Friday, October 16, 2020

உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம். உணவின்றி அமையாது உலகு. உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16).

உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம். உணவின்றி அமையாது உலகு. உலக உணவு நாள் (World Food Day) இன்று (அக்டோபர் 16). 

உலக உணவு நாள் ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் தேதியன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூற ஐக்கிய நாடுகள் இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. இத்தாலியில் ரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் பொதுவாக உணவு, விவசாய அமைப்பென அறியப்படும் ‘ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் போஷாக்கினை அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும்,  விவசாயத்தையும்,   உணவுப் பொருட்கள் தயாரிப்பினையும், சந்தைப்படுத்தல்,  விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை போக்குவதற்காகவும் பாடுபடுகின்றது. இதன் இலச்சினையிலுள்ள fiat panis என்பதன் பொருளானது “ரொட்டி  ஆவது மனிதனுக்கு இருக்கவேண்டும்” என்பதாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனம் 1945 ஆம் ஆண்டு கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தலைமை அலுவலகமானது ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது.  ஆண்டு தோறும் ரோமில் உணவு விவசாய நிறுவன தலைமையகத்தில் பிரதான வைபவம் இடம் பெறுவது வழமையாகும். ஏப்ரல் 11,  2006ல் 190 அங்கத்துவ நாடுகளைக் கொண்டிருந்த இவ்வமைப்பில் தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் முதன்மை இலக்குகளை நோக்குமிடத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உதவிகளை அதிகரித்தல்,  இந்நாட்டு மக்களின்  போஷாக்கினை அதிகரித்தல், உணவு,  விவசாயம்,  காடுகள்,  மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல்,   இவை குறித்து அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல்,  உணவு மற்றும் விவசாயப் பிரச்சினைகளை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அவை தொடர்பாக பக்க சார்பற்ற கொள்கைகளை உருவாக்குதல் போன்றனவாகும். 

உலகளாவிய ரீதியில் உணவு விவகாரம் தொடர்பிலான ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய  அமைப்பின் 20வது பொது மாநாட்டில் அதாவது நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இத்தினம் சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வமைப்பின் ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் பிரேரணை ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது இந்நாள் கொண்டாடப்படுகிறது. நிதி நெருக்கடி,  தானிய நெருக்கடியைத் தீவிரமாக்கியது என்று ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகளும் நிபுணர்களும் குறிப்பிட்டிருந்தனர். குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து,  நிதி நெருக்கடியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியளித்து,  நெருக்கடியைக் கூட்டாகச் சமாளிக்குமாறு பல்வேறு நாடுகளுக்கும் இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் விளைவாக தானியப் பாதுகாப்பு நனவாக்கப்பட முடியும் என்று அது கூறியுள்ளது.

 

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உணவுகள் ஏஜென்சி அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்,  இதற்காக பாடசாலைக்கு அனுப்புதல்,  உடைகள் வாங்குதல்,  அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளதை இவ்விடத்தில் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். ஐ.நா. ஏஜென்சியின் சர்வதேச உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார்(2009) இது பற்றிக் கூறுகையில்,  உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதில் 20 நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும் என்றார். உலக அளவில் 2015ம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது பட்டினியால் தவித்து வரும் இந்த 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசர நடவடிக்கையாக மாறியுள்ளது. அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டியது காலத்தின் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உணவு கிடைக்காமலும்,  போதிய போசாக்கின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது என்பது விஞ்ஞான தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் இந்த யுகத்தில் ஆச்சரியப்பட வேண்டிய ஓர் தகவலாகும். அதே நேரம் பல பில்லியன் கணக்கான டாலர்களை சந்திரனையும், வான்வெளியையும் ஆராய மேற்குலக நாடுகள் செலவளித்துக் கொண்டிருக்கிறன. உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது. சோமாலியாவில்,  வன்முறையும்,  உள்நாட்டுப் போரும் நாட்டையே உருக்குலைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, சண்டையில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்த நாட்டில்,  ஒரு குடும்பம்,  தனக்குத் தேவையான உணவு,  குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளதெனவும், கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டாலர்களாக இருந்தது. அது இந்த செப்டம்பர் மாதம் 171 டாலராக அதிகரித்துள்ளதெனவும் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

 

