Tuesday, February 28, 2023

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா-நிலவை முதல் முதலில் தொலைநோக்கியில் கண்டு வியப்பு.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நேரு நினைவுக் கல்லூரியில் நிலா திருவிழா-நிலவை முதல் முதலில் தொலைநோக்கியில் கண்டு வியப்பு.


தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில 25.02.23 மாலை NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் இயற்பியல் துறை சார்பில் நிலா திருவிழா  தொடங்கப்பட்டது. தேசிய அறிவியல் நாள் (National Science Day) பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.


இந்த நிலா திருவிழா நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர் பொன்பெரியசாமி தொடங்கி வைத்து, விண்வெளி பற்றிய பல அதிசய நிகழ்வுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதை தொலைநோக்கிய வழியாக கண்டு களித்து அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். 
கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள்  28.02.23ல் நிலவின் இயக்கம், நட்சத்திரத்தில்  நிலவு பயணம் செய்யும் குறித்தும் எடுத்துரைத்து நிறைவு செய்து வைத்தார். கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர்மு. மீனாட்சி சுந்தரம், புத்தனாம்பட்டி சமூக ஆர்வலரான பேராசிரியர் முனைவர் சரவணன் நடேசன், முன்னாள் மாணவர் கோவிந்தராஜ், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் கபிலன், IQAC ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் உள்ளிட்ட பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். 



இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு  அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளிகோள், செவ்வாய் கோள்,  ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நான்கு நாட்களுக்கு 450 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். அனைவருமே முதல் முறையாக தொலைநோக்கி வழியாக நிலவு மற்றும் கோள்களை கண்டு களித்து வியப்படைந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருந்தது. இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் படிக்கும் மாணவன் தேவநாதன், ஆனந்தராஜா,  மற்றும்  பாஸ்கரன்  மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர்.



 




தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார், இந்திய வான் இயற்பியல் மையம், இந்திய வானியல்  சங்கம், தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், அறிவியல்பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகியவை இணைந்து தமிழகம் முழுவதும் 200 இடங்களில் இந்த நிலா திருவிழாவை நடத்தியது. 













































நிலவாகிய என்னை பற்றி சில தகவல்கள்.

  • நிலவாகிய நான் பூமியின் ஒரு இயற்கைத் துணைக்கோளாக உள்ளேன். 
  • நான் ஏறத்தாழ 4 . 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக பிறந்தேன்.
  • பூமியின் மீது செவ்வாய் கிரகம் போன்ற ஒரு கோள் மோதி ஏற்பட்ட துகளில் இருந்து நான் உருவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • நான் பூமியின் அளவில் மூன்றில் ஒரு பங்குதான் உள்ளேன்.
  • நான் சூரிய குடும்பத்தில் உள்ள 5 ஆவது மிகப்பெரிய துணைக்கோளும், 2 ஆவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆவேன்.
  • பூமியிலிருந்து நான் மூன்று லட்சத்து 84 ஆயிரத்து நானூற்றி மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளேன். 
  • என்னை நானே சுற்றவும் பூமியை வலம் வரவும் ஒரே நேரத்தை 29.5 நாட்கள் எடுத்துக் கொள்வதால் என் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியிலிருந்து நீங்கள் பார்க்க முடியும். 
  • என் ஈர்ப்புவிசை குறைவாக (1/6) இருப்பதால் பூமியில் 120 கிலோ உள்ள மனிதன் என் நிலா பரப்பில் 20 கிலோதான் இருப்பார். 
  •  என் மீது படும் சூரிய ஒளியை எதிரொளிப்பதால் நிலவொளி ஏற்படுகிறது.
  • என் மீது படும் சூரிய ஒளியில் 7.3 சதவீதத்தை மட்டுமே எதிரொளிக்கிறேன்.
  • என் நிலவொளி பூமியை வந்தடைய 1.3 நொடிகளாகிறது.
  • என் ஈர்ப்புவிசையால் கடல் அலைகள் உருவாகின்றன.
  • எனக்கு வளிமண்டலம் இல்லாததால் நீங்கள் பேசினால் கேட்காது.
  • என் நிலா பரப்பில் டைட்டானியம் கனிமம் அதிக அளவில் இருக்கிறது.
  • 1969-ல் ஜூலையில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், காலின்ஸ் மூவரும் அப்பல்லோ 11 மூலம் நிலவுக்கு வந்தனர். 
  • என் நிலாப்பரப்பில்  இறங்கிய முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங். 
  • பூமியைத் தவிர மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலவாகிய நான் தான் என்பதில் பெருமை கொள்கிறேன். 
  • நிலா பரப்பில்  முதலில் இறங்கி ஆய்வு செய்யப்பட்ட இடம் அமைதிக்கடல் என்று அழைக்கப்படுகிறது.
  • என் நிலாப்பரப்பில் உள்ள நீரை முதன் முதலாக கண்டறிந்தது  இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-1 என்ற செயற்கை கோளில் இருந்த எம்.3 என்ற கருவியாகும்.
  • நான் பூமியை விட்டு ஆண்டுக்கு 3.82±0.07 செமீ அளவில் விலகிச் சென்று கொண்டிருக்கிறேன். 

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...