விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் எதிர்கொள்ளும் பேராபத்து.. ஆய்வாளர்கள் வார்னிங்.
வெறும் 10 நாட்கள் என திட்டமிடப்பட்ட சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம், 50 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சுனிதா தசை மற்றும் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடலாம் என்று சொல்லப்படுகிறது.
பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.
இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை 'ஸ்டார் லைனரின்' பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும்.
இப்படி இருக்கையில், சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் விண்வெளியில் இருப்பதால் அவர் தசை மற்றும் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
விண்வெளியில் மனிதர்கள் அதிக நாட்கள் இருப்பதால் சில சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதில் முக்கியமானதுதான் எடையிழப்பு மற்றும் தசை மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு பிரச்னை.
விண்வெளியில் புவியீர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்கும். எனவே தசைகள், எலும்புகளுக்கு எடையை தூக்கும் வேலை கிடையாது. தசைகள், எலும்புகளின் பயன்பாடு குறைவதால் நாளடைவில் தசை நார் அளவு மற்றும் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் தசை செயல்பாடு பலவீனமடையும். எலும்பு விஷயத்திலும் இதுதான் நடக்கும். எலும்பு பலவீனமடைந்து, அது உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இது தவிர கண்களிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அதாவது விண்வெளியில் இருப்பதால் மூளை மற்றும் கண்களில் அழுத்தம் அதிகரிக்கும். இது மங்கலான பார்வை, இரட்டை பார்வை மற்றும் கண் திரிபு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது சுனிதா வில்லியம்ஸும் இந்த பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment