Sunday, November 8, 2020

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற தினம் இன்று (நவம்பர் 8, 1921).

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற தினம் இன்று (நவம்பர் 8, 1921).

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மார்ச் 14,1879ல் ஜெர்மனி நாட்டில் வுர்ட்டெம்பர்க் மாகாணத்தில் உள்ள உல்ம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஹேர்மன் ஐன்ஸ்டைன் மற்றும் தாயார் போலின் கோச். இவரது தந்தை நேர்மின்னோட்டம் மூலம் மின் உபகரணங்களை தயாரிக்கும் மின்வேதியியல்(electrochemical)  சார்ந்த தொழிற்சாலையை நடத்தி வந்தார். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். 

சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தார். இப்படித்தான் ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது மாமா, ''உன் மகன் ஆல்பர்ட்டைப் பார், எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவன், ஓர் ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் என்று நக்கலாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்,  ஐன்ஸ்டீன் அன்னைக்குக் கோபம் தலைக்கு மீதேறிவிட்டது. எந்தத் தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பதுபோல, தன் தம்பியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''அவன், ஒரு சிறந்த சிந்தனையாளன், அறிவாளி அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாகத் திகழப்போகிறான் என்றார், முகத்தில் அடித்ததுபோன்று. 

ஐன்ஸ்டீன் அன்னை சொன்னது, நூற்றுக்கு நூறு உண்மை.  ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர். சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார். அழுக்கு ஆடையைப் பல நாள்கள்கூட அணிந்திருப்பார். வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம்வருவார். சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் வெளியே செல்வார். மறுமண மனைவி எல்ஸாவின் பேரிலேயே, அவர் நல்ல ஆடைகளை அணிவார். அப்படிப்பட்ட அந்த எளிமையான மாமேதை, ஓரிடத்துக்கு ஒருமுறை சொற்பொழிவாற்றச் சென்றபோது அவருடன், அவர் மனைவி எல்ஸா செல்ல முடியவில்லை. ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்தார். இந்தப் பெட்டியில் நல்ல உடைகள் வைத்திருக்கிறேன், சொற்பொழிவுக்குச் செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்துகொள்ளுங்கள் என்றார்.

 Albert Einstein GIFs | Tenor

தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்ஸா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கித் திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆம், அவர் வைத்த ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்ஜா, தம் கணவரிடம் ஏன் இந்த ஆடைகள் அடுக்கிவைத்தபடியே இருக்கின்றன, அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளவில்லையா  என்றார். எல்ஸா கேட்டதைக் கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம், அடடா, எனக்கே மறந்தே போய்விட்டது நீ கோபித்துக்கொள்ள வேண்டாம் என்றார். அது இருக்கட்டும் எனக்கு ஒரு சந்தேகம் என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். எல்லோரும் என் பேச்சைக் கேட்க வருகிறார்களா அல்லது என் ஆடையைப் பார்க்க வருகிறார்களா என்பதே அது. பாவம் எல்ஸாவால் அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. 

ஐன்ஸ்டீனுக்கு முன்புவரை வெளி மற்றும் காலம் ஆகிய இரண்டும் தனித்தனியானவை, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்றே கருதப்பட்டு வந்தன. சுவீஸ் காப்புரிமை அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக பணியாற்றிய 26 வயதேயான இளைஞரான ஐன்ஸ்டீன் முன்மொழிந்த 3 கண்டுபிடிப்புகள் இயற்பியல் உலகையே புரட்டிப்போட்டது. நியூட்டனுடன் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட இயற்பியலின் புரட்சி சகாப்தம் ஐன்ஸ்டீனினால் தலைகீழாகிப் போனது. ஒளியின் வேகம் குறித்து இயற்பியலில் நிலவிய கருத்து மோதல்களுக்கு காலம், வெளி, நிறை (Mass) மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்ற புரிதல் தான் தீர்வாகும் என்று ஐன்ஸ்டீன் விளக்கினார். இதுவே சிறப்பு சார்பியல் கோட்பாடு தோன்ற அடிப்படையாக இருந்தது. 

Photoelectric effect on Make a GIF

ஓளியானது உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே (Packets) (Quanta) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது. ஒளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த நடத்தைக்கான சமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையோடு முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும் முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்ற கருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கான ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும், நவம்பர் 8, 1921ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு வியந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பெளதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு சரியெனவும் ஒளிச் சொட்டு சாத்தியமெனவும் ஏற்றுக்கொண்டனர்.                               


                                     

சக்திச் சொட்டுப் பொறிமுறையினைத் தோற்றுவித்தவர்களால் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுத்தப்பட்ட கருதுகோளான ஒளியின் அலைத்-துகள் இரட்டைத்தன்மை (wave-particle duality) அதாவது பெளதிகத் தொகுதிகள் அலைத்தன்மை, துகள் தன்மை ஆகிய இரு வேறுபட்ட இயல்புகளையும் காட்டவல்லவை என்ற கருத்தினைச் சக்திச் சொட்டுக் கொள்கை வலியுறுத்தியது. சக்திச் சொட்டுப் பொறிமுறை விருத்தியடைந்த பின்னரே ஒளி மின் விளைவு தொடர்பான முழுமையான தெளிவு பெறப்பட்டது. அண்டவியல், அணுவியல், குவாண்டம் எந்திரவியல், ஒளிமின் விளைவு எனப் பல துறைகளில் விளக்கங்களை தந்தவர். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

 Einstein Would Jump for Joy: 1st Image of Light as a Particle and a Wave! |  Physics, Light wave, Colored light therapy

கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்த ஐன்ஸ்டீனிடம்அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ''நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்'' என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், ''தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான் என்றார், அடக்கத்துடன். அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது என்று சொன்ன அந்த மாமேதை, கடைசிவரை அதேவழியில் பயணித்தார். மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது என்று வாழ்ந்து, வரலாற்றிலும் இடம்பிடித்தார்.

 Albert Einstein

ஏப்ரல் 17, 1955ல், ஐன்ஸ்டீன் அடிவயிற்றின் அரோடிக் அனரிசைம் ஏற்பட்டதன் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சைக்கு ஐன்ஸ்டீன் மறுத்துவிட்டார். நான் விரும்பும் போது செல்ல விரும்புகிறேன். செயற்கை முறையில் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதில் சுவாரசியம் இல்லை. என்னுடைய பங்கை நான் செய்திருக்கிறேன், இது போவதற்கான நேரம், நான் அதை நேர்த்தியாக செய்வேன்" என்றார். இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஏப்ரல் 18, 1955ல் தனது 76வது  அகவையில் பிரின்ஸ்டன், நியூ ஜெர்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது மூளையானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னர் அகற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அதிகமான அறிவே இவ்வாய்வுகளுக்குக் காரணமாகும். ஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த செயலாக்க மூளையின் பகுதிகள் பெரிதாக இருக்க, பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாக இருந்தன என அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்தன. ஏனைய ஆய்வுகள் ஐன்ஸ்டீனின் மூளையின் நரம்புப் பசைக் கல எண்ணிக்கை அதிகரித்திருந்தது எனத் தெரிவித்தன.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...