சூரியப் புயலால் டிசம்பர் மாதம் 16 முதல் உலகம் 6 நாட்கள் இருளில் மூழ்குமா?
சூரியப் புயலால் உலகம் 6 நாட்கள் இருளில் மூழ்கப்போவதாக வெளியான தகவல் குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். சூரியனில் அவ்வப்போது புயல் வீசுவது உண்டு. இதனால் மற்றக் கிரகங்களுக்கு பாதிப்பு நேரும் என்று தகவல்கள் பரவுவது வழக்கம். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தேதி சூரியக் கிரகத்தில் புயல் வீசத் தொடங்கி 22–ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியதாக ஒரு தகவல் தற்போது வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.
கடந்த 250 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என்றும், இதனால் சூரிய மண்டலத்தில் புயல் வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம்பிவிடும் என்றும் அந்தத் தகவல் கூறுகிறது. மேலும், வானில் தூசிகள் நிரம்பும் போது மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்துவிடும். இதன் காரணமாக டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என்றும் அந்த தகவல் பீதியைக் கிளப்பியுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் புயல் வீசுவது சூரியனில் மட்டும்தான். வானவெளியில் அல்ல. இதனால் பாதிப்பு பூமிக்கு வரவே வராது என்று நாசா விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும், சூரிய மண்டல புயல் பூமி அருகில் வராது. பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் சூரிய புயலை நினைத்து மக்கள் பயப்பட வேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னையின் பிர்லா கோளரங்க முன்னாள் செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறுகையில், "சூரியன் அதிக வெப்பத்தை எப்போதும் கக்கிக்கொண்டே இருக்கிறது. அது வெகு தூரத்தில் இருப்பதால் பூமிக்கு பாதிப்பு இல்லை. சூரியனின் மத்தியில் ஒரு கோடியே 50 லட்சம் டிகிரி சென்டிகிரேடு வெப்பம் உள்ளது. அதன் வெளிவிளிம்பு பகுதியில் 5 ஆயிரம் செ.கிரேடு வெப்பம் உள்ளது. சூரியனில் புயல் ஏற்படும் போது வெப்பக்காற்று வீசும். அது பூமியை நோக்கி வரும்.
கடந்த 2005ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சூரியப் புயல் ஏற்பட்டது.அதே போல தற்போதும் நிகழும். இதனால் பாதிப்பு பூமிக்கு ஏற்படும் என்பது வெறும் வதந்தி. தவறான தகவல். பூமிக்கு மேல் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்களைத் தாண்டித்தான் இந்த சூரியப் புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரியப் புயல் வேகத்தின் தாக்கத்தைக் குறைத்து விடும். மேலும் பூமியைச் சுற்றி காந்த வளையம் உள்ளது. இந்தச் சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும். எனவே பூமிக்கும் மக்களுக்கும் இந்த சூரிய புயலால் எந்த வித ஆபத்தும் வராது" என்றார்.
- தேவராஜன்.
Source : vikatan.com
No comments:
Post a Comment