கள்

ஹாலி வால் நட்சத்திரம்: 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இந்த வால் நட்சத்திரம் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக உள்ளது. அதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். வெவ்வேறு கலாசாரங்கள் வெவ்வேறு காலங்களில் அதைப் பதிவு செய்ததாகத் தெரிகிறது.

ஷூமேக்கர்-லெவி: இந்த வால் நட்சத்திரம் வியாழனுடன் மோதி ஜூலை 1994இல் அழிந்தது.

ஹெல்-பாப் வால் நட்சத்திரம்: 1997ஆம் ஆண்டில் இந்த வால் நட்சத்திரம்தான் அன்றைய சூடான விவாதப்பொருள். 

டெம்பிள் டர்ட்டிள் வால் நட்சத்திரம்: 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் இந்த வால் நட்சத்திரம் விட்டுச் செல்லும் குப்பைகள் பூமியில் விண்கல் பொழிவை ஏற்படுத்துகின்றன.

Source : BBC.Com

பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம் Link












Thursday, January 26, 2023

நேரு நினைவுக் கல்லூரியில் குடியரசு தின விழா

நேரு நினைவுக் கல்லூரியில் குடியரசு தின விழா.








 புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 74 ஆவது குடியரசு தின விழா இன்று கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பொன் பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு குடியரசு தின விழா கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் கல்லூரி தலைவர், கல்லூரி செயலர், துறைத்தலைவர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 விழாவில் அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை முகாமில் கலந்து கொண்ட தேசிய மாணவர் படை வீரர்களுக்கு கல்லூரி முதல்வர் அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.































இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...