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும்,  உடைகள் எடுப்பதையும் சோமாலியா மக்கள் விட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பலர் கிடைக்கிற உணவை சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்த நாட்டில்,  சத்தான உணவு கிடைக்காததால்,  ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது எனக்கூறப்படுகிறது. ஆப்பிரிக்கா முழுவதிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆப்பிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்கு பலியாகிக் கொண்டிருக்கிறது. கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய்விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் பட்டினி மற்றும் போசாக்கான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழ்ந்து போய் விட்டது. 1980ம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006ல் இது 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளில் இது இலேசான உயர்வைக் காட்டி நிற்கின்றது. ஆனால் போதுமானதாக இல்லை. 

உணவு உற்பத்தியை அதிகரித்தால் தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதும் பட்டினிச் சாவுகள் பெருமளவில் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது. கடந்த மூன்று வருடத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் உலகமானது அது உற்பத்தி செய்வதைவிட கூடுதலான அளவு நுகர்கிறது என்பது மட்டும் நிச்சயம்” என பான் கீமூன் குறிப்பிட்டிருந்தார். எண்ணெய் விலைகள் உயர்ந்தமை,  அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, இயற்கை அனர்த்தங்கள் என்பனவே உலக உணவு விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

 

உண்டிக் கொடுத்தோர்  உயிர்க் கொடுத்தாரே...

-புறநானூறு சொல்லும் புறக்கணிக்கப்பட முடியாத உண்மை.

உணவு மனிதனின் மிக மிக அத்தியாவசியம். உணவின்றி அமையாது உலகு.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர். 

உற்பத்தியைப்  பெருக்கத்  தெரியாமல், நிலங்களை முழுமையாய் பயன்படுத்த அறியாமல் இருந்த  சமூகங்களின் வளர்ச்சியில், உணவின் தேவைக்காக நாடுகள் அனைத்திலும் நடந்த போர்களின் செய்திகள்  வரலாற்றுப் பக்கங்களில் பதிந்து கிடக்கின்றன. ஆனால் இன்று அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் விவசாயத்தில் எத்தனை எத்தனை முன்னேற்றங்கள். இருந்தபோதும் வறுமை, பஞ்சம், உணவுப் பற்றாக் குறை ஏன் இருக்கின்றன? அன்றாடம்  அன்னத்திற்கு அலைவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதின் காரணம்? இந்த கேள்விகளுக்கு விடை கண்டறிய வேண்டியது மிக மிக அத்தியாவசியமானது-உணவைப்போலவே. இதன் காரணமாகத்தான் ஐக்கிய நாடுகள் சபை சார்பில்  இன்று ஆண்டுதோறும் உலக உணவு நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்விழிப்புணர்வு நிகழ்வுகள் என இன்று நடைபெறுவது வழக்கம். 

  

தற்போது காணப்படும் எரிசக்திப் பிரச்னைகளைப்போல் 2050ல் தோன்றும் உணவுப் பிரச்னை, அரசியலை நிலையற்றதாக மாற்றிவிடும்  என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. இந்த நூற்றாண்டின் மத்திக்குள் மக்கள் தொகை 30 சதவிகிதம் அதிகரித்து 9 பில்லியனாக மாறும் என்பது மக்கள் தொகைக் கணக்கீட்டாளர்களின்  மதிப்பீடு. அதன்படி வரும் உணவுத் தேவைகளை சமாளிக்க 70 சதவிகித உற்பத்தி அதிகரிக்கப்படவேண்டும். ஆனால் ஆண்டிற்காண்டு உணவு உற்பத்தியின் விழுக்காடு குறைந்துகொண்டே போகிறது. மேலும், விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உடல்பருமன் போன்றவை ஒன்றுடன் ஒன்று இணைந்த விஷயங்கள் ஆகும். ஏற்கனவே உலகளவில் எட்டில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களில் 75 சதவிகிதத்தினர் நடுத்தர வருவாய் நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கண்டறியப்படும் புதிய தொழில்நுட்பங்களும் எளிய, சிறு விவசாயிகளைச் சென்றடைவதில்லை. இந்த முறைகள் மாற்றப்பட்டு உணவுத் தேவைகளை சமாளிக்கும் புதிய நுட்பங்களும் கண்டறியப்படுதல் வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.

Source By: வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